ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரவில் ஊர் சுற்றினால் ஏற்படும் உடல் பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?

வேலை தேடிக் கொண்டிருக்கும் எனது 23 வயது மகன், தனது நண்பர்களுடன் இரவில் அதிகம் ஊர் சுற்றுகிறான்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரவில் ஊர் சுற்றினால் ஏற்படும் உடல் பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
Published on
Updated on
2 min read

வேலை தேடிக் கொண்டிருக்கும் எனது 23 வயது மகன், தனது நண்பர்களுடன் இரவில் அதிகம் ஊர் சுற்றுகிறான். பகலில் மதியம் வரை படுத்து உறங்குகிறான். இதனால் அடிக்கடி அவன் உடல்நலம் கெடுகிறது. ஆனாலும், பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறான். அவனை எப்படித் திருத்தி உடல் நலம் மேம்படுத்துவது?

சித்ரா, பெருங்குடி, சென்னை.

உடற்பயிற்சி, இரவில் கண்விழிப்பு, வழிநடத்தல், புணர்ச்சி, அதிகச் சிரிப்பு, பேச்சு இவைகளில் சக்திக்கு மீறி ஈடுபடக் கூடாது. யானையை இழுக்கத் துணியும் சிங்கம் வலுவிழந்து மடிவதுபோல, இவைகளில் சக்திக்கு மீறி ஈடுபடுபவன் கேடுறுவான் என்று ஆயுர்வேதத்தின் நல்லொழுக்கப் பரிந்துரையை உங்கள் மகன் ஏற்பது நல்லது.

நண்பர்களுடன் இரவில் கண் விழித்து, அங்குமிங்கும் ஊர்சுற்றி, கும்மாளத்துடன் கூடிய சிரிப்பும், பேச்சும், உடல் உட்புற நாடி நரம்புகளை வலுவிழக்கச் செய்து வாயுவின் குணங்களாகிய வரட்சி, லேசானத் தன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு, நுண்ணியத்தன்மை, நகரும் தன்மை போன்றவை சீற்றம் அடைந்து கடும் வாதநோய்களை எதிர்காலங்களில் ஏற்படுத்தும்.

உணவுசொல் மருந்து ஆகியவற்றை நல்லவிதத்தில் எடுத்து கூறக்கூடிய பெரியோர்களின் உபதேசங்களை அவரும் நண்பர்களும் கேட்கச் செய்ய வேண்டும். இளைஞர்களின் மனதை நல்வழியில் மாற்றிடச் செய்யும் எத்தனையோ பெரியோர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர்.

'மனிதன்' என்ற சொல்லே 'மனதின் வசப்பட்டு இயங்குபவன்' என்பதால் ஏற்பட்டது. மனிதனின் வாழ்க்கையில் மனமும் புத்தியும் பெரும் பங்குகொள்கின்றன. உடலை வளர்க்க உதவும் உணவு மனதையும் புத்தியையும் மனமும் ஸத்துவம், ரஜஸ், தமஸ் என்ற முக்கணங்களின் ஆளுகைக்குட்பட்டவை. ஸத்துவம் என்பது அறிவையும், ரஜஸ் என்பது முயற்சியையும் தமஸ் என்பது இவ்விரண்டையும் கட்டுப்படுத்துவதையும் குறிக்கும்.

மகன் இரவு நேரங்களில் உணவை வெளியே சாப்பிடாதவாறு நீங்களே சமைத்த உணவை உண்ணச் செய்ய வேண்டியது அவசியமாகும். சூடாகப் பருப்புடன் நெய் சேர்ந்த அன்னத்தைக் கெட்டியாக முதலாவதாகவும், புளிப்பு, உப்பு இவை தூக்கி நிற்கும் ரசம் சாதத்தை நடுவில் மோருடன் கூடிய அன்னத்தைக் கடைசியிலும் உண்ணச் செய்தால், ஸத்வகுணம் அவரது மனதில் ஓங்கி நிற்கச் செய்யும்.

இதையே தொடர்ந்து இரவில் கொடுத்துவந்தால் நாளடைவில் அவருக்குப் பகுத்தறிவு, பொறுமை, சந்தோஷம், மென்மை, தயை, பாபச் செயல்களில் வெறுப்புணர்ச்சியுடன் கூடிய வெட்கம், மனத்தெளிவு, பற்றற்றிருத்தல், உடல் லேசாக இருத்தல் போன்றவை ஏற்படத் தொடங்கி, இரவில் நண்பர்களுடன் ஊர்சுற்றுவதால் பயனேதுமில்லை என்பதை உணரத் தொடங்குவார்.

இரவில் பிரியாணி, புலால் வகை உணவுகள், குளிர்பானம், மதுபானம் அருந்துதல் போன்றவற்றில் இளைஞர்கள் காட்டும் ஆர்வத்தின் விளைவாக, ரஜோகுணம் அதிகரித்து அஹங்காரம், உணர்வுக் கொந்தளிப்பு, நிலை

தடுமாற்றம், பேராசை, பொறாமை, கவலை, பற்று அதிகமாகுதல், எதையுமே ஆழ்ந்து யோசிக்காமல் பரபரப்புடன் ஈடுபடுதல், தமோகுணமேலீட்டை அதிகமாக்கும் மறுபடியும் சூடாக்கிய உணவு வகைகள், பழைய உணவுகளைப் புதியதாகச் சேர்த்து சாப்பிடுதல் ஆகியவற்றால் அறிவுமந்தம், சோம்பல், அசதி, மெத்தனம் என்றெல்லாம் ஏற்பட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு சஞ்சலம், துக்கத்துடன் வாழ்கின்றனர். இவற்றுக்கான விடியலை அவர்கள் உணவு, நன்னடத்தையால்தான் பெற முடியும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com