'ஹால் ஆஃப் ஃபேமில்' (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சேர்க்கப்பட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் இயான் பிஷப் 'தல' என்ற தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
'தோனியை 'தல' என்று அழைக்கிறார்கள். அது ஒரு 'ஜில்' வார்த்தை. தன் அணியைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் தர்க்கரீதியாக ஆட்டத்தில் கவனம் செலுத்தவும், போட்டியில் வெற்றி பெற அவர்கள் செய்ய வேண்டிய செயல்முறைகளை வகுப்பதில் தோனியைப் போல் எந்த கிரிக்கெட் அணிகளின் 'தல'க்கள் செய்வதில்லை.
தோனி தனது தலைமைப் பொறுப்பை சுமையாகக் கருதாமல் இயல்பாகக் கையாள்கிறார். முடிந்தவரை அனைவரையும் சமமாக நடத்துவதை அவர் ஒரு குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இந்தக் காலத்தில் பல தலைவர்களிடம் காணக்கிடைக்காத பண்பு அது. இது எம்.எஸ். தோனியிடமுள்ள மிகச் சிறந்த பண்பாக எனக்குத் தோன்றுகிறது' என்கிறார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயான் பிஷப்.
'இந்தியாவை இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளுக்கு வழிநடத்திய தோனி 2020-இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவுக்கு 538 போட்டிகளில் 17,266 ரன்கள், 829 ஆட்டமிழப்புகளுடன் தோனி அசாதாரண ஸ்திரத்தன்மை, உடல் தகுதி, நீண்ட கால கிரிக்கெட் ஆடிய திறமையைக் கொண்டிருந்தார்' என்று தனது பங்குக்கு சர்வதேச கிரிக்கெட் கழகம் பாராட்டியுள்ளது.
இதற்கு முன் பிரபலமான வார்த்தைகள்...
எப்படியோ 'தல' என்ற வார்த்தை உலக அளவில் பிரபலமாகியுள்ளது.
விம்பிள்டன் அரங்கிலும் தமிழ் சொற்கள் 2022இல் இடம்பெற்றிருந்தன. அது தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல.
நியூயார்க்கில் 'அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி 2022 ஆகஸ்ட் 29இல் தொடங்கி, செப்டம்பர்
11இல் நிறைவடைந்தது. இதுதொடர்பான விளம்பரம் ஒன்றில் மிகப் பிரபலமான தமிழ் திரைப்பட சொற்களான 'கட்டிப்புடி வைத்தியம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. டென்னிஸ் வீரர்களான நோவாக் ஜோகோவிச், டேனி மெத்வெடேவ் நெருக்கமாக நின்று கிட்டத்தட்ட கட்டி அணைத்துகொள்ளும் படத்தை யு. எஸ். ஓபன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'இந்தியர்களே.... உங்களது கட்டிப்புடி வைத்தியம் இங்கு நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?' என்று கேள்வியையும் கேட்டிருந்தனர்.
அந்தச் சம்பவம் 2021இல் யு. எஸ். ஓபனின் இறுதிப்போட்டியில் நிகழ்ந்தது. அந்தப் போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி அடையும் விதத்தில் டேனி தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றார்.
'ஜோகோவிச்சை தோல்வி அடையச் செய்ததற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டு கொள்கிறேன்' என்று தடாலடியாக டேனி அறிவித்தார். நெகிழ்ச்சி அடைந்த ஜோகோவிச், டேனி மெத்வெடேவ்வை வாஞ்சையுடன் கட்டி அணைத்துகொண்டார். அந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட படம் அப்போது வைரலானது. ஆனால் , அப்போது 'கட்டிப்புடி வைத்தியம்' என்ற சொற்கள் இடம் பெறவில்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகு , 'கட்டிப்புடி வைத்தியம்' வார்த்தைகளைச் சேர்த்து யு. எஸ். ஓபன் பொறுப்பாளர்கள் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.
2022இல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் எட்டு முறை சாம்பியனாக இருந்த ரோஜர் ஃபெடரர் பங்கு பெறவில்லை இருந்தாலும், போட்டிக்கு சிறப்புப் பார்வையாளராக வருகை தந்த ரோஜர் ஃபெடரர் படத்துடன் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' என்று பாடல்வரியைத் தலைப்பு வாக்கியமாகப் போட்டு விம்பிள்டன் டென்னிஸ் டிவிட்டர் பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.