அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வர இரவு எட்டு மணி ஆகியிருந்தது. சென்னையில் என் அலுவலகம் இருப்பதோ அசோக் நகரில். வீடோ மாடம்பாக்கத்தில். தனி வீடு கட்டிக் கொண்டு இங்கு குடியேறி ஒன்றரை வருடங்களாகி இருந்தன.
இதற்கு முன்னால் வேறு இடத்தில் குடியிருந்தோம். தினமும் பல கி.மீ. பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. வாசல் கேட்டைத் திறந்தபோதே பார்த்தேன். வீட்டு வாசலில் இன்னும் விளக்கே போடவில்லை என்று. ஏன் இருட்டாக இருக்கிறது?
வீட்டில் இப்பொழுது அப்பா மட்டுமே இருந்தார். என் மனைவியோ மகன், மகளை அழைத்துகொண்டு, 'பத்து நாள் அம்மா தங்கி விட்டு வருகின்றேன்' என்று மதுரைக்குச் சென்றுள்ளாள்.
அம்மா மறைந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. அப்பா தனியாக இருக்கும் நாள்களிலும் கூட நான் இரவு வீட்டுக்கு வரும்போது விளக்கு ஏற்றி வைத்திருப்பாரே. இன்று என்ன ஆனது. அப்பா வீட்டில் இல்லையா? ஏதாவது ஆகியிருக்குமோ? என்ற கவலையோடு வாசலில் விளக்கைப் போட்டு விட்டு வீட்டுக் கதவைத் தள்ள தானாக திறந்து கொண்டது. ஹாலில் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் அப்பா.
அவர் முகத்தில் வலி தெரிய அவர் காலைப் பார்க்க, கட்டு போடப்பட்டிருந்தது. ஒரு நாற்காலியை அவர் அருகில் இழுத்துப் போட்டு, 'என்ன ஆச்சுப்பா?'' என்று கேட்டேன்.
அப்பா லேசாகப் புன்னகைக்க என் மனதுக்கு லேசான தெம்பு வந்தது. 'ஒண்ணுமில்லை ஹரி, சாயங்காலம் வெளியே போயிருந்தேன். ரோடுல நடந்து போயிண்டு இருந்தபோது ஒரு டூவீலர்காரன் செல்போன்ல பேசிண்டே வந்து என் மேல மோதிட்டான். அப்படியே விழுந்துட்டேன். ஒரு சாக்கடை இருந்தது. அதுல விழலை. என் செல்போன் சாக்கடையில விழுந்துடுத்து.
மூணு பேர் என்னைத் தூக்கி விட்டாங்க. அங்கேயே ஒரு க்ளினிக் இருந்தது. கால்ல அடிபட்டிருந்ததுக்கு கட்டு போட்டு ஒரு ஆட்டோவில ஏற்றி விட்டாங்க. பர்ஸ் பத்திரமா இருந்ததானல பணம் கொடுக்க முடிஞ்சது. இங்கே வந்தபோது என்னால காலை கீழேயே வைக்க முடியலை. ஆட்டோக்காரன் ஒருத்தனால என்னைப் பிடிச்சு வீட்டுக்குள்ள கொண்டு விட முடியலைன்னு பக்கத்து வீட்டுக்காரரையும் துணைக்குக் கூப்பிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து இந்த சேர்ல உட்கார வைச்சுட்டுப் போனாங்க. அப்போதிலேருந்து இப்படியே உட்கார்ந்திருக்கேன்.. .'' என்று சொன்னார் அப்பா.
'அப்ப என்ன டயம்?''
'ஆறு மணி இருக்கும்.''
'ரெண்டு மணி நேரமா இப்படியேவா இருக்கே?''
'என்ன பண்றது. காலை ஒரு அடி எடுத்து வைக்க முடியல. வலி..''
'பக்கத்து அபார்ட்மென்ட்ல இருக்கறவர் ஆட்டோக்காரனோடு சேர்ந்து உன்னை இங்கே உட்கார வைச்சுட்டுப் போனார்னு சொன்னியே. காப்பி குடிக்கறியான்னு கேட்டாரா?'' என்று கேட்டேன், கவலையோடு.
'ஏதாவது குடிக்க வேணுமான்னு கேட்டார். நான் எதுவும் வேண்டாம்னு சொன்னேன். அவருக்கு உடனே மொபைல்ல போன் கால் ஒண்ணு வந்துடுத்துடா. ஓடியே போயிட்டார். அப்புறம் யாரும் வரலை'' என்று சொல்லிவிட்டு அமைதியானார். முகத்தில் வலி வேதனையை வெளியிட்டார்.
