ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூக்கு, வாயில் ரத்தக் கசிவு ஏன்?

எனக்கு வயது 28. ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் வேலை.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூக்கு, வாயில் ரத்தக் கசிவு ஏன்?
Published on
Updated on
2 min read

எனக்கு வயது 28. ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் வேலை. தும்மல், இருமல் போன்றவை தொடர்ந்து இருந்தால், மூக்கு, வாயில் இருந்து சிறிய அளவில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கோழையும் வெளியேறுகிறது. இது எதனால்? எப்படி குணப்படுத்திக் கொள்வது?

மகேஸ்வரன், சென்னை.

ரசாயனக் கலவைகளில் கலந்துள்ள பொருள்களின் வெளியேற்றத்தை நீங்கள் சுவாசிக்க நேரும்போது, அவற்றிலுள்ள வெப்பம், ஊடுருவும் தன்மையினால் ரத்தக் கசிவு ஏற்படலாம். அவை மூக்கு, வாயினுள் புகுந்து ஏற்படுத்தும் உறுத்தலை உடல் தன்னிச்சையாக வெளியேற்றும் வழிகளான தும்மல், இருமலால் அதிர்வுகள் ஏற்பட்டு, நுண்ணிய ரத்தக் குழாய்களில் ஏற்படும் கசிவின் வெளியேற்றமே ரத்தக் கசிவு என திடமாக நம்பலாம்.

வெப்பத்துக்கு எதிரான குளிர்ச்சி, ஊடுருவும் தன்மைக்கு எதிரான மந்தம் ஆகிய குணங்களைக் கொண்ட உணவு, மருந்துகளால் நீங்கள் ஆறுதல் அடையலாம். அந்த வகையில் ஆடாதோடை இலை உங்களுக்குப் பயன்படும்.

சுமார் 36 மில்லி ஆடாதோடை இலைச்சாறை தேன், சர்க்கரை கலந்து இரவு உணவுக்குப் பிறகு அருந்தினால் ரத்தக் கசிவை நிறுத்துவதுடன் உட்புறக் குழாய்களில் ஏற்படும் கிழிசலையும் நிவர்த்தி செய்யும் தன்மை கொண்டது என்று சக்ரத்தர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

உங்களைப் போன்ற ஊழியர்கள் அத்திக்காய்களைக் கசக்கிப் பிழிந்து, தேனுடன் தினமும் சாப்பிட வேண்டும். உடனடியாக ரத்தக் கசிவை நிறுத்திவிடும்.

கடுக்காயின் மேல்தோலை மட்டும் இடித்துப் பொடித்து 3 கிராம் அளவில் எடுத்து, 6 மி.லி. தேன் குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடப் பழக்கிக் கொள்ளவும். இதனால் சளியுடன் கூடிய ரத்தக் கசிவு நன்கு குணமாகும். பசி நன்றாக எடுக்கும். வயிற்று வலியையும் குணமாக்கித் தரும்.

இந்தக் கலவைக்கு மேலும் வலுவூட்ட 3 கிராம் கடுக்காய் பொடியில் ஆடாதோடை இலைச்சாறைவிட்டு அரைக்கவும். சாறு வற்றியதும் மறுபடியும் சாறுவிடவும். ஏழு முறை விட்டரைத்த இதனை தேன் குழைத்துச் சாப்பிட, ரத்தக் கசிவு உடன் நிற்கும். நுண்குழாய்களில் ஏற்படும் துளைகளைக் கூட்டிச் சேர்த்து, புண்ணை ஆற்றிவிடும்.

கிராமங்களில் இலவம்பஞ்சு மரத்திலுள்ள பூக்களைப் பொடித்து, தேன் கலந்து சாப்பிடுவார்கள். எந்த வகையான ரத்தக் கசிவையும் இது குணப்படுத்தித் தரும்.

'லாக்ஷாசூரணம்' எனும் சில ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்கின்றனர். 4 கிராம் சூரணத்துடன் 6 மி.லி. தேன், 12 மி.லி. உருக்கிய நெய் குழைத்து, காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிட மிகவும் கடுமையான ரத்த வாந்தியைக் கூட நிறுத்திவிடும். பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் ஏற்படும் அதிக உதிரப் போக்கையும் கட்டுப்படுத்தும்.

மசூரப் பருப்பு, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு சூப் தயாரித்துப் பருக, உங்களுக்கு நல்லது. காலை உணவாக ஏற்கலாம்.

பேரிச்சம்பழம், உலர் திராட்சை, அதிமதுரம் ஆகியவற்றைத் தண்ணீருடன் நன்கு காய்ச்சி, ஆறியவுடன் வடிகட்டி, சர்க்கரையுடன் சாப்பிட உகந்தது. வாஸாகுடூச்யாதி கஷாயம், திராக்ஷாதி காயம், அவியத்தி சூரணம், சந்தனாதி லேகியம், குடஜாரிஷ்டம் போன்ற ஆயுர்வேத மருந்துகளால் நீங்கள் பயனடையலாம். உணவில் காரம், புளி தவிர்த்து இனிப்பு, கசப்பு, துவர்ப்பனவற்றைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடவும். உப்பு குறைக்கவும். புலால் உணவை முழுவதுமாகத் தவிர்க்கவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com