
உலகிலேயே உயில் எழுதும் வழக்கம் முதன்முதலில் 1102ஆம் ஆண்டில் தொடங்கியது. சிசிலி நாட்டில் அப்போது ஆண்டு வந்த மன்னர் ரோஜர், தனது சொத்துகளை உயிலாக எழுதிப் பதிவு செய்தார்.
உலகில் நடிகர்களுக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் அமைத்த நாடு இங்கிலாந்து. ஆங்கில நடிகர் வென்லிவாலா என்பவருக்கே முதலில் தொடங்கப்பட்டது. பின்னர்தான் பிற நாடுகளிலும் பரவியது.
மூதறிஞர் ராஜாஜி சென்னை தி.நகர் பகலுல்லா சாலை வீட்டில் வசித்து கொண்டிருந்தபோது, ஒருநாள் அவரை மைசூரு மகாராஜா காண வந்திருந்தார். அவரை வரவேற்க ராஜாஜி வெளியே வந்தபோது, திடீரென அவரது காலில் விழுந்து வணங்கினார் மகாராஜா. அதைக் கண்டு பதறிய ராஜாஜி, 'மகாராஜா என்ன காரியம்.. நீங்கள் இப்படி செய்துவிட்டீர்களே'' என்று வருந்தினார். உடனே மகாராஜா, 'நீங்கள் சக்கரவர்த்தி'' என்று சொல்லி சமரசம் செய்தார்.
காமிராவின் "கிளிக்' ஒலி கேட்டு பூரித்துப் போனாள் அந்தச் சிறுமி. அந்தப் பெண் தன் அப்பாவிடம், 'புகைப்படத்தை எப்போது பார்க்கலாம்?'' என்று ஆவலோடு கேட்க, 'கொஞ்சம் நாள் பொறு.. பார்க்கலாம்'' என்றார் அவர்.
'இப்போது பார்க்க முடியாதா?'' என அச்சிறுமி வேதனையுடன் கேட்க, சிறுமியின் அப்பாவைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் சாமானியர் அல்ல; இயற்பியல் வல்லுநர் எட்வின் ஹெர்பர்ட் லாண்டு. தன் மகளை மகிழ்ச்சியூட்டுவதற்காக, உலகையே கவர்ந்த "போலராய்டு' காமிராவை கண்டுபிடித்தார். இதன்மூலம் எடுத்தப் படத்தை உடனே பார்க்க முடிந்தது.
ரயிலில் பயணம் செய்யும்போது மூன்றாம் வகுப்புக்கான பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு, மீதமான பணத்தில் நூல்களை வாங்குவார். அப்படி மிச்சம் பிடித்தே ஏராளமான நூல்களை வாங்கிய அவர், சிறிது காலத்திலேயே பெரிய நூலகத்துக்குச் சொந்தக்காரராகிவிட்டார். அவர்தான் ஜி.டி.நாயுடு.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
பல்துறை வித்தகரான பாரதியார், பத்திரிகைத் துறையிலும் சாதனைகளைப் படைத்தார். அவர் நாளேடு ஒன்றுக்கு ஆசிரியராக இருந்தார் என்றால், அது "விஜயா' ஆகும். எட்டு மாதங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். மண்டயம் திருமலாச்சாரியாரால் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ், ஆங்கிலேயர் அளித்த நெருக்கடியால் நிறுத்தப்பட்டது. பின்னர், புதுச்சேரியில் இருந்து 1909 செப். 7 முதல் மீண்டும் வெளிவந்தது. "பிரெஞ்சு இந்தியாவில் வெளிவந்த முதல் தமிழ் மாலை நாளிதழ்' என்ற பெருமை இந்த நாளிதழுக்கு உண்டு.
த.சீ.பாலு, அத்திப்பட்டு.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ்ஹால் எனும் தளபதி கிரீன்லாந்து மீது படையெடுத்தார். அதற்கு முன்பே கிரீன்லாந்து மீது டென்மார்க் படையெடுத்து, சேதத்தை உண்டாக்கியிருந்தது. எச்சரிக்கையாக இருந்த உள்ளூர் மக்கள் படகில் தங்களை ஆக்கிரமிக்க வந்த படையின் மீது சரமாரியாக அம்புகளைத் தொடுத்தனர்.
இதில், ஜேம்ஸ்ஹால் இறந்தார். இதனால் அந்தப் படகுகள், இங்கிலாந்துக்குத் திரும்பின. தங்களது படைத்தலைவரின் இறப்புக்குத் துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக, அடுத்தக்கட்ட தலைவர் கப்பலில் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார். அந்த வழக்கம் உலகம் முழுவதும் பரவிவிட்டது.
தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.