
உலகத் திரைப்படத் துறையில் தமிழ்த் திரைப்படத் துறையானது தனித்துவம் மிக்கது. தமிழ்த் திரையுலகத்தினர் இந்திய அளவில் பேசப்படுகின்றனர்.
பழம்பெரும் நடிகர்களின் நடிப்பையும், அவர்களின் ஆளுமை மற்றும் செயல்திறன்களையும் நினைவுகூர்ந்து பேசுவோர் இன்றும் உண்டு. அவ்வாறு சில நிகழ்வுகளை அறிவோம்.
பத்ம விருதுகள் பெற்ற தமிழ்த் திரையுலகினர்:
பத்ம விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன். அவர் 1966-ஆம் ஆண்டில் 'பத்மஸ்ரீ' விருதையும், 1984-இல் 'பத்மபூஷண்' விருதையும் பெற்றார்.
நடிகர் எம்.கே.ராதா 1973-இல் 'பத்மஸ்ரீ' விருதையும், 1990-இல் நடிகர் கமல்ஹாசன் 'பத்மஸ்ரீ' விருதையும், 2000-இல் நடிகர் ரஜினிகாந்த் 'பத்மபூஷண்' விருதையும் 2016-இல் 'பத்மவிபூஷண்' விருதையும், 2009-இல் நடிகர் விவேக் 'பத்மஸ்ரீ' விருதையும் , 2019-இல் நடிகர் பிரபுதேவா 'பத்மஸ்ரீ' விருதையும் பெற்றனர்.
நடிகர் விஜய்காந்தின் மறைவுக்குப் பின்னர், 2024-இல் அவருக்கு 'பத்மபூஷண்' விருது வழங்கப்பட்டது.
நடிக்க மறுத்த பி.சுசீலா:
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒரு படத்தில் பி.சுசீலாவை மீரா வேடத்தில் நடிக்க அழைத்தார். இதற்கு மறுத்த பி.சுசீலா, பல ஆண்டுகளுக்குப் பின்னர் 'மனதைத் திருடிவிட்டாய்' படத்தில் பாடகி பி.சுசீலாவாகவே தோன்றினார்.
'தங்கப் பதக்கம்' உருவானது எப்படி?
'துக்ளக்' இதழில் திரை விமர்சகராக இருந்த மகேந்திரன், அலுவலகத்தில் தினமும் காலை 7 முதல் இரவு 9 மணி வரை பணியாற்றுவார். ஒருநாள் பத்திரிகையை வாசிக்கும்போது, ஒரு ஆங்கிலப் படத்தின் போஸ்டரை பார்த்து ஆச்சரியப்பட்டார். அந்த போஸ்டரில் ஹீரோ ஒற்றைக் கண்ணுடன் குதிரை மீது அமர்ந்திருப்பதைப் போன்று இருந்தது. அதைப் பார்த்த மகேந்திரனுக்கு கதை தோன்றியது. பின்னர், அதை திரைக்கதையாக மாற்றும் எண்ணம் ஏற்பட்டது.
ஒருநாள் சோ அலுவலகத்துக்குத் தாமதமாக வந்தார். அவரை சந்திக்கக் காத்திருந்த நடிகர் செந்தாமரையும், அவரது நண்பர் கண்ணனும் மகேந்திரனிடம் தங்களுக்கு ஒரு கதை எழுதித் தரும்படி கேட்டனர். உடனே சம்மதித்த மகேந்திரன் தன்னிடம் இருந்த ஒன்லைனை சுவாரசியமாகச் சொன்னார். ஒரு நேர்மையான காவல் அலுவலர் நீதியை நிலைநாட்ட தனது மகனை கொன்றுவிடுகிறார் என்ற கதையைக் கேட்ட இருவரும் ஏற்றுக் கொண்டதுடன், திரைக்கதையை எழுதுமாறும் கூறினர்.
அப்போது அங்கு வந்த சோவிடம் இருவரும் நடந்ததைக் கூறினர். உடனே சோவும் மகேந்திரனுக்கு தனி அறையை ஒதுக்கி, இரவு 9 மணிக்கு மேல் அலுவலகப் பணிகள் முடிந்தவுடன் திரைக்கதையை எழுதும்படி கூறினார்.
