சித்தாரே ஜமீன் பர் - அமீர்கான் சொன்ன புது தகவல்!
அமீர்கானின் 'சித்தாரே ஜமீன் பர்' படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 20-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆர்.எஸ். பிரசன்னா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.'லால் சிங் சத்தா' படத்தின் தோல்வி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக இப்படத்திலிருந்து முதலில் விலக முடிவு செய்திருந்தார் அமீர்கான். அதன் பிறகு, இப்படத்தை ஹிந்தியில் ஃபர்ஹான் அக்தரையும், தமிழில் சிவகார்த்திகேயனையும் வைத்து எடுக்க முடிவு செய்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தத் தகவலை அமீர்கான் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், ' 'லால் சிங் சத்தா' படத்திற்குப் பிறகு நான் மனமுடைந்து போனேன், ஏனெனில் நான் அந்தப் படத்தை மிகவும் விரும்பினேன். இப்போதும் நான் அதை விரும்புகிறேன், அது மிகவும் அழகான படம் என்று நினைக்கிறேன்.
அதனால், வேறு ஒருவரை வைத்து 'சித்தாரே ஜமீன் பர்' படத்தை எடுக்குமாறு பிரசன்னாவிடம் சொன்னேன். என்னைக் கட்டாயப்படுத்த விரும்பாததால் தயாரிப்பாளராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் படத்தில் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயனை இறுதி செய்தார். அதன் பிறகு, 'நான் ஏன் இந்தப் படத்தை செய்யவில்லை? இது மிகவும் நல்ல ஸ்கிரிப்ட், ஆயிற்றே என்ற சிந்தனை எழுந்தது. ஆனால், நான் அவர்களிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை.
ஒரு வாரம் கழித்து, எல்லாம் முடிவான பிறகு, நான் இறுதியாக என் உணர்வுகளை தெரியப்படுத்தினேன். ஆனால், பிரசன்னாவிடம் எந்த நடவடிக்கையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினேன். அவர், 'இது உங்களுடைய படம், நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.
நீங்கள் என்னை இயக்குநராக மறுக்க முடியாது. இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று கூறினார். நான் ஒரு தடுமாற்றத்தில் இருந்தேன், ஏனெனில் ஃபர்ஹானும் இந்தக் கதையைக் கேட்டு உற்சாகமாக இருந்தார், மேலும் அதை வித்தியாசமாகச் செய்யவும் விரும்பினார்.
இறுதியாக, நான் ஃபர்ஹான் மற்றும் சிவகார்த்திகேயனிடம் இந்தப் படத்தில் நானே நடிப்பதாக இருக்கிறேன். நீங்கள் இந்த முடிவை ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பெருந்தன்மையானவர்கள், ஏனெனில் நீங்கள்தான் முதல் தேர்வு' என்று கூறினர். அதன்பிறகு, நான் இறுதியாக படத்திற்குத் திரும்பினேன்.' என்று தெரிவித்திருக்கிறார்.
நிவின், லாரன்ஸ், மூன்று ஹீரோயின்கள்!
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் கதையை வைத்து பாக்யராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி ஆகியோர் இணைகிறார்கள். 'பென்ஸ்' படம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் பாக்யராஜ் கண்ணன். 'நாங்கள் ஒரு புதிய நடிகரைத் தேர்ந்தெடுக்க விரும்பினோம். அவர் வழக்கமான வில்லன் பாணியில் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்தோம்.
இந்தப் படத்தில் ரசிகர்கள் ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நிவின் பாலியை எதிர்பார்க்கலாம். இந்த கதாபாத்திரம் அவரது முந்தைய கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். நிவின் அடுத்த மாதம் படப்பிடிப்பில் இணைகிறார். அவரே படத்தில் டப்பிங் செய்யவிருக்கிறார். வேற்று மொழி நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்கள் படத்திற்கு ஒரு தனித்துவமான நிறத்தைச் சேர்க்கிறார்கள்.
அவர் நெகடிவ் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். நிவின் மற்றும் லாரன்ஸ் தவிர, மற்றொரு நட்சத்திரமும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். பென்ஸ் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறோம். மங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
லோகேஷும் நானும் நண்பர்கள்.நான் மற்றொரு படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, இந்தக் கதைக் குறித்த யோசனையைச் சொன்னார். அதன் முன் தயாரிப்புக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. அதனால் இந்தப் படத்தை எடுத்தேன். அடிப்படைக் கதையை லோகேஷ் உருவாக்கியிருக்கிறார். நான் அதை விரிவாக்கி, திரைக்கதையை எழுதியிருக்கிறேன்.' என்று கூறியிருக்கிறார்.
தீபிகாவுக்கு மணிரத்னம் ஆதரவு!
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே ஒப்பந்தமாகி இருநதார். ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி படத்தில் நடிக்கவந்திருக்கிறார். தீபிகா படுகோனே சந்தீப் ரெட்டி வங்காவின் இத்திரைப்படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து பல கூறப்பட்டது.
அதில், தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிற காரணத்தினால் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக தனது பணி நேரத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார், இந்த பணி நேரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீபிகா படுகோனே நினைத்தபடி நடக்காததால்தான் அவர் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து விலகினார் என்று கூறப்பட்டது.
'தக் லைஃப்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது மணிரத்னத்திடம், 'தீபிகா படுகோனே சினிமாவில் தன்னுடைய பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்துக்கொள்ளக் கேட்பது சரியானதா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது.தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாகவே அவர் பதில் அளித்திருக்கிறார். இந்தக் கேள்விக்கு மணி ரத்னம், 'அது ஒரு நியாயமான கோரிக்கை என்று நான் நினைக்கிறேன்.
அதைக் கேட்கும் நிலையில் அவர் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு இயக்குநராக இந்த விஷயத்தைக் கருத்தில் கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன். அவர் கேட்பது நியாயமற்ற விஷயமல்ல. தீபிகா படுகோனின் கோரிக்கை அதே நிலைமையில் இருக்கும் பலருக்கும் கதவுகளை திறந்து வைக்கும். இது ஒரு முழுமையான அடிப்படைத் தேவை. அதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.