ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: படை குணமாக வழி என்ன?

மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்து வர வேண்டியிருக்கிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: படை குணமாக வழி என்ன?
tylim
Published on
Updated on
2 min read

மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்து வர வேண்டியிருக்கிறது. அதன் பிறகு காலில் சிறிய படை ஏற்பட்டது. ஒரு வருடம் சிகிச்சை செய்தும் குணமாகவில்லை. தற்சமயம் கடுமையான எரிச்சல், கசிவுடன் அவதிப்படுகிறேன். எளிதான சிகிச்சை செய்து இதை குணப்படுத்த முடியுமா? மருந்து செலவு கட்டுபடியாகவில்லை.

சௌரிராஜன், சீர்காழி.

இந்த நோய் சண்டிக் குழந்தையைப் போன்றது. கடும் உழைப்பால் தீரக் கூடியது. நடுவில் ஏற்படும் சிறிய தவறால் கூட வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகிவிடும். அப்படி ஏமாற்றும் சுபாவம் கொண்ட உபாதையாகும்.

வயிற்றில் புளிப்பு சேராமல் அடிக்கடி பேதிக்குச் சாப்பிடுவது நல்லது. 'மாணிபத்ரம்' எனும் லேஹிய மருந்து இதற்குப் பயன்படும். புளியை முடிந்தால் அறவே தவிர்ப்பது (மாதுளம் பழப்புளிப்பு, நெல்லிக்காய் புளிப்பு சேர்க்கலாம்), உப்பை இரவு வேளை உணவுகளிலாவது தவிர்ப்பது (இந்துப்பு சிறிது சேர்க்கலாம்), உளுந்து ஊறவைத்துத் தயாரான உணவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை, வெல்லம், தயிர், அரிப்பு உண்டாக்கக் கூடிய கருணைக் கிழங்கு, கத்தரிக்காய், நல்லெண்ணெய் இவைகளைத் தவிர்த்தால், ஓரளவு நோயின் கடுமையைக் கட்டுப்படுத்தலாம்.

வேப்பம்பட்டை, கருங்காலிக்கட்டை, நெல்லிமுள்ளி (விதை நீக்கியது), நன்னாரி வேர்ப்பட்டை இந்த நான்கையும் சம அளவு சேர்த்துப் பெருந்தூளாக இடித்துக் கொள்ளவும். இதிலிருந்து சுமார் அறுபது கிராம் (மொத்தமாக) எடுத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு, நூற்றி இருபத்து ஐந்து மில்லியாகச் சுண்டும்படி கஷாயமாகக் காய்ச்சிக் கொள்ளவும். இதைச் சர்க்கரை சேர்த்து, பாதியைக் காலையிலும், மீதியை மாலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும்.

ஊன் நீராகக் கசியும் இடங்களில் நுண்ணிய தூளாகிய திரிபலையைத் தூவிவிடவும். மாற்றாக, கத்தக் காம்பையும் பயன்படுத்தலாம். கசிவும் அரிப்பும் நிற்கும். இதனால் வரட்சி ஏற்பட்டு, தோல் வெடிப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டால் முற்றிய தேங்காயைத் துருவி வெயிலில் காயவைத்து இடித்து எடுத்த எண்ணெய்யைத் தடவி வரவும்.

ஸர்ஜரஸம் எனும் வெள்ளைக் குங்கிலியத்தைப் பொடித்து, எண்ணெய்யில் குழப்பியும் தடவி வரலாம், பசலைக்கீரையை நன்கு அரைத்து வெண்ணெய் விட்டு குழப்பி மேல் தடவி விடலாம். இளஞ்சூடான சாதம் வடித்தக் கஞ்சியுடன் வேப்பிலைக் கஷாயத்தையும் கலந்து ஒத்தடம் கொடுக்கலாம். பிறகு அந்த இடத்தை நன்கு அலம்பி மேலாகத் துடைத்துவிடவும். உடனே வரட்சியும் தினவும் ஏற்பட்டால் மேலே சொன்னபடி வெண்ணெயைத் தடவி விடவும்.

இந்த நோயைக் குணப்படுத்த கிராமங்களில் ஒரு மூலிகை வெண்ணெய் காய்ச்சி எடுப்பார்கள். தோல் நோய்களில் தோலுக்குப் பலமும் வெண்மையும் அளித்து பயன்படக் கூடிய நால்பால் மரங்களாகிய ஆல், அரசு, அத்தி, இச்சி ஆகியவற்றை வகைக்கு கால் கிலோ எடுத்து இடித்து நான்கு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி ஒரு லிட்டர் மீதமானவுடன் வடிகட்டி அதை ஒரு லிட்டர் பாலுடன் சேர்த்து பால் மாத்திரம் சுண்டும் வரை சுண்டக் காய்ச்சவும்.

இந்தப் பாலைப் புரை குத்தித் தயிராக்கிக் கடைந்து வெண்ணெய் எடுத்தோ, பாலையே சிலுப்பி எண்ணெய் எடுத்தோ அதை மேல் குறிப்பிட்ட ஸர்ஜரஸத் தூள் கலந்து மேல் பூச்சாகப் பயன்படுத்த நோய் மறைந்து தோலும் பழைய நிலைக்கு வரும்.

படையில் ஏற்பட்டுள்ள எரிச்சல், கசிவு போன்ற அறிகுறிகள் ரத்தம் அவ்விடத்தில் கெட்டு போய்விட்டதை அறிவிக்கின்றன. கெட்ட ரத்தத்தை உறிஞ்சி வெளியேற்றும் அட்டைப் பூச்சி சிகிச்சை செய்தல் உங்களுக்கு மிகவும் நல்லது. தற்சமயம் பல ஆயுர்வேத மருத்துமனைகளில் இந்தச் சிகிச்சை முறை செய்யப்

படுகிறது. உள்மருந்தாக, கசப்பும் துவர்ப்பும் கொண்ட பல மூலிகைக் கஷாயங்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. அவற்றையும் நீங்கள் வெளிப்புறச் சிகிச்சையுடன் சேர்த்துப் பயன்படுத்தினால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com