கோலிவுட் ஸ்டூடியோ!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை கொண்டாடும் வகையில் ஜூலை 19ஆம் தேதி சென்னையில் 'ஆனந்த யாழை' என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
 நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்
Published on
Updated on
3 min read

நா. முத்துக்குமாரின் ஆனந்த யாழை !

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை கொண்டாடும் வகையில் ஜூலை 19ஆம் தேதி சென்னையில் 'ஆனந்த யாழை' என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. நா. முத்துக்குமாரின் 50ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நா.முத்துக்குமாரோடு பயணித்த இயக்குநர்கள் ஏ.எல். விஜய், ராம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப் பேசியிருக்கிறார்.

'முத்துக்குமார் என் வாழ்க்கையில் மட்டும் ஆனந்த யாழையை மீட்டவில்லை. தமிழ் திரையுலகில் மட்டும் மீட்ட வில்லை. தமிழ் பாடல்களைக் கேட்கக்கூடிய எல்லாருடைய வீட்டிலும் ஆனந்த யாழையை மீட்டிய, மீட்டிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பாடலாசிரியர். யாருடைய சுதந்திரத்தையும் அவர் பறித்ததில்லை. ஒரு எளிமையான மனிதர்.

திரைத்துறையில் இருக்கக்கூடிய எத்தனையோ பேருக்கு நண்பர். என்னை நிறையப் பேரிடம் அறிமுகப்படுத்தி வைத்தது அவர்தான். நான் முதல் படம் எடுப்பதற்கு காரணமாக இருந்தவர் முத்துகுமார். யுவன் உடன் எப்போது இசையமைக்க உட்கார்ந்தாலும் அப்போது முத்துக்குமார் குறித்தப் பேச்சுகள் வந்துவிடும். இந்த விழா முத்துக்குமாரைத் தமிழகம் முழுவதும் கொண்டாடக்கூடிய ஒரு விழாவாக இருக்கும். இதுவரை சினிமாவில் நடந்திடாத ஒரு விழாவாக இருக்கும் இருக்கும். நா.முத்துக்குமாருக்காக எல்லோரும் ஒன்று கூடப் போகிறோம்' என்று பேசியிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு!

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் 'வாடி வாசல்' இயக்குவதாக இருந்தது. சில நடைமுறை சிக்கல்களால் சூர்யா அதிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாகப் பேச்சு இருக்கிறது. இந்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத அதிசயமாக சிலம்பரசனை இயக்குகிறார் வெற்றிமாறன்.

இந்தக் கூட்டணி போலவே படமும் பல ஆச்சரியங்களைக் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ள இதன் படப்பிடிப்பிற்காக இப்போது 'டெஸ்ட் ஷூட்' எடுத்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் நிலையம் அரங்கில் இந்த டெஸ்ட் ஷூட் நடந்துள்ளது. குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகி, இந்தாண்டிலேயே வெளியாகும் திட்டமிடலுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் தவிர இப்போது நெல்சனும், கவினும் கெளரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். கதாநாயகி யார் என்பது முடிவாகவில்லை. சந்தோஷ் நாராயணன் அல்லது ஜி.வி.பிரகாஷ் இருவரில் ஒருவர் இசையமைக்கலாம் என்ற பேச்சு இருக்கிறது. இந்தப் படத்திற்கான அசத்தலான ஹேர் ஸ்டைலில் சிலம்பரசன் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கட்டம் போட்ட சட்டை, கட்டம் போட்ட லுங்கி காஸ்ட்யூமில் பாந்தமாக நின்று கொண்டிருக்க, அருகில் ஆச்சரியமாக இயக்குநர் நெல்சன் இருக்கிறார்.

இன்னும் சில நாள்களில் வெற்றிமாறன் சிம்பு படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் போல தயாரிப்பாளர் தாணு, அடுத்து சூர்யாவை வைத்தும் ஒரு படம் தயாரிக்கிறார். அந்த படத்தை 'ஆவேசம்' படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

ஜொனிதா காந்தி
ஜொனிதா காந்தி

சமூக வலை தளங்களில் பாலியல் தொல்லை பாடகி ஜொனிதா காந்தி!

பஞ்சாப் குடும்பத்தில் பிறந்து கனடாவில் படித்து வளர்ந்து, இப்போது இந்திய அளவில் பிரபல பாடகியாக இருப்பவர் ஜொனிதா காந்தி. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் 'சிவாஜி' படத்தில் இடம்பெற்ற 'அதிரடிக்காரன்' பாடலை மின்சாரம் பாய பாடி தமிழ் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தமிழ், உருது, தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார்.

பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி மொழிகளில்கூட பாடல்கள் பாடி கவனம் ஈர்த்து வருபவர். 'ஓகே கண்மணி'யின் 'மெண்டல் மனதில்', 'சர்க்கார்' படத்தின் 'பொண்ணு', 'காப்பான்' படத்தின் 'அமிகோ', 'பீஸ்ட்' படத்தில் 'அரபிக் குத்து', 'வாரிசு' படத்தில் 'ஜிமிக்குப் பொண்ணு', டாக்டரின் 'மெலுகு டாலு நீ' எனப் பல வெரைட்டியான பாடல்கள் மூலம் தமிழில் கவனம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் ஜொனிதா காந்தி, தன் சமூக வலைதளப் பதிவில் இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், 'சமூக வலைதளங்களில் பெண்களுக்கு நிறைய பாலியல் தொல்லைகள் நடக்கின்றன. நான் இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் ஆக்டிவாக இருப்பேன். தினமும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்த வண்ணமிருக்கும், அதையெல்லாம் பெரிதாக நான் பார்க்க மாட்டேன். ஆனால், இன்ஸ்டாகிராமில் எனக்கு நண்பர்களாக இருப்பவர்கள் சிலர் என்னை சில பதிவுகளில் மென்ஷன் செய்வார்கள்.

அதைப் பார்த்தால் அவ்வளவு ஆபாசமாக இருக்கும். இப்படி பல பாலியல் தொல்லைகள் சமூக வலைதளங்களில் நடக்கிறது' என்று பேசியிருக்கிறார். கனடாவில் தனக்கு நேர்ந்த இனப் பாகுபாடு குறித்துப் பேசியவர், 'நான் இந்தியாவில் பிறந்து, கனடாவில் படித்து வளர்ந்தேன். கனடாவில் நிறைய இனப் பாகுபாடு தொல்லைகளைச் சந்தித்திருக்கிறேன். என் முடி, முகம் என தோற்றத்தை வைத்தும் என்னை நிறைய கிண்டல் செய்திருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு காட்ஸில்லாவைப் போல இருப்பதாக நக்கல் செய்வார்கள். பஞ்சாப்பில் நான் பள்ளியில் படிக்கும்போதுகூட என் தோற்றத்தை வைத்துக் கிண்டல் செய்வார்கள். என் தோற்றத்தைப் பற்றி நானே தாழ்வாக நினைத்துக் கொள்வேன். இப்போதும் கூட அதே தாழ்வு மனப்பான்மை எனக்கு அவ்வப்போது ஏற்படும். ஆனால் நம்மை நாம் நேசித்தால்தான், பிறர் நம்மை நேசிப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.' என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜொனிதா காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com