'வயது உடலுக்கு ... மனதுக்கு இல்லை. மனதுக்கு வயதாகாதபோது, உடல் மனதுக்கு ஒத்துழைக்கிறது' என்கிறார் மனநல ஆலோசகர் புஷ்பா பிரகாஷ்.
பெங்களூரைச் சேர்ந்த இவர், எவரெஸ்ட் அடிவார முகாம் உள்பட 49 மலையேற்றங்களை வெற்றிகரமாக ஏறியுள்ளார். தனது அனுபவங்கள் குறித்து கூறியது:
'முதல் மலையேற்றத்துக்குச் செல்ல முடிவு செய்தபோது, எனக்கு அறுபத்து ஐந்து வயது. அதன் பிறகு 3 ஆண்டுகளில் இமயமலையில் ஏழு மலையேற்றங்கள் உள்பட இந்தியா முழுவதும் 49 மலையேற்றங்களை முடித்திருக்கிறேன். எனக்கு ஐம்பது வயதை எட்டியதும், வாழ்க்கையை முழுமையாக வாழவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவும் விரும்பினேன், இந்தச் சாகசங்களை எதையும் நிரூபிப்பதற்காக நான் செய்யவில்லை.
வயதை ஒரு வரம்பாக கருதக் கூடாது. மாறாக, ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். என் மகள்தான் எனக்கு உந்துதலாக மாறினார். வனப் பாதைகள் வழியாக அமைதியான காலை நேரத்தில் நானும் மகளும் நடந்தோம். இப்படியே நடைபயணங்கள் தொடங்கியது. அந்த நடைபயணங்கள் மலையேற்றத்தில் கொண்டுவிட்டது.
தொடக்கத்தில் பெங்களூரை அடுத்துள்ள குன்றுகளில், சிறு மலைகளில் ஏறுவதை அறிந்த மகள், அதிக உயர மலையேற்றங்களை முயற்சிக்கத் தூண்டினார். அந்தப் பயிற்சிகள் அறுபத்து எட்டு வயதில் சென்ற ஆண்டு இறுதியில் 18 ஆயிரம் அடி உயரத்தில் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு ஏறிச் செல்ல உதவியது.
உடற்பயிற்சி நிலையம் செல்வதில்லை. அதிர்ஷ்டவசமாக எனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் எதுவும் இல்லை. பல ஆண்டுகளாக நான் பின்பற்றி வரும் எளிமையான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் கிடைத்த பலன் இது. அதிகாலையில் கண் விழிப்பேன். பிறகு தியானம். ஆசனங்கள் செய்வேன். இந்தப் பழக்கமானது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறது.
தினமும் காலையில், மொட்டை மாடியில், பறவைகளுக்கு தானியம் கொடுப்பேன். வீட்டு வேலைகளை நானே செய்கிறேன். சரிவிகித உணவை சாப்பிடுகிறேன். 'ஜங்க்' உணவுகளுக்கு வீட்டில் அனுமதியில்லை. பிரார்த்தனைக்கும் நேரம் ஒதுக்குகிறேன். இரவு 10.30 மணிக்கு உறங்கத் தொடங்குவேன். மன நலனும், கட்டுப்பாடான, ஒழுக்கமான வாழ்க்கையும்தான் இந்த வயதில் நான் மலையேற்றங்கள் இதர சாகசங்களை மேற்கொள்ளுவதற்கு முடிவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
பெங்களூரு நிம்ஹான்ஸில் தன்னார்வமாகப் பணியாற்றுவதுடன் சொந்தமாக சுரபி ஆலோசனை மைய'த்தையும் நடத்தி வருகிறேன்' என்கிறார் புஷ்பா பிரகாஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.