ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடைவாசஸ்தலமான நேடார் ஹட், மிக உயரமான மலைப் பிரதேசங்களில் ஒன்றாகும். இங்கு சூரியன் மறையும் காட்சியானது பிரபலம்.
கண்களைக் கவரும் மிக அழகிய பூமி. நீர்வீழ்ச்சிகளும் அதிகமாக இருக்கின்றன.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்தபோது, மிகப் பெரிய வங்காள மாகாணத்தின் பீகார் ஒரிஸ்ஸா சமஸ்தானத்தில் நேடார் ஹட் இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் ஆளுநராக இருந்த சர் எட்வர்ட் கெயிட் என்பவருக்கு நேடார் ஹாட் ரொம்பவும் பிடித்துப் போனது. இங்கு சார்லெட் என்ற பங்களாவில் அவர் தனது மகள் மக்னலோவியாவுடன் அவ்வப்போது இங்கு வருகை தருவார்.
குதிரையில் ஏறி ஊரை வலம் வருவதில் அலாதி பிரியம் கொண்ட மக்னலோவியா, ஒருநாள் கால்நடைகளை மேய்க்கும் 'படுக்' என்ற கிராமத்து இளைஞன் புல்லாங்குழல் வாசிப்பதைப் பார்த்தாள். பிறகு அடிக்கடி வந்து கேட்டாள். காதல் மலர்ந்தது.
ஒருநாள் தந்தைக்கு விஷயம் தெரிந்தது. கடும் கோபமடைந்த அவர் தன் வீரர்களிடம் படுகையைத் தூக்கி பல நூறு அடி கொண்ட ஆழத்தில் தூக்கி எறிந்துவிட சொன்னார். இதையறிந்த மக்னோலியா, தானும் அதே பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். தற்கொலை நடந்த இடமே காதல் நினைவுச் சின்னமாகி விட்டது. இன்று 'மாக்னோலியா பாயின்ட்' என அழைக்கப்படும் நிலைக்கு சென்றுவிட்டது.
இங்கு தகடுகளில் காதல் கதை எழுதப்பட்டு பார்வைக்கு உள்ளது. படுக்மக்னோலியாவின் காதல் சிலைகளும் உள்ளன. பெயின்டிங்கிலும் கதைகள் வரையப்பட்டுள்ளன.
இதுதவிர இயற்கை அழகுக்கு பேர் போன நேடார் ஹாட்டை 'சோட்டா நாக்பூரின் ராணி' எனவும் அழைக்கின்றனர்.
காரணம் ,சோட்டா நாக்பூர் உள்ள பீட பூமியின் உயரமான இடத்தில் கடல் மட்டத்தில் இருந்து 375 அடி உயரத்தில் நேட்டார் ஹாட் உள்ளது. மலைகள் , அடர்ந்த வனப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் என்பதால் ஆண்டு முழுவதுமே நல்ல சீதோஷ்ணம் நிலவுகிறது.
செர்ரி பூக்களும் சீசனும்...
'செர்ரி பூக்கள்' என்றதுமே நினைவுக்கு வருவது ஜப்பான்தான். மார்ச் மாதத்தில்துவக்கம் முதல் எப்போது வேண்டுமானாலும் 15 நாள்களுக்குள் முழுமையாக மலர்ந்து விடும்.
'சொராசஸ்' என்பது நூறு வகையான செர்ரி மரங்களைக் கொண்டது. 'சகுரா' என்றும் அழைப்பர். குறிப்பாக, அலங்கார செர்ரி மரங்களைக் குறிப்பது. வெண்ணிலா வண்ணத்தில் வாசனையுடன் இருக்கும்.
ஜப்பானின் குன்மாவின் டேட் பயஷியில் உள்ள செளனோமோரி தோட்டத்தில் பூக்கள் விசேஷம். வடக்கு அரைக்கோளம், கிழக்கு ஆசியாவில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகமானது.1912இல் நட்பின் அடிப்படையில் செர்ரி மரங்களை அமெரிக்காவுக்கு ஜப்பான் வழங்கியது. இன்று உலகின் பலநகரங்களிலும் செர்ரி பூக்கள் பூத்து, அந்தந்த பகுதி சுற்றுலா பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தை அளிக்கின்றன.
ஜப்பானில் பல்வேறு நகரங்களிலும், தைவான் நாட்டின் தைப்பி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ், கனடாவின் வான்கூவர், தென் கொரியாவின் சியோல் , வியத்நாமின் ஹனாய், அமெரிக்காவில் வாஷிங்டன் உள்ளிட்ட இடங்களிலும் செர்ரி பூக்கள் கண்காட்சிகள் மிக சிறப்பாக நடக்கின்றன.
இந்தியாவில் நாகாலாந்தில் ஜனவரிஏப்ரல், செப்டம்பர்அக்டோபர் என இரு சீசன்களில் பூத்துக் கொட்டும்.
மேகாலயாவின் ஷில்லாங், ஹிமாசலப் பிரதேசத்தின் பல நகரங்களிலும், சிக்கிமில் லாச்சென், லாச்சஸ், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங், அருணாசலப் பிரதேசத்தின் ஜிலோ பள்ளத்தாக்கிலும் அக்டோபர்நவம்பர் மாதங்களில் பூக்கின்றன.
மெட்ரோ ரயில்...
இன்று மெட்ரோ ரயில்கள் உலகின் பல நாடுகளிலும் இயங்குகின்றன.அவற்றில் மிக அதிக மெட்ரோ ரயில்கள் எங்கு ஓடுகின்றன என்பது தெரியுமா?
சீனாவில் 10,187 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஷங்காய் நகரில் மட்டும் 8,961கி.மீ. தொலைவில் 808 ரயில் நிலையங்கள் உள்ளன. பீகிங்கில் 879 கி.மீ. தொலைவில் 523 ரயில் நிலையங்களை இணைத்து ஓடுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் 245 மைல் தூரத்தில் 472 ரயில்நிலையங்களுடன், சிகாகோவில் 224 மைல் தூரத்தில் 145 ரயில்நிலையங்களும், வாஷிங்டனில் 117 மைல் தூரத்தில் 91 ரயில் நிலையங்களும் உள்ளன.
ஜப்பான், கொரியா நாடுகளிலும் மெட்ரோ ரயில்கள் பெரிய அளவில் ஓடுகின்றன.
இந்தியாவில் தில்லியில் 391கி.மீ. தொலைவில் 286 ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் கடக்கிறது. கொல்கத்தாவில் 1984இல் முதன் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, டம்டம் டாலிகஞ்ச் இடையே ஓடியது. இந்தியாவின் இரண்டாவது மெட்ரோ ரயில் சேவை ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. பெங்களூரு, மும்பை உள்ளிட்ட மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.
சென்னையின் முதல் மெட்ரோ 2015 ஜூன் 29இல் ஆலந்தூர் கோயம்பேடு இடையே ஓடியது.