நெய்வாசல் நெடுஞ்செழியன்

சாமிநாதன் வீடு வந்து சேர்ந்தபோது , இரவு மணி பதினொன்று. கதவைத் திறந்துவிட்ட கமலம், 'இவ்வளவு நேரம் என்ன செஞ்சீங்க?' என்று கேட்டவாறு பதிலை எதிர்பாராது சமையல் கட்டுக்குள் சென்றாள்.
நெய்வாசல் நெடுஞ்செழியன்
Published on
Updated on
8 min read

சாமிநாதன் வீடு வந்து சேர்ந்தபோது , இரவு மணி பதினொன்று. கதவைத் திறந்துவிட்ட கமலம், 'இவ்வளவு நேரம் என்ன செஞ்சீங்க?' என்று கேட்டவாறு பதிலை எதிர்பாராது சமையல் கட்டுக்குள் சென்றாள். மனைவிக்கு உடனடியாகப் பதில் சொல்லாது மாற்று உடையை உடுத்தி, புழற்கடை பக்கம் சென்றவன் மின் விளக்கைப் போட்டு தொழுவத்தில் அசைப் போட்டு கொண்டிருந்த மாடுகளையும், தூங்கிக் கொண்டிருந்த ஆடுகளையும் பார்த்தான்.

மர வியாபாரிக்கு மனைவியாய் வர பலரும் சம்மதிக்காதபோது, எட்டாவது பெண்ணாகப் பார்த்த கமலம் ஒப்புக் கொண்டதும், எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த அவள் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதித்ததும் ஆச்சரியத்தை அளித்தது. முதலிரவன்று அதை அவன் வெளிப்படுத்த சிரித்தாள்.

'இந்தப் படிப்பையா பார்த்துட்டு கேக்கிறீங்க? என்னை ஒத்த பெண்களெல்லாம் நிறைய படிச்சுட்டு வேலையில இருக்கிறாளுவ. எவ்வளவோ கெஞ்சியும் எங்கப்பா என்னை படிக்க விடலை. நிறைய படிக்க வெச்சா உசந்த படிப்பு படிச்ச மாப்பிள்ளையைத் தேடணும். நிறைய சீர்வரிசை செஞ்சு கல்யாணம் பண்ணணும். இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்கே போறதுன்னு படிக்க வைக்கலே?' என்று எதையும் மனதில் வைத்துகொள்ளாமல், வெகுளியாய் அவள் பதில் சொல்ல அவன் அவளின் மோவாயை பிடித்து தூக்கினான்.

'நான் படிக்க வைக்கிறேன் படிக்கிறியா?'

'கல்யாணம் பண்ணிட்டு காலேஜீக்கு போகலாம். பள்ளிக்கூடத்துக்குப் போனா கிண்டல் பண்ண மாட்டாங்களா? நான் இனிமே படிச்சு என்ன பண்ணப் போறேன். என்னை படிக்க வெச்சா உங்களுக்கு சோறாக்கிப் போடறதும் புள்ளை பெத்துக் கொடுக்கறதும் யாரு?' என்றவள் தொடர்ந்து, 'ஒண்ணு செய்யுங்க? எனக்கு ஆடு, மாடு வளர்க்கறதுன்னா ரொம்ப இஷ்டம். வீட்டு ஓரத்திலே இருக்கிற காக்காணி நிலத்திலே நெல்லு போடாம புல்லைப் போட்டா ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடாம கட்டிப் போட்டே வளர்க்கலாம். கொட்டில் முறைன்னு சொல்வாங்க. உங்களுக்கு சரின்னு பட்டா வாங்கிக் கொடுங்க?' என்றாள்.

'தினம் தினம் ஓய்வில்லாம வேலை செஞ்சுகிட்டே இருக்கணும் முடியுமா?'

'நமக்கு முன்னே வாழ்ந்தவங்க இப்படி யோசிச்சிருந்தா ஆடு, மாடு வளர்த்திருக்க முடியுமா? காடுதிருத்தி கழனி உருவாக்கியிருக்க முடியுமா?'

'புரியுது, ஆனா நான் காலையில புறப்பட்டுப் போனா மூனு மணிக்கு மேலத்தான் வீட்டுக்கு வருவேன். சாயங்காலம் பணம் வசூல் பண்ணப் போய்டுவேன். உனக்கு உதவி செய்ய முடியாதே!'

