'இந்த பூமி மிகவும் அதிசயமானது. எதிர்காலத்தின் மீதான பூமியின் தாக்கம் அசாத்தியமானது. பூமிக்கு மேலாக எந்த ஒரு கட்டுமானம் எழுந்தாலும், அதனை பூமிதான் தாங்க வேண்டும்.
பூகம்பம் உள்ளிட்ட எந்த இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல், பூமியே அதன் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்படியாக நம் கட்டுமானங்களுக்கேற்ப பூமியில் மாறுதல்கள் செய்ய வேண்டும். ஆனால், அதில் பல அசாதாரண சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்வதிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது' என்கிறார் பேராசிரியர் மாதவி லதா.
செனாப் ரயில்வே பாலத்தின் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றியவர் என்று குறிப்பிடப்படும் டாக்டர் ஜி. மாதவி லதா, தனது தொழில் நுட்பத் திறமையால் அகில இந்திய அளவில் கவனம் ஈற்றிருக்கிறார். அவர் கூறியது:
'பூகம்பம், வெடிகுண்டுத் தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் 'பொறியியல் அதிசயம்' என்று அழைக்கப்படும் செனாப் ரயில்வே பாலம் கட்டும் பணி 2004 -இல் தொடங்கப்பட்டது. சிமென்ட் தூண்கள் அமைத்து அவற்றின் மேல் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து சர்ச்சை எழுந்ததால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில்வே நிர்வாகம் செனாப் ரயில் பாலக் கட்டுமானப் பணியை 'ஆஃப்கான்ஸ்' என்ற கட்டுமான நிறுவனத்துக்கு அளித்தது. அவர்களுக்கு நான், 'பாறைப் பொறியியல் வல்லுனர்' என்ற முறையில் ஆலோசகராக இருந்தேன்.
செனாப் ரயில் பாலத்தைக் கட்டுவதில் இமாலயப் பிராந்தியத்தின் புவியியல் மாறுபாடுகள், கடுமையான தட்ப வெப்ப நிலை, போக்குவரத்து வசதிகள் இல்லாமை, உள்வாங்கும் மணல்பகுதி, கடுமையான பாறைகள், பூகம்ப அபாயம் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
செனாப் நதியிலிருந்து 359 மீ. உயரத்தில் பாலம் கட்ட வேண்டும் என்றால் அது எவ்வளவு ஆபத்தானது? வழக்கமான பாணியில் கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பாகத் திட்டமிட்டு, அதனை செயல்படுத்துவது என்பது இதில் சாத்தியமில்லை.
காரணம் அவ்வப்போது புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆராய்ச்சி மூலமாகவும் தொழில்நுட்பத்தின் மூலமாகவும் அவை ஒவ்வொன்றையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்தோம். இதனை 'டிசைன் ஆஸ் யு கோ' என்று சொல்லுவார்கள். செனாப் நதி ரயில் பாலம் கட்டியபோது எதிர்கொண்ட சவால்கள், அவற்றை சமாளித்த விதம் குறித்து 'இந்தியன் ஜியோடெக்னிகல்' இதழில் விரிவாக எழுதி இருக்கிறேன்.
17 ஆண்டுகள் இந்த ரயில் பாலம் கட்டும் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட என்னை சமூக ஊடகங்களில் புகழ்கின்றனர். என்னைத் தேவை இல்லாமல் பிரபலமாக்காதீர்கள். இந்தப் பாலத்தைத் திட்டமிட்டு, வெற்றிகரமாகக் கட்டி முடித்த பெருமை இந்திய ரயில்வேயையும் ஆஃப்கான்ஸ் நிறுவனத்தையும் சாரும். இந்த மாபெரும் பாலத்தை கட்டி முடிப்பதற்கு ஆயிரக்கணக்கான 'பாடப்
படாத கதாநாயகர்கள்' பங்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் 'சல்யூட்' என்கிறார் மாதவி லதா.
யார் இந்த மாதவி லதா?
ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட பிரகாசம் மாவட்டத்தில் ஏடுகுண்டலபாடு என்ற குக்கிரமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நான்கு குழந்தைகளில் மூத்தவர். கிராமத்து அரசு பள்ளியில் பயின்றவர். 'மருத்துவராக வேண்டும்' என்பது அவரது கனவு. நிதி வசதி இல்லாதால், அவரது பெற்றோர் பொறியியல் சேர்ந்து படிக்கும்படி கூறினர்.
ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். கட்டடவியல் முடித்தார். பின்னர், வாரங்கல் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் எம்.டெக். பட்டமும் , அதற்கடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன் பின்னர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் அவர் 'பாறை பொறியியல்' குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். தற்போது ஒரு கருத்தரங்கில் பங்கேற்க ஸ்பெயின் சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.