விஜயின் கடைசி நாள் படப்பிடிப்பு மமிதாவின் எமோஷனல்!
விஜயின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்ட விடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது.
அ. வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகை மமிதா பைஜுவுக்கும் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்கள்.
அவருக்கும் சினிமா பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். விஜய் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மமிதா பைஜு, 'விஜய் ரொம்பவே பண்பாக இருப்பார். படப்பிடிப்புத் தளத்திற்கு அவருக்குச் சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர் வந்துவிடுவார். விஜய் சூப்பர் கூல்! எப்போதுமே அவர் அமைதியாகத்தான் இருப்பார்' எனக் கூறியிருந்தார்.
தற்போது சமீபத்திய நிகழ்வு ஒன்றிலும் விஜய் பற்றிப் பேசியிருக்கிறார். அந்தக் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்வில் அவர், 'நான் விஜய்யிடம், 'இதுதான் உங்களுக்குக் கடைசி படமா? அப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்' எனக் கேட்டேன்.
அதற்கு அவர், 'தெரியவில்லை. தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அது தெரியும்' என்றார். கடைசிக் கட்டப் படப்பிடிப்புகளில் நாங்கள் அனைவரும் எமோஷனலாகிவிட்டோம். அப்போது விஜய்யும் எமோஷனலாகிவிட்டார்' எனக் கூறினார்.
இந்தத் தலைமுறைக்கு தெரிய வேண்டிய கதை சரத்குமார்!
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள 'கண்ணப்பா' வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் 'கண்ணப்பா'
படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில், நடிகர் சரத்குமார் பேசுகையில், ' கண்ணப்பா ஒருவரிக்கதை தான். 63 நாயனார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் சிவபக்தர்களில் மிக சிறப்பு வாய்ந்தவர், என்பது நமக்கு தெரியும். நம்பிக்கையற்றவர், பிறகு நம்பிக்கையுள்ளவராக மாறுகிறார்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், அவருக்கான போராட்டம் என்பது தான் இந்த படத்தின் கரு. இதற்கு காரணம் படத்தின் லொக்கேஷன் தான். இயற்கையின் சொர்க்கம் என்றால் அது நியூசிலாந்து தான். அங்கு இருப்பது நிஜமான வண்ணம், ஒரிஜினல் வண்ணம் என்று தைரியமாக சொல்லலாம். அந்த இடத்தில் 10 நாள்கள் அல்லது 20 நாள்கள் படப்பிடிப்பு நடத்தலாம், ஆனால் 120 நாள்கள் வெளிநாட்டில் படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.
அதற்கான உழைப்பு என்பது மிகப்பெரியது. அந்த காலத்தில் இந்த பூமி இப்படி தான் இருந்திருக்கும் என்று அந்த இடத்தை தேர்வு செய்தார்கள். குளிர் அதிகமாக இருந்தாலும், பணியை சிறப்பாக முடித்தோம். பராசக்தி படம் போல் வசனம் பேசும் காட்சிகளும் படத்தில் இருக்கிறது.
அப்படி ஒரு மனப்போராட்டத்தில் இருக்கும் தின்னா எப்படி சிவபக்தராக மாறுகிறார் என்பது தான் கதை. நான் தின்னாவின் அப்பாவாக நடித்திருக்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம், எனக்கும் தின்னாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரியது. அக்ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ் என பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
தற்போதைய தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளைச் சொல்ல மறந்துவிடுகிறோம். பொன்னியின் செல்வன் கதை மூத்தவர்களுக்கு தெரியும், ஆனால் இளைய தலைமுறைகளுக்கும் தெரிய வேண்டும், என்று தான் மணிரத்னம் அதைப் படமாக எடுத்திருக்கிறார். அதேபோல் தான், கண்ணப்பா கதையும் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.' என்றார்.
தனுஷை புகழ்ந்த ராஷ்மிகா!
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன்
20ஆம் தேதி ரிலீஸ் ஆன 'குபேரா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷ் குறித்து நீண்டப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்அதில், 'தனுஷ் சார் உங்களுடன் நான் முழுப் படம் நடித்திருந்தாலும், இதுதான் நானும் நீங்களும் சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். ஒவ்வொரு நாளும் மிகவும் கடினமாக உழைத்ததற்கு மிக்க நன்றி. நாம் வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறு வேலைகளில் இருக்கும்போது ஓய்வு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறோம்.
ஆனால் அந்த ஓய்வை நம்மால் பெறமுடியாது என்பதையும் அறிவோம். மேலும் குபேராவில் மட்டுமல்ல, எல்லா படத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கியதற்கு நன்றி. என்னிடம் மட்டுமல்ல உங்களுடன் பழகிய அனைவருடனும் அன்பாக இருந்தீர்கள். படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் எனக்கு எத்தனை லட்டுகள் கொடுத்தீர்கள் என்பது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் அதை மறக்கமாட்டேன்.
படப்பிடிப்பில் தமிழ் வரிகளை கற்றுக்கொடுத்த விதம், எப்படி நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அதை சரியாக செய்துவிட்டால், நன்றாக இருந்தது என்ற பாராட்டு என அனைத்தும் அற்புதமான அனுபவம். இது அனைத்தும் சாதாரண விஷயங்களாக உங்களுக்குத் தோன்றலாம். இப்போது மட்டுமல்ல எப்போதும் உங்களுக்கு எல்லா நல்ல விஷயங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.