'உங்க வேலையை நீங்கப் பாருங்க? உதவிக்கு ஒரு பொம்பளையை வச்சிகிட்டு என்னால முடிஞ்ச வேலையை நான் பார்க்கிறேன். ஆளுக்கொரு வேலையை பார்த்தால்தான் உடம்பும் மனசும் நல்லாயிருக்கும். ஒருத்தரையொருத்தர் எதிர்பார்க்காம நாலுகாசு பார்க்கலாம். அதுக்குமேலே பணத்தோட அருமையும் புரியவரும்... பாருங்க?'

மனைவி கமலத்தின் யதார்த்தமான பேச்சு சாமிநாதனுக்குப் பிடித்துவிட அடுத்த இரு நாள்களுக்குப் பின்னர், சந்தைக்குச் சென்று இரண்டு வெள்ளாடுகளும் இரண்டு நாட்டு பசு கிடேரிகளும் வாங்கி வந்தான். அன்று வந்தது இந்த பதினைந்து வருடங்களில் முப்பது, நாற்பதாய் பெருகிநிற்கின்றன. தனது பராமரிப்பில் மூன்று, நான்கை மட்டும் வைத்துகொண்டு மற்றவைகளை வளர்ப்புக்கு விட்டாள். ஆடு, மாடுகள் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு வீட்டுக்கு எதிரில் வந்த மனையையும் அதனுடன் இணைந்திருந்த நிலத்தையும் வாங்கினாள். நிலத்தில் நெல்லும் மனையில் காய்கறிகளையும் பயிரிட்டாள்.

கமலத்தின் செயல்பாடு சாமிநாதனை பிரமிக்க வைத்தது. 'ஆடு, மாடு வளர்த்து ஒரு பெண்ணால் மனை வாங்க முடியும்போது தன்னால் முடியாதா?' என நினைத்தவன் தன் தொழிலில் உள்ள குறைகளைக் களைந்து 40 ஊர்களில் தன் மர வியாபாரத்தை விரிவுபடுத்தினான். விற்பனைக்கு வந்த மரங்களை வாங்கி அதன் பயன்பாட்டுக்கேற்ப, வீட்டு வேலைகளுக்கான மரங்களை சைஸாக அறுத்து மரவியாபாரிகளுக்கும், விறகு மரங்களை 'லாட்லாட்'ஆக திருப்பூருக்கும் அனுப்பி விற்றான். அதன்மூலம் கிடைத்த பணத்தையும் கையிருப்பு ரொக்கங்களையும் நிலத்திலும் மனையிலும் முதலீடு செய்தான். இதனால் 'சாமிநாதன்' என்ற அவனது இயற்பெயர் மாறி, 'மரச்சாமி' என்ற பெயர் நிலைத்தது.

கணவன், மனைவி உறவு பந்தத்தின் அடிப்படையிலானது என்றாலும், ஒருவரையொருவர் உணர்ந்து, உணர்த்தி உன்னதமடையச் செய்வதும்- அதன்மூலம் மற்றவர்களுக்கும் வாழ்க்கையை உணர்த்துவதும் காலகாலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளில் ஒன்றுதானே. அவனது வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத உடன்பிறந்தவன் பங்குகேட்டு வம்புக்கு வர, தர முடியாது என சாமிநாதன் எதிர்குரல் கொடுக்க, கமலம் தடுத்தாள்.

'உங்களுக்கு நானும், எனக்கு நீங்களும்தான் ஆதர்சமா இருக்க முடியும். மத்தவங்க மூணாவது மனுஷங்கதான். ஆனா அவரு யாரு உங்க தம்பி. உங்களை மாதிரி அவரை பாடுபாட வச்சிருந்தீங்கன்னா பங்கு கேட்கறதுக்கு பதிலா உங்கக் கூட இருக்கணும்னு நினைச்சிருப்பாரு. அவரை உட்கார்த்தி வச்சு சோறு போட்டீங்க? இப்போ உங்க வளர்ச்சியை நினைச்சு பொறுமுகிறார். பரவாயில்லை விடுங்க? உங்க குடும்பச் சொத்துல அவருக்குரியதை கொடுங்க? கூடவே ரெண்டு மாட்டை ஓட்டி விடுங்க? திறமையிருந்தா முன்னுக்கு வந்திடுவாரு. பிரச்னையும் வராது' என்று உறவையும் விடாது உரிமையையும் விடாது மனைவி பேசிய பேச்சு சாமிநாதனை சம்மதிக்கச் செய்தது.

சின்ன, சின்ன பிரச்னைகளைக் காரணம் காட்டி, புகுந்த வீட்டின் ஒட்டுறவை அறுத்துகொள்ளாதவளாகவும்,, பெரும் பிரச்னைகள் வரும்போது சண்டை போடாதவளாகவும் மனைவி கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும் பொறுப்பினை உணர்ந்து நடப்பவளாகவும், பிரச்னையின் கனபரிமாணம் புரிந்து அதற்கேற்ப வளைந்து கொடுப்பவளாகவும் கிடைப்பது பேரதிஷ்டம் என்றே கூற வேண்டும்.

திருமணத்துக்கு பிந்தைய வாழ்வு கணவன், மனைவி இருவருக்குமே சவாலானது. ஒருவரின் பலம், பலவீனத்தைப் புரிந்துகொண்டு அதன் நிறைகுறைகளைப் பொருள்படுத்தாது பொறுப்பை உணர்ந்து வாழ்க்கை நடத்துவதற்கான வழியைத் தேடிப் போனால் சவாலைத் தாண்டியே சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை உணர்ந்தவளாக, கணவன் தலைவாசலில் தெரிந்தது.

'கை- கால் கழுவிட்டு சாப்பிட வாங்க? இவ்வளவு நேரம் என்ன பண்ணினீங்க? முன்னேயே வந்துட்டதா முத்தையா அண்ணன் சொல்லிட்டுப் போனார்' என்றாள் கமலம்.

'ஒன்பதுக்கே வந்துட்டேன், அம்மன் கோயிலிலே கூட்டம் நடந்துச்சு' என்றான் சாமிநாதன்.

'பொறுப்பாளர்கள் மட்டுமே கலந்துக்கணும் ஊர் கூட்டம் நாளைக்குன்னு சொன்னாங்க?'

'பொறுப்பாளர்கள் கூட்டத்திலே கலந்து பேசினால்தானே நாளைக்கு மத்தவங்க முன்னாலே பேச முடியும். இரும்பு அடிக்கற இடத்திலே ஈக்கு என்னவேலை. துரும்பும் பல்குத்த உதவுமாச்சே அதான்கூப்பிட்டிருக்காங்க?'

'புதிர் போதும்... புரியும்படியா சொல்லுங்க?'

'அம்மாவாசை கழிச்சு திருவிழா வருதில்லே. திருவிழா முடிஞ்சவுடன் கோயிலைச்சுத்தி காம்பவுண்டு எடுக்கணுமாம். அதுக்காக கோயில் முன்னாலே இருக்கிற இலுப்பை மரத்தை விக்கிற முடிவுக்கு வந்திருக்காங்க?'

'நூறுவருஷ மரமாச்சே...'

'தாண்டியே இருக்கும். ஒரு பொக்கெ பொற

புரசல் இல்லாம சுத்தமா இருக்கும். அத்தனையும் வைரம்'

'வாங்கிட்டீங்களா?'

'பேசி முடிச்சு அட்வான்ஸ் பண்ணிட்டேன். அறுபதாயிரம் கேட்டாங்க? வெட்டி, வித்து எவ்வளவு கிடைக்குதோ, செலவு போக மீதியை அப்படியே தந்துடறேன்னு சொல்லியிருக்கேன்.'

'இலுப்பை மரம் என்னாத்துக்காகும்.'

'கோயில் வேலைகளுக்குப் பயன்படும். இப்போ இலுப்பை மரங்கள் கிடைக்கறதில்லே. முன்னெல்லாம் சிவன் கோயிலுக்கு தானமா அளிக்கப்பட்ட நிலங்களில் இலுப்பை மரங்களை வளர்த்து, அதனோட விதைகளை செக்குல ஆட்டி எண்ணெய் எடுத்து கோயிலிலே விளக்கு எரிச்சாங்க? நந்தாவிளக்குன்னு பேரு. இலுப்பெண்ணெய் விடியறவரை எரியும்.

அந்த மரங்களைக் கொண்டே கோயிலுக்கான வாசல்கள், வாகனங்கள் தேருன்னு செஞ்சாங்க. இதுக்காகவே விவசாயம் பண்ண முடியாத நிலங்களிலும் ராஜாக்கள் கோயிலுக்கு தானமா கொடுத்த நிலங்களிலும் இலுப்பை மரங்களை நட்டு வளர்த்தாங்க. எங்கெங்கு இலுப்பை மரங்கள் தோப்பா இருக்குதோ அதுவெல்லாம் கோயில் நிலங்கள்னு முடிவு செஞ்சுக்கலாம்.'

'மனுஷங்க எந்த அளவுக்கு அறிவாளியா இருக்காங்களோ, அந்த அளவுக்கு சுயநலவாதியாகவும் இருக்காங்க? அது கிடக்கட்டும் வித்தா என்ன கிடைக்கும். அறுப்புக் கூலி ஆட்கூலி எல்லாம் போக ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்' என்று அவன் சொல்ல, அவளுள் மகிழ்ச்சி அதிகரித்தது.

'எப்போ வெட்டப் போறீங்க?'

'இந்த மாச கடைசியிலே...'

'பணமிருக்கா.. நகை தரட்டுமா?' என்ற அவள் தன் வருமானத்தை கையிருப்பாக வைத்துகொள்வதில்லை. நகையாகவே மாற்றி வைத்திருப்பாள்.

'வேண்டாம் மரம் வித்த பெரியதொகை அடுத்தவாரம் கைக்கு வருது..'

'கோயில் விவகாரம் கெட்டபேரு வராம பார்த்துகுங்க? அப்புறம் மாதவி ஒரு சேதி சொன்னா அவளோட 'ஹெட்மாஸ்டர் நாளை காலைல உங்களை பார்க்க வீட்டுக்கு வர்றதா சொன்னாராம்..'

'ஏன் எந்த பாடத்திலாவது மார்க் கம்மியா வாங்கியிருக்குமோ?'

'அப்படி நான் என்ன அலுப்ப சலுப்பையான புள்ளையையா பெத்து வச்சிருக்கேன்... அது மரக்கன்று உருவாக்கி நட்டுகிட்டிருக்கில்லே... அதுபற்றி

பேசணுமாம்.'

'அப்பன் ஊருக்குள்ள மரத்தை வெட்டி விக்ககறதுக்குப் பரிகாரமா இந்தப் புள்ளை மரம் வளர்க்கிறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க? பேசாம விட்டுடும்மான்னா கேட்க மாட்டேங்குது ஹெட்மாஸ்டர் அவரு பங்குக்கு என்ன பேசப் போறாரோ தெரியலே. சரி நீ போய் படு நான் கொஞ்சநேரம் டி.வி. பார்த்துட்டு வரேன்.'

டி.வி. சேனலை மாற்றி சற்றுநேரம் செய்தியை பார்த்தவன், பின்னர் வழக்கம்போல பழைய பாடல்களை ஒளிபரப்பும் சேனலை வைத்துப் பார்த்தான். ஆனால் பாடல்களில் மனம் லயிக்கவில்லை. மகளையே சுற்றிவந்தது.

ஒருநாள் பள்ளிவிட்டு வரும்போது இரண்டு பெரிய வாட்டர் பாட்டில்களைக் கொண்டுவந்து அதன் மேல்பகுதியை அளவாக வெட்டி எறிந்துவிட்டு அடிப்புறம் ஓட்டையிட்டு, அதில் மண்ணை நிரப்பி இரண்டு புளியங்கொட்டைகளை போட்டு தண்ணீர் ஊற்றினாள் மாதவி. தொடர்ந்து தண்ணீர் ஊற்றிவர அடுத்த ஒருமாதத்தில் புளியங்கன்றுகள் முளைவிட்டன. விளையாட்டாய் ஆரம்பித்தது, பாட்டில்கள் கிடைக்கும்போதேல்லாம் தொடர நூற்றுக்கும் மேற்பட்ட புளியங்கன்றுகள் வீட்டின் முன் அலங்கரித்தன.

வீட்டுக்கு வந்தவர்கள் கன்றுகளை கேட்டு நச்சரிக்க, நட்டு தண்ணீர் ஊற்றி வளர்ப்பேன்னு உறுதிமொழி கொடுத்திட்டு எடுத்துட்டு போங்க என்று சொல்லி கேட்பவர்களுக்குத் தந்தாள்.

பக்கத்து வீட்டு குழந்தையின் பிறந்த நாளின்போது ஐந்து கன்றுகளை அவர்கள் வீட்டின் பின்பக்கத் தோட்டத்தில் நட்டுத் தர அத்தனையும் வேர் பிடித்து வளர்ந்தது. அடுத்தடுத்த வீடுகளில் உள்ள குழந்தைகளின் பிறந்தநாளுக்கு என மரக்கன்றுகளை நட்டு, இப்படி ஊரில் அவளால் நடப்பட்ட மரக்கன்றுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கன்றுகள் மரமாகியுள்ளன. தூக்கம் கண்களைச் சுழற்ற டி.வி.யை நிறுத்திவிட்டு படுத்தான்.

மறுநாள் காலை எழுந்து ஆட்களுக்கு போன் பண்ணி, எந்தெந்த மரங்களை எந்தெந்த அளவில் வெட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது ஹெட்மாஸ்டர் வந்தார்.

'வாங்க சார்... உட்காருங்க... கமலம்.. சார் வந்திருக்காங்க.. காபி கொண்டுவா...'

