46 ஆண்டுகளில் 172 முறையாக ரத்த தானம்

புதுக்கோட்டை நகரில் வளர்ப்புப் பறவைகள், மீன் குஞ்சுகள் விற்பனையகம் நடத்தி வரும் அறுபத்து மூன்று வயதான சு. கண்ணன், 1979ஆம் ஆண்டில் முதல் முதலாக ரத்தத் தானம் அளிக்கத் தொடங்கினார்.
46 ஆண்டுகளில் 172  முறையாக ரத்த தானம்
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை நகரில் வளர்ப்புப் பறவைகள், மீன் குஞ்சுகள் விற்பனையகம் நடத்தி வரும் அறுபத்து மூன்று வயதான சு. கண்ணன், 1979ஆம் ஆண்டில் முதல் முதலாக ரத்தத் தானம் அளிக்கத் தொடங்கினார். நாற்பத்து ஆறு ஆண்டுகளில் 172ஆவது முறை ரத்தம் தானமாக அளித்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'1979-இல் முதல் முறையாக புதுக்கோட்டையில் ரத்த தானம் அளித்தேன். அதன்பிறகு, வேலைக்காக சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றபோதும் பலமுறை ரத்த தானம் செய்தேன்.

புதுக்கோட்டையில் 1985இல் 'பெரியார் ரத்த தான இயக்கம்' தொடங்கினோம். எனது குடும்பத்தில் மூத்த சகோதரி பதினைந்து முறையும், இளைய சகோதரி 2 முறையும் ரத்தம் கொடுத்திருக்கின்றனர். எனது மனைவி, இரு மகன்கள் அனைவரும் ரத்த தானம் செய்வோர்தான். என்னோடு யாராவது சில காலம் நட்பாக இருந்தால் போதும், அவர்களும் ரத்த தானம் செய்வோராக மாறிவிடுவார்கள்.

எனது ரத்தம் 'ஏ நெகட்டிவ்' என்ற அரிய வகை. அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியில் கொடையாளர் பட்டியலில் இருக்கிறேன். சரியாக மூன்று மாதங்கள் கழித்து அவர்களே அழைப்பார்கள். மூன்று மாதங்களாகியும் அழைக்கவில்லையெனில் நானே கூப்பிட்டு கேட்பேன்.

2002-இல் நான் 109ஆவது முறையாக ரத்தம் கொடுத்திருந்தேன். இதைப் பாராட்டி அப்போதைய அமைச்சர் என். தளவாய்சுந்தரம் எனக்கு தங்கப் பதக்கம் அணிவித்தார்.

172-ஆவது முறையாக ரத்த தானம் செய்ததற்காக, சென்னையில் அண்மையில் நடைபெற்ற குருதிக் கொடையாளர் நாள் விழாவில், எனக்கு 'தொடர் குருதிக் கொடையாளர்' என்ற விருதை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர், புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் மு. அருணாவும் பாராட்டினார்.

ரத்த தானம் செய்வது என்பது ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி மனிதர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்பு. உடல் நலமுடன் இருக்கும் வரை ரத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.

சிங்கப்பூரில் அதிக முறை ரத்த தானம் வழங்கியோருக்கு நீல வண்ண அட்டை தருகின்றனர். அந்த அட்டையைக் கொண்டு, மருத்துவச் சிகிச்சைக்குப் போனாலும் அத்தனையும் இலவசம். அந்தளவுக்கு அங்கே விழிப்புணர்வு அதிகம். இந்தியாவிலும் ரத்த தானம் செய்வோருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்' என்கிறார் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com