
பி.பெரியார்மன்னன்
வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எம். சந்திரசேகரன். தனது அயராத உழைப்பால் அரசு ஒப்பந்ததாரராக உயர்ந்து லட்சியத்தை அடைந்தவர்.
இளமைப் பருவத்திலேயே அனைத்துத் தரப்பு மக்களோடும் மனிதநேயத்தோடு அன்பாக பழகும் இவர், 1992இல் அரிமா சங்கத்தைத் தொடங்கி, சேவையாற்றிவருகிறார்.
முப்பத்து மூன்று ஆண்டுகளாக, வாழப்பாடி அரிமா சங்கம் வாயிலாக இலவச கண் சிகிச்சை முகாம்கள், ரத்த தான முகாம்கள், சர்க்கரை நோய் சிகிச்சை முகாம்களை நடத்தி, ஆயிரக்கணக்கானோரின் நோயற்ற சுகவாழ்வுக்கு வழிவகை செய்து வருகிறார். மூன்று ஆண்டுக்கு முன் 'அன்னசுரபி' என்ற திட்டத்தை ஏற்படுத்தி, பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகை தரும் கர்ப்பிணிகளுக்கு அறுசுவையான மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'ஏற்காட்டில் அரிமா சங்கத்தின் வாயிலாக தலைமைப் பண்பு பயிலரங்கம் அமைவதற்கு உறுதுணையாக இருந்ததால், 'நல்லெண்ண தூதுவர்' என்ற பதவியை வழங்கி, மாவட்ட அரிமா சங்கம் கெளரவித்துள்ளது.
நூல்களை வாசிக்கும் பழக்கம் உடைய நான் எழுத்தாற்றலும் கொண்டுள்ளேன். சுவையான உணவகங்கள் குறித்து 'நாக்கை நம்பி வாழற ஜாதி' என்ற புத்தகத்தையும், முருகப் பெருமானைப் புகழ்ந்து 'திருமுருக அந்தாதி' என்ற நூலையும் எழுதியுள்ளேன். 'அரிமா முழக்கம்' என்ற இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்துவருகிறேன்.
அரிமா சங்கங்கள் வாயிலாக பல்வேறு கருத்தரங்குகள் பட்டிமன்றங்களிலும் பங்கேற்று தன்னம்பிக்கை பேச்சை வலியுறுத்துகிறேன். எனது மேடை பேச்சுகளை தமிழ் கடல் நெல்லை கண்ணன், தமிழ்நெஞ்சன் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பயனுள்ள கட்டுரைகளையும், அரசியல் தலைவர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களையும் தொடராக எழுதி, இளையத் தலைமுறையினரின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வழிகாட்டி வருகிறேன்.
பெண்களை மட்டுமே உறுப்பினராக கொண்ட 'அன்னை அரிமா சங்கம்' எனும் அமைப்பை ஏற்படுத்தி, தொடர்ந்து வழிநடத்தி வருகிறேன்' என்கிறார் சந்திரசேகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.