அப்படி எழுதப்பட்டதுதான் 'தங்கப் பதக்கம்' திரைப்படம். முதலில் இந்தக் கதையில் செந்தாமரை கதாநாயகனாக நடிக்க, 'இரண்டில் ஒன்று' என்ற பெயரில் மேடை நாடகமாக நடத்தப்பட்டது. கண்ணன் இயக்கினார். இதைப் பார்த்த சிவாஜி கணேசன் நாடக சபா மூலம் அதை அரங்கேற்றினார். நூறு நாள்களுக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டதால், சிவாஜி கணேசன் இந்தப் படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார்.
கண்ணதாசன் பாடல் எழுதிய முதல்படம்...
'கன்னியின் காதலி' படம்தான் கவியரசு கண்ணதாசன் முதன்முதலில் பாடல் எழுதிய படம். இதில், இரண்டு பாடல்களுக்கு சி.ஆர். சுப்பராமன் இசை
அமைத்திருப்பார். திருச்சி லோகநாதனும், எம்.எல்.வசந்தகுமாரியும் பாடியிருப்பார்கள்.
சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்த கடைசிப் படம் 'தேவதாஸ்' . இதற்கு இசையமைத்தபோது, அவர் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது 28-ஆம் வயதிலேயே இறந்தார். அவரிடம் உதவியாளர்களாக இருந்த மெல்லிசை மன்னர்கள் பலவற்றுக்கு இசையமைத்தனர். இருந்தாலும், இசைத்தட்டுகளில் தங்களது குரு சி.ஆர்.சுப்பராமன் பெயரையே பதிவு செய்யுமாறு கூறினர்.
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'பாட்டும் நானே... பாவமும் நானே....'
நடிகர் சிவாஜி கணேசனை வைத்து, 'சிவலீலா' எனும் படத்தை பிரபல தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு தயாரித்தார். அது தொடரவில்லை. அதையே 'திருவிளையாடல்' என்ற பெயரில் ஏ.பி.நாகராஜன் எடுத்தார். 'சிவலீலா' படத்துக்காக, கவி. கா.மு.ஷெரீப் எழுதிய 'பாட்டும் நானே.. பாவமும் நானே...' என்ற பாடலையும் ஏ.பி.நாகராஜனிடம் கொடுத்துவிட்டார்.
அந்தப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றது. படம் வெளியானபோது, அந்தப் பாடல் கண்ணதாசன் எழுதியதாக, அவருக்குத் தெரியாமலேயே டைட்டிலில் வந்தது. இதனால் வருத்தப்பட்ட எம்.ஏ. வேணு, 'என்ன இப்படி செய்துவிட்டீர்களே' என்று கேட்டார்.
பின்னர், படக் குழுவினர் கவி.கா.மு.ஷெரீப்பை நேரில் சந்தித்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து, ஐந்தாயிரம் ரூபாயை கொடுத்தனர். ஆனால் ஷெரிப்போ, 'நான் ஒருமுறை எழுதிய பாடலுக்கு ஒருமுறைதான் ஊதியம் வாங்குவேன். ஏற்கெனவே இந்தப் பாடலுக்கு முந்நூறு ரூபாய் வாங்கிவிட்டேன். எனது பாடலை மக்கள் ரசிக்கிறார்களே அதுவே போதும்' என்று கூறிவிட்டார்.
வாலியை வளர்த்தோர்...
கவிஞர் வாலி பிறந்தவுடன் 'நோயோடு பிறந்த இந்தக் குழந்தை தேறுமா?' என்பதில் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. பக்கத்து வீடு ஒரு இஸ்லாமியக் குடும்பம். அவ்வப்போது குழந்தையை அன்போடு அழைத்துச் சென்று, சீராட்டி வளர்த்து தேறவைத்துவிட்டனர். இதன் காரணமாக 'என்றும் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவன்' என்று பல பேட்டிகளில் வாலி கூறியிருக்கிறார்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.