'இருக்கட்டும் சாமிநாதன்... ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன். உங்க மகளாலே எங்க பள்ளிக்கூடத்துக்கு மட்டுமில்லே... இந்த ஊருக்கே பெருமை தேடி வந்திருக்கு. இத்தனை சின்ன வயசிலே அவ மரக்கன்றுகளை உருவாக்கி, நட்டு பராமரிச்சிட்டு வர்றதைப் பத்தி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அவரு அதை படிச்சு பார்த்துட்டு உங்க மகளை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிச்சி போன் பண்ணியிருக்காரு. அது விஷயத்தை சொல்லணும்னுதான் வந்தேன். அநேகமா ரெண்டு, மூணு நாளில் நாம கடலூர் போறமாதிரி இருக்கும்' என்று அவர் சொல்லி முடிக்க இவனுக்கு மகிழ்ச்சி அதிகரித்தது.

'கேட்கவே சந்தோஷமா இருக்குங்க சார்... என்னைக்குப் போகணும்னு சொல்லுங்க நாங்க வர்றோம்.'

காபியுடன் வந்த கமலமும் மாதவியும் இச்செய்தியைக் கேட்டு திக்குமுக்காடி போனார்கள்.

ஐந்தாவது நாள் கடலூரில் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் காரணிகள் பற்றியும் அதன் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுப் பற்றியும் பேசப்பட்டது. இறுதியில் மாவட்ட ஆட்சியர் பேசினார்.

'சுற்றுச்சூழலைச் சுகாதாரமாகவும் ஆதாரமாகவும் வைத்து

கொள்வது என்பது ஒவ்வொரு உயிரின் முன்னேயும் வைக்கப்பட்டுள்ள தார்மிகப் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை மனிதர்களைத் தவிர, பிற ஜீவராசிகள் அனைத்தும் உணர்ந்து கடைபிடித்து வருகின்றன. ஆனால் ஆறறிவு கொண்டவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் மனித இனத்தின் பெரும்பான்மையோர் அதைப் பற்றி சற்றும் கவலைப்படுவதில்லை.

இந்த மேடையில் பல கருத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றையாவது பின்பற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். நம் குடும்பத்தினரை அல்லது நம்மை சார்ந்தவர்களை மாற்ற வேண்டுமானால் முதலில் நாம் மாற வேண்டும். இப்படி மாறும் மனோபாவத்தை ஏற்படுத்திக் கொள்ளாதவரை மாற்றத்தை உருவாக்கவும் விதைக்கவும் முடியாது. குறைந்தபட்சம் நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமைகள் செய்யாமல் இருக்க வேண்டும்.

இப்பொழுது நான் கூறப் போகும் ஒரு செய்தி பலருக்கு சங்கடத்தையும் சங்கோஜத்தையும் ஏற்படுத்தலாம். ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான் சென்ற பல கிராமங்களில் ஊர்புறச் சாலையோரங்கள் இன்னும் பொதுக் கழிப்பிடமாகவே பயன்படுத்தப்பட்டு வருவதைப் பார்த்தேன். இந்த நிலையை மாற்றி அமைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் மாற்றம் ஏற்படவில்லை.

அரசின் செயல்பாட்டில் குறையா? அல்லது மாற்றத்தை ஏற்கும் மனோபாவம் மக்களிடம் வராமையா? எதனால் என்பது புரியவில்லை. இதற்கெல்லாம் பதில் கூற சம்பந்தபட்டவர்கள் முன்வந்தால் மட்டுமே எல்லாவற்றையும் மாற்றிக் காட்டமுடியும்.

இப்படி தான் வாழும் ஊரைப் பற்றியே கவலைப்படாதவர்களுக்கு நடுவே பள்ளிப்படிப்பு படிக்கும் ஒரு மாணவி படிப்புக்கு இடையே தான் வாழும் ஊருக்கு தன்னால் இயன்ற சேவையை செய்து உயர்ந்து நிற்பதுடன் ஊருக்கும் பெருமை தேடித்தந்திருக்கிறாள். அவளை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்' என்று ஆட்சியர் பேசினார்.

அடுத்த நிமிடம் மாதவி மேடையேற்றப்பட்டாள். மாதவியை தன் அருகே அழைத்த ஆட்சியர் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

'இந்தச் சிறுமியின் பெயர் மாதவி. சிதம்பரம் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக தனக்கு கிடைத்த பிளாஸ்டிக் பாட்டில்களில் மரக்கன்றுகளை உருவாக்கி, ஊருக்கே வழங்கியுள்ளார்.

இப்படி இவர் உருவாக்கிய கன்றுகளில் நூற்றுக்கும் மேற்பட்டவை மரமாகி காய்க்கும் தருவாயில் உள்ளன. வரும்காலத்தில் இந்த மரங்கள் இவரது ஊராரின் தேவைக்குரிய புளியைத் தருவதுடன் கிராம பஞ்சாயத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் வருமானத்தை தரவுள்ளன.

மேலும் மேகத்தைக் கிரகித்து மழையாகப் பொழிய வைக்கும் சக்தி மற்ற மரங்களைவிட புளிய மரத்துக்கு அதிகம் என வனத் துறை ஆராய்ச்சியாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இத்தனை சிறப்புக்குரிய புளியமரக் கன்றுகளை கிராமத்திலுள்ள ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாளின் போதும் அவர் வீட்டுக்குச் சென்று நட்டதுடன் எங்கே அவர்கள் தண்ணீர் ஊற்றாமல் விட்டு விடுவார்களோ? என்று இவராகவே அவர்களது வீட்டுக்குச் சென்று தண்ணீரும் ஊற்றியுள்ளார். அந்த விதத்தில் மற்றவர்களுக்கும் மரம் வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையை இவர் உருவாக்கியுள்ளார்.

சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கும் கிராமத்தில் மரம் வளர்க்கும் சிந்தனை இவருக்குள் மட்டுமே எழுந்துள்ளது. மற்றவர்கள் தன்னைப் பற்றியும் தன் வாழ்க்கைப் பற்றியும் நினைக்க, இவரோ ஊரைப்பற்றி கவலைப்பட்டுள்ளார். இந்தப் பொதுநலச் சிந்தனைக்காக இவரை பாராட்டவும், இவரது செயலுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரவுமே இவரை மேடைக்கு அழைத்துள்ளேன். இவர்போல அனைவரும் மரத்தை நேசிப்பவராக மாற வேண்டும் என்பது எனது வேண்டுகோளும் விருப்பமுமாகும்.

இவரது செயலை ஊக்குவிக்கும் விதமாக இவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு கடிதமும் என்சார்பில் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் அளிப்பதுடன் மாவட்ட வனத் துறை ஆலோசகர்களில் ஒருவராகவும் இவரை நியமிக்கிறேன். இவர் பெரிய அளவில் மரக்கன்றுகளை உருவாக்க விரும்பினால் வனத்துறை வழிகாட்டும்' என்றார்.

ஆட்சியர் பேசி முடித்தவுடன் பலத்த கைதட்டல் எழுந்து அரங்கை நிறைத்தது. பத்திரிகையாளர்கள் மாதவியிடம் கேள்விகள் கேட்க, அவள் சளைக்காது பதில் சொன்னாள். இதற்குள் கருத்தரங்குக்கு வந்த சில முக்கிய பிரபலங்கள் மாதவிக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதற்கு முன்வர மாவட்ட ஆட்சியர் அதை தன் கையால் வாங்கி மாதவிடம் தந்தார். மகளுக்கு கிடைத்தப் பெருமையைப் பாரத்து சாமிநாதனும் கமலமும் வாயடைத்து

போயினர். அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு உண்டவுடன் ஆட்சியர் அவர்களுக்கு விடைதர மாதவி ஆட்சியர் கால்களில் விழுந்து வணங்கினாள். நடுத்தர வயது வடநாட்டு ஆட்சியர் அவளை தடுத்து நிறுத்தி ஆசிர்வதித்தார்.

நிகழ்ச்சி முடிந்து ஊர் செல்ல நால்வரும் பேருந்து ஏறினர். ஜன்னல் ஓரம் உட்கார்ந்து பின்னோக்கிய ஓடிய மரங்களின் பெயரை மாதவி தன் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தாள். கமலமும் ஹெட்மாஸ்டரும் கண்ணயர்ந்துவிட சாமிநாதன் சிந்தனை வயப்பட்டவனாய் இருந்தான்.

இரவு நேரத்தோடு உணவு முடித்து வெளியே வந்த கமலம் மாடிப்படி அருகில் கணவன் சாமிநாதன் கவலையுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தாள்.

'ஏங்க தூக்கம் வரலியாக்கும்...'

'......'

'கோயில் மரத்துக்கு பணம் கொடுக்கறதைப்பத்தி யோசிச்சிட்டிருக்கீங்களா?'

'................'

இரண்டு கேள்விக்கும் அவனிடமிருந்து பதில் வராது கண்டு அவனருகில் சென்று அவனைத் தொட்டுப் பார்த்தவள் முகவாயை பிடித்து தூக்கினாள். அவன் முகம் வாடியிருந்தது.

'மகளுக்கு கிடைச்ச பெருமையிலே உங்களை மறந்து உட்கார்ந்துட்டீங்களோ?'

'மகள் பெருமையைத் தேடித் தந்துட்டா? ஆனா நான்தான் ஏகத்துக்க தப்பு பண்ணிட்டேன் கமலம்.'

'ஓ... மரம் வியாபாரம் செய்யறதைச் சொல்றீங்களா? அது உங்க மக பிறக்கிறதுக்கு முன்னாலேருந்து நீங்க செஞ்கிட்டு வர்ற தொழில். அப்படியே அது தப்புன்னு தோணிச்சுன்னா மக மூலமா மரக்கன்றுகளை நட்டு பரிகாரம் தேடிக்கறதா நினைச்சுக்கோங்க?'

'இந்த மேடையில் உருவாக்கப்பட்டுள்ள விஷயங்களில் ஆளுக்கொன்றையாவது பின்பற்றணும்னு கலெக்டர் சொன்னதும் என்மனசைவிட்டு மறையாது போலிருக்கு' என்று சாமிநாதன் சொன்னபோது, அவன் குரல் தழைந்ததைப் பார்த்து கமலம் பதறினாள். அவன் கரங்களை ஆதுரத்துடன் பற்றிக் கொண்டாள்.

'என்னாயிடுச்சுன்னு இப்படி கலங்கிறீங்க? எனக்கு கூட நீங்க நாள் பூரா லோலோன்னு அலையறது பரிதாபமா இருக்கும். பிடிக்கலேன்னா விடுங்க நாம கட்டியிருக்கிற கடையிலே பெரிய அளவுக்கு மளிகை வியபாரம் தொடங்கினா போச்சு.'

இவர்களுடைய பேச்சில் உள்ளேயிருந்து வந்த மாதவியும் கலந்து கொண்டாள்.

'மளிகைக்கடை வேணாம்பா? மரக்கன்றுகளை அறிவியல் பூர்வமா வளர்க்க வனத் துறை மூலம் வழிகாட்ட தயாரா இருக்கிறதா கலெக்டர் சொன்னாரில்லே... இதுக்கெல்லாம் பேங்கிலே கடன் தராங்கன்னு ஹெட்மாஸ்டரும் சொன்னாங்க. ஹைவேஸ் ரோட்டிலே இருக்கிற நிலத்திலே நாம செய்யலாம்' என்ற மகளின் யோசனை சாமிநாதனை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. குழப்பம் நீங்கி தெளிவு பெற்ற சாமிநாதன் எழுந்தான்.

'நீங்க போய் படுங்க... நான் தர்மகர்த்தாவை போய் பார்த்துட்டு வந்துடறேன்.'

'அவருகிட்டே மரம் வேணான்னு சொல்லப் போறீங்களா? கோயில் வேலை நின்னுடப் போவுதுங்க. கோயில் மரத்தை வெட்டி விக்கறதோட நிறுத்திக்கலாம்'

தர்மகர்த்தா அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 'என்னப்பா உன் மகள் கலெக்டரோட எடுத்த படம் மாலை பேப்பரில் வந்திருக்கு பார்த்தேன். உன் மகள், என் பேத்தி பிறந்ததை தெரிஞ்சுகிட்டு வீட்டுக்கு வந்து புளியங்கன்றுகளை நட்டுச்சுப்பா. நான் அன்னைக்கு கிண்டல் பண்ணினேன்.

இன்னைக்கு அந்தக் கன்று வளர்ந்து நிக்குது. அநேகமா இந்த வருஷம் பூ வைக்கும்னு நினைக்கிறேன். உனக்கு நல்ல பெண்டாட்டி அமைஞ்சமாதிரி நல்லமகளும் கிடைச்சிருக்கா எல்லாம் திரவுபதியோட அருளாசிதான் ‘‘ என்று மகளோடு மனைவியையும் உயர்த்தி பேசியவருக்கு நன்றி தெரிவித்தான்.

'கோயில் மரத்துக்கு பணம் கொண்டாந்திருக்கேன். வாங்கிக்கோங்க?'

'நாளைக்கு கோயில் கொடியேறப்போகுது. சரியான நேரத்திலே பணம் கொண்டாந்திருக்கே..?'

'ஒரு சேதிங்க...' என்று அவன் சொன்ன செய்தி கேட்டு தர்மகர்த்தா பிரம்மித்து போனார்.

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்தவன், கோயிலடிக்கு தனக்கும் இன்னும் இருவருக்கும் சேர்த்து காபி அனுப்புமாறு கூறிவிட்டு மரத்தடிக்கு வந்தான். சற்று நேரத்தில் அவனிடம் வேலை பார்க்கும் இருவர் மொபெட்டில் வந்து இறங்கினர். 'பொழுது புலர்வதற்குள் மரத்தை வெட்டுவதற்கான ஆயுதங்களை செய்வதற்காக தங்களை அழைத்திருப்பாரோ?' என்ற சிந்தனையுடன் வந்தவர்களிடம் வேலையை கூறிவிட்டு தானும் அவர்களோடு சேர்ந்து வேலையில் ஈடுபட்டான்.

முதலில் மரத்தைச்சுற்றி சுத்தம் செய்தான். சாணம் தெளித்தான். வீட்டில் இருந்த மர ரீப்பர்களை கொண்டு வரச் செய்து ஒரு தச்சரின் உதவியுடன் தட்டி செய்து மரத்தின் நான்கு புறமும் அடைத்தான். கோயிலுக்கு வெளிப்புறத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அம்பாளின் பழைய புடவைகளில் நான்கை எடுத்து மரத்தைச் சுற்றி கட்டினான். புடவை கட்டிய பின்னர் மஞ்சளை கரைத்து மரத்தின் மீது தெளித்தான்.

பின்னர் அதன் மீது குங்குமம் வைத்தான். மரம் இப்பொழுது உருமாறி சாட்சாத் அம்பாளே நேரில் வந்து நிற்பது போல காட்சியளிக்க அவன் உடல் சிலிர்த்தது. சுவரோரம் இருந்த பெரிய அகல் ஒன்றை எடுத்து அலம்பி பையிலிருந்த எண்ணெயை எடுத்து ஊற்றி திரியிட்டு விளக்கேற்றினான்.

அகல் விளக்கின் வெளிச்சம் சிறிது சிறிதாக பரவ மரத்தின் மீதிருந்த பறவைகள் இன்னொலி எழுப்பின. சூரியனும் தன் பொற்கதிர்களை மரத்தின்மீது பாய்ச்ச அந்த இடம் பார்க்க பேரகழாய் இருந்தது. அப்பொழுது அந்த வழியே சைக்கிளில் வேகமாக வந்த வழிபோக்கன் சைக்கிளைவிட்டு இறங்கி அவனருகே வந்தான்.

'ஏங்க ராதாவிளாகத்துக்கு இப்படித்தானே போகணும்?'

'ஆமாம்..'

'இது என்ன கோயிலுங்க?'

'திரவுபதி அம்மன்...'

'இந்த மரத்திலே என்ன சாமிங்க இருக்கு'

எதிர்பாராத இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறியவன் ஒருவாறாக சுதாரித்துகொண்டு மரத்தையும் சாமியையும் இணைத்து மரச்சாமி என்றான். சொன்னபிறகே அது மற்றவர்கள் தன்னை அழைக்கும் பெயர் என்பது நினைவுக்கு வந்தது.

'என்னது மரச்சாமியா? மரம் பேர்லேயே சாமியா இதுவரையிலும் கேள்விபட்டதில்லை.. ஆனா பொருத்தமான பேருங்க. நூறு வருஷ மரமா தெரியுது. இத்தனை வயசிலே எத்தனை பேருக்கு நல்லது செஞ்சிருக்கும். மனுஷங்க அதிகப்பட்சமா அறுபது, எழுபது வருஷம் வாழவாங்க. ஆனா மரம் நூறு, இருநூறு வருஷம் வாழும், நூறு வருஷம் வாழ்ந்தவங்க காலிலே விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறோம்.

ஆனா இருநூறு வருஷம் வாழும் மரத்தை வணங்காட்டியும் வெட்டாம இருக்கலாம் இல்லையா? இந்த மரத்தடியிலே தினமும் விளக்கேத்தி வச்சு மனம் உருகி கும்பிட்டா வீட்டிலேயும் நாட்டிலேயும் சுபிட்சம் நிலவுங்க. மனசு வெச்சா மரமும் சாமிதாங்க?' என்ற வழிபோக்கனின் பேச்சையும் செயலையும் சற்றும் எதிர்பார்த்திராத சாமிநாதன் சிலிர்த்த உடலுடன் அவன் போவதையே பார்த்துகொண்டிருந்தான்.

'மனசு வெச்சா மரமும் சாமிதாங்க? மனசு வெச்சா மரமும் சாமிதாங்க?' என்று அந்த வழிபோக்கன் சொல்லிவிட்டுப் போன அந்த வார்த்தைகளை தன்னையும் அறியாது சாமிநாதன் மீண்டும், மீண்டும் முணுமுணுக்க அதை ஆமோதிப்பது போல பறவைகளும் குரல் கொடுத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com