ஏவி.எம். செட்டியார்! - நான் சந்தித்த பிரபலங்கள் - 6

ஏவி.எம். செட்டியார் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
ஏவி.எம். செட்டியார்
ஏவி.எம். செட்டியார்ஏவி.எம். செட்டியார்
Published on
Updated on
2 min read

ஏவி.எம். செட்டியார்

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் மிகவும் பிரபலம். சக்தி வாய்ந்த தெய்வம். இந்தப் பக்கம் அம்மன் சந்நிதி. என் வீடு அந்தப் பக்கம் எம்.எம். வீதி ஏவி.எம் வீடு. ஆனால் நான் ஒரு நாள் கூட ஏவி.எம்.மைச் சந்தித்ததில்லை. காரணம், அப்போது நான் பிறக்கவில்லை. அவர் முதன் முதலில் கன்னடத்தில் வெளியான 'அரிச்சத்திரா' படத்தை 1943-இல் மொழி மாற்றம் செய்து டப்பிங் முறையைக் கொண்டு வந்தார்.

விநாயகருக்கு டப்பிங் குரல் கொடுத்தார். அவர் எங்கள் பிள்ளையார் பட்டிக் கோயிலைச் சேர்ந்தவர். 1944-இல் தேவகோட்டை ரஸ்தாவில் தொடங்கிய ஸ்டூடியோவை கோடம்பாக்கத்துக்கு மாற்றி 'சபாபதி' என்ற நகைச்சுவைப் படத்தை ஏ.டி. கிருஷ்ணசாமியுடன் சேர்ந்து இயக்கினார்.

மகாகவி பாரதியாரின் தேசியப் பாடல்களின் உரிமைப் பெற்றுத் திரைப்படங்களில் ஒலிக்கச் செய்தார். 'நாம் இருவர்' நாடகத்தைப் படமாக்கிய போது சுதந்திரம் வரும் முன்னே அந்தப் பாடல்கள் பிரபலமாகின. பேபி கமலா ஆடிய டான்ஸ் அதன் அடையாளமாக இருந்தது.

ஐந்து முதல்வர்கள் அவர் பட நிறுவனத்தில் பணிபுரிந்தார்கள். ஏவி.எம். என்ற பேனரைப் பார்த்ததும் வட இந்தியாவில் ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆராவாரம் செய்ததைப் பார்த்ததாக அறிஞர் அண்ணா ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இந்த அளவிற்கு இமாலயப் புகழ் பெற்ற ஏவி.எம். அவர்கள் 1978-ஆம் ஆண்டு. ஒரு நாள் இரவு 11 மணி அளவில் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர் குரலை முதல் தடவையாக கேட்ட போது என்னை நானே நம்ப முடியாமல் வானத்தில் மிதந்தேன்.

அவர் போனில் ' நீ எழுதி இயக்கிய 'மீனாட்சி குங்குமம்' இப்போதுதான் பார்த்தேன். வெறும் குரங்கை வைத்து சர்க்கஸ் காட்டாமல், ஒரு ஆஞ்சநேய பக்தனைத் தொழில் பொறாமையில் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்தே கொன்று விடுகிறார்கள். அந்த ஆஞ்சநேயரே குரங்காக வந்து அவரது மகள் மீனாட்சிக்குக் கடைசி வரை உதவுகிறது. நீ குட்டித் தேவராயிட்டே' என்று பாராட்டினார். அன்று இரவு முழுக்க சந்தோஷத்தில் தூக்கமே வரவில்லை.

அடுத்த படம் - ராதிகா, விஜயன், சுதாகர் நடித்த 'நிறம் மாறாத பூக்கள்' வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. என் வீட்டு மாடியில் என்னுடன் வாடகைக்கு இருந்த பாரதிராஜாவிடம் சொல்லச் சொல்லி அவர்கள் மூவரையும் வைத்து 'அன்பே சங்கீதா' என்ற படத்தை எடுக்க முடிவு செய்தேன். விதியின் கொடுமை என் நிழலாக இருந்தவர்கள் 'ஒரு விடுகதை ஒரு தொடர்கதை'க்கு விஜயனிடமும் சுதாகரிடமும் அதே தேதியை வாங்கி என்னை ஏமாளியாக்கினார்கள்.

ஏற்கெனவே 'அச்சாணி', 'மீனாட்சி குங்குமம்' வெற்றி அடைந்திருந்ததால் என் முன் கோபம் என் கண்களை மறைத்தது. சுதாகர் இடத்தில் ஜெய் கணேஷையும் , விஜயன் இடத்தில் தேங்காய் சீனிவாசனையும் முடிவு செய்து இளையராஜா வாலியுடன் 'சின்னப் புறா ஒன்று...' என்ற அருமையான இன்று ஒலிக்கும் பாடலைப் பதிவு செய்தேன். ஒரே மாதத்தில் படத்தை முடித்து விட முயற்சி செய்து முடிக்கும் நேரம் ரீ ரிக்கார்டிங் ஏவி.எம்.

செட்டியாரின் உதவியாளராக இருந்த வீரப்பன் செட்டியார் உன் 'அன்பே சங்கீதா' படத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னார். ரீ ரிக்கார்டிங் முடியாத நிலையில் எப்படிப் படம் காட்ட முடியும் என்று நான் சொன்ன போது, இதை கேட்டுக் கொண்டிருந்த இளையராஜா கடைசி ரீல் மட்டும்தானே, ஸ்ட்ரெய்ட் பிரிண்ட் போட்டு அனுப்புங்கள். நான் மாலைக்குள் ரீ ரிக்கார்டிங் முடித்து விடுவதாக கூறி, அவசர அவசரமாக முடித்துக் கொடுத்தார்.

ஏவி.எம். ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்து நேரே வாஹிணி எடிட்டிங் அறைக்குப் போனேன். என் எடிட்டர் வெள்ளைசாமியிடம் இரவு செட்டியார் படம் பார்க்கிறார். அவசரமாக லேப்புக்கு சென்று ரீல்களைத் தயார் செய்யச் சொன்னேன்.

எல்லாம் தயாரான நிலையில் நான் படத்தை எடுத்துக் கொண்டு தியேட்டருக்குப் போனேன். பிரிண்டை வைத்து விட்டுப் போகச் சொன்னார்கள். செட்டியாருடன் நான் என் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன்.

அடுத்த நாள் செட்டியார் ஸ்டூடியோவுக்கு அழைத்தார். நான் அவர் எதிரே உட்காரமல் நின்றேன். உட்காரச் சொன்னார். நான் உட்காருவதற்குள் உன் அன்பே சங்கீதா படம் பீமல்ராய் படம் போல் இருந்தது என்றார். ஹீரோயின் யார் என்றார். ராதிகா எம்.ஆர்.ராதாவின் மகள் என்றேன். எனக்கு வியாபாரத்துக்கு உதவி செய்வார் என்று எதிர்பார்த்தேன்.

அதைச் சொல்வதற்குள் அவர் பீமல்ராய் யாரென்று தெரியுமா என்றார். நான் உடனே அவர் ஒரு எடிட்டர், டைரக்டர் 'மதுமதி, 'தோ பிகா ஜமீன்' போன்ற அருமையான படங்களை இயக்கியவர் என்று கூறினேன். இப்படித்தான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் என்று கூறி விட்டு கடைசியில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அன்பே சங்கீதா ஓடாது பிகாஸ் மிஸ்காஸ்டிங் கைன்ட்லி டோன்ட் யுவர் ஃபிங்கர்ஸ் த்ரு யூவர் ஓன் ரிலீஸ்' என்றார். நான் இடிந்து போனேன். அவர் சொன்னதுதான் நடந்தது.

இவர் எடுத்த 'ஹம்பஞ்சி ஏக்டால்கே' என்ற குழந்தைகளுக்கான ஹிந்திப் படத்தைப் பார்த்த பண்டித நேரு இவருக்கு விருந்தளித்தார். இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com