'கொஞ்சம் இருப்பா'' என்று சொல்லிவிட்டு இரண்டு பேருக்கும் காப்பி கலந்து கொண்டு வந்து ஒன்றை அவரிடம் கொடுத்து இன்னொன்றை நான் எடுத்துகொண்டு அவர் அருகில் அமர்ந்து கொண்டு குடிக்க ஆரம்பித்தேன்.
'என்னப்பா இது.. பக்கத்து அபார்மென்ட்காரர் ஒரு தடவை கேட்டார் சரி. நீ வேண்டாம்னு சொல்லிட்டேங்கறே. அப்புறம் இந்த ரெண்டு மணி நேரத்துல ஒரு தடவை மறுபடி வந்து கேட்க வேண்டாமா?''
'என்னடா பண்ணறது. அவருக்கும் நமக்கும் என்ன பழக்கம் இருக்கு. நான் தான் புலம்பிண்டே இருக்கேனேடா பக்கத்து எதிர் வீட்டுக்காரங்கன்னு ஒருத்தரும் பழகவே மாட்டேங்கறாங்கங்கன்னு. அபார்மென்ட்லயே ஆறு குடித்தனம் இருக்கு. ஒருத்தரையும் தெரியலை. பக்கத்து அபார்மென்ட்டுல நவீன், ரிஷிதா படிக்கற ஸ்கூல்ல ஒர்க் பண்ணி ரிடயரான டீச்சர் இருக்காங்க. நாம இங்கே குடி வந்ததும் வந்து பார்த்தாங்கதான்.
அப்புறம் அவங்களுக்கு பேரன் பிறந்ததுன்னு வந்தனா கூட போய் பார்த்துட்டும் வந்தா. அப்புறமும் என்ன நவீன உலகமோ ஒருத்தரும் வர்றதோ போறதோ இல்லை. தீவுல இருக்கற மாதிரி இருக்கு. திரும்பினா அபார்ட்மென்ட், திரும்பினா வீடுகள்தான். என்ன ப்ரயோசனம்..'' என்று புலம்பித் தள்ளினார் அப்பா.
அப்படி புலம்பியபோது அவர் உடல் வேதனை கொஞ்சம் குறைந்திருக்கும் என்று எண்ணியது என் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. எத்தனை முறை இதைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கின்றார் அப்பா.
'அதெல்லாம் சரி, நான் எத்தனை தடவை நீ இனிமே அவ்வளவு தூரம் எல்லாம் போகாதே. வீட்டுக்குப் பக்கத்துத் தெரு, அடுத்த தெரு போகறதோட நிறுத்திக்கோன்னு சொன்னேன். கேட்கறியா?' என்று கேட்க நினைத்தேன். பலமுறை கேட்டிருக்கின்றேன்.
நாங்கள் முதலில் குடியிருந்த சேலையூரில் அவருக்கு நன்கு பழக்கம் உள்ள கடைக்காரர்களைப் பார்த்துப் பேசி, தெரிந்த போளி, பஜ்ஜி கடைகளில் சிறிது வயிற்றுப் பசி ஆற்றி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நான்கைந்து மாதங்கள் முன்பு வரை டூ வீலரில் சென்று வந்தார். 'இனிமேல் வேண்டாம்' என்றோம். அவராலும் முடியவில்லை. இப்பொழுது பேருந்தில் சென்று விட்டு வருகிறார். இன்னொரு முறை நான் சொன்னாலும் அவர் என்ன கேட்கவா போகிறார்.
'நான் குளிச்சுட்டு வரேன். படுக்கையில படுக்க வைக்கட்டுமா? படுத்தக்கறியா?'' என்று கேட்டேன்.
'வேண்டாம்டா. ஏதாவது சாப்பிட்டுட்டு ஒன்பதரை பத்து மணிக்கு படுக்கப் போறேன். அது வரைக்கும் உட்கார்ந்திருக்கேன்'' என்று சொன்னார்.
'சரி, உடனே குளிச்சுட்டு வந்துடறேன். எனக்கும் பசிக்கறது. டி.வி. போடட்டுமா. ஒவ்வொரு நியூஸ் சேனல்லயும் நாலைஞ்சு பேர் உட்கார்ந்துண்டு அரசியல் சண்டை போடுவாளே?'' என்று நான் கேட்க, அவர் தலையாட்டினார். அவருக்கும் பிடிக்கும் அவர்கள் சண்டை போடுவது.
டி.வி.யை ஆன் செய்தேன். ஒரு செய்திச் சேனலில் இரண்டு எதிர் எதிர்கட்சிக் காரர்கள் பேச்சு குத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
மறுநாள் காலையில் நான் எழுந்தபோது, மணி ஆறரை. அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். தினமும் ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். காப்பி குடித்து வாக்கிங் போய்விட்டு வந்து முடிந்த வேலைகளைச் செய்து கொண்டு சுறுசுறுப்பாக இருப்பார். பேரன், பேத்தி பள்ளிக்குக் கிளம்ப உதவி செய்வது போன்ற ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்.
ஆறரை மணியாகி, சூரியன் வேலைக்குக் கிளம்பி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விட்ட பிறகும் உறங்கிக் கொண்டிருக்கின்றார் என்றால் உடல் களைப்பு என்பது மட்டும் இல்லாமல் இரவு அவருக்கு உறக்கம் வர வெகு நேரம் ஆகி இருக்க வேண்டும் என்பது புரிந்தது. நான் ஒரு காப்பிக் கோப்பை துணையுடன் என்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டு நிமிர, அப்பொழுது உறக்கத்திலிருந்து கண் விழித்திருந்தார்.
'எழுந்திருக்க முடியுமாப்பா?''
'வலி நிறைய குறைஞ்சிருக்குடா. மருந்து கொடுத்திருக்காரே. தூக்கம் வர லேட் ஆச்சு. ராத்திரி ரெண்டு மூணு தடவை மெதுவா எழுந்து நின்னேன். பாத்ரூம் எல்லாம் போக வேண்டாமா?'' என்று சொல்லியபடியே மெதுவாக நான் கையைப் பிடித்துகொள்ள எழுந்து பல் தேய்க்க வாஷ் பேஸினை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்பாவின் மன உறுதியைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் கையில் ஒரு காப்பிக் கோப்பையைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தவர் முகத்தில் நேற்று இருந்ததை விட பல மடங்கு தெம்பு தெரிய எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
இன்றைக்கு கம்பனிக்கு போக வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் ஒன்று, கைப்பேசி அழைப்புகள் வரும் பாருங்கள். மேற்பார்வையாளர் பதவியில் இருந்தால் தொலைந்தோம். அதில் சந்தேகம், இதில் சந்தேகம் என கேட்டு நொடிக்கு ஒரு கைப்பேசி அழைப்பு செய்து துளைத்தெடுத்து விடுவார்கள். வீட்டிலிருந்து வேலை செய்தால் இரவு எட்டு மணி வரைக்குமாவது கணினி முன் இருக்க வேண்டும். அந்த இள இரவில் இனிமேல் இயலாது என்று கணினிக்கு ஓய்வு கொடுத்து விட்டு எழுந்திருக்கும்போது, போர்க்களத்தில் ஒருநாள் முழுவதும் துப்பாக்கி சண்டை போட்ட உணர்வு இருக்கும்.
'நீ குளிச்சுட்டு கிளம்பணும் இல்லையா?''
'உன்னை இந்த நிலைமையில் விட்டுட்டு என்னால ஆபீஸ் போக முடியாது. ஒர்க் ப்ரம் ஹோம். இன்னிக்கும் நாளைக்கும்'' என்று சொன்னதும் அப்பா பதில் சொல்லவில்லை. அன்றைய செய்தித்தாளை படிப்பதற்காக தயாராக வைத்துக் கொண்டிருந்தார்.
'ஆனா ஒண்ணு. ஆபீஸ் கிளம்பணும்னா சுறுசுறுப்பா இத்தனை நேரம் கிச்சன்ல இருந்திருப்பேன். ஒர்க் ப்ரம் ஹோம்னதும் மனதுலயும் உடம்புலயும் கிச்சன் டயர்ட்னஸ் ஏற்கனவே வந்தாச்சு. டிபன், சாப்பாடு எல்லாம் ஆர்டர் ப்ரம் ஹோம்தாம்பா. நிறைய ஒர்க் இருக்கு. இப்பவே கம்ப்யூட்டரை ஆன் பண்ணிடறேன்'' என்று கொஞ்ச நேரத்துல நான் சொன்னதுதான் தாமதம் அப்பாவின் வாயிலிருந்து பட்டென்று வார்த்தைகள் வெளி வந்தன.
'அதானே பார்த்தேன். உங்க தலைமுறை இன்னும் அடுத்த தலைமுறைக்கெல்லாம் ரொம்ப பிடிச்சது. இதைத்தான் என்.எஸ். கிருஷ்ணன் அன்னிக்கே பாடினார் போல இருக்கு 'பட்டனை தட்டி விட்டா தட்டுல ரெண்டு இட்லியும் சட்னியும்'னு. மொபைல்ல பட்டனை தட்டிட்டு கதவைத் திறந்து வைச்சுண்டு உட்கார்ந்தா கொஞ்ச நேரத்துல மிலிட்டரிக் காரன் மாதிரி யூனிபார்ம்ல ஒருத்தன் இட்லி, தோசை, பிட்ஸான்னு அழகா கொடுத்துட்டுப் போயிடறான்..'' என்று அப்பா சொல்லும்போதே பிடித்துகொண்டேன்.
'நீங்களே சொல்றீங்க, அழகா கொடுத்துட்டுப் போயிடறான்னு. அப்புறம் என்ன.. '' என்று சிரித்தபடியே சொன்னேன்.
'போடா, வேலை செய்ய இஷ்டம் இல்லாதவங்க பண்ணற வேலை இதெல்லாம். ..'' என்று சொன்னவர் கம்பீரமானார். இந்த மாதிரி விஷயங்கள் பேசும்போது அவர் கொஞ்சம் சீரியஸாகி விடுவார்.
'ஏம்ப்பா இன்னிக்கு என்னை சோம்பேறிங்கறியா?''
'உன்னை சொல்லலைடா. உனக்கு ஆபீஸ் வேலை இருக்கு. நீ பெரிய போஸ்ட்ல இருக்கே. ஒர்க் ப்ரம் ஹோம். நாள் புல்லா கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கணும். கிச்சனுக்குள்ள நுழையவே நேரம் கிடைக்காது. ஆனா இந்த மாதிரி ஆர்டர் பண்ணறவங்க பல பேர் சோம்பேறித்தனத்துலதான பண்ணறாங்க. ஓட்டலுக்குப் போய் சாப்பிடக் கூட முடியலை.''
'தப்புங்கறியா. இதெல்லாம்?''
'எந்த விஷயத்தையும் அப்படியே தப்புன்னு சொல்லறது தப்பு ஹரி. அப்படி சொல்ல நான் யாருங்கறதோடு அப்படி சொல்லவும் கூடாது. ஆனா இந்த வசதிப் போர்வைக்குள்ள அழகா போய் தூங்க ஆரம்பிச்சுடறோம். தூங்கித் தூங்கி எல்லார் உடம்பும் குண்டு குண்டா ஆயிண்டிருக்கு. சின்னப் பசங்க பிட்ஸாவா ஆர்டர் பண்ணி வீட்டுக்கு வரவழைச்சு சாப்பிட்டு எவ்வளவு குண்டா இருக்காங்க பாரு. எதிர்காலத்துல என்னன்ன வியாதி வருமோ. இப்ப புரியாது'' என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்க, அவர் ஆரம்பித்தால் முழு வீச்சில் பந்து வீசுவார் என தெரிந்து கொண்டு உடனே கணிணியை இயக்கி அலுவலக வேலையில் மூழ்கினேன்.
காலை டிபன் ஒரு மெஸ்ஸிலிருந்து ஆர்டர் ப்ரம் ஹோம். காலை ஏழு மணிக்கே நான் அலுவலக வேலையைத் தொடங்கினாலும் அந்த நேரத்தில் கூட என்னை சந்தேகம் கேட்டு துளைத்தெடுப்பதெற்கென்றே வீட்டிலேயே வேலையை ஆரம்பித்து விட்டார் உதவியாளர் ஒருவர்.
அப்பாவுக்கு இந்த உணவு ஆஃப்களில் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவது மட்டும் என்று இல்லை, ஆன்லைனில் ஆர்டர் செய்து மளிகைப் பொருள்கள் வாங்குவது இதெல்லாம் கூட பிடிக்காது.
'இது மூலமா எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கறது?'' என்று கேட்பேன்.
'ஒத்துக்கறேன். ஆனா ஒரு விஷயத்தை மறந்துடற. மனிதனுக்கும் மனிதனுக்கும் இருக்கற தொடர்புங்கறது குறைஞ்சுண்டே வர்றது கவனிச்சியா. பட்டனை தட்டினதும் வீட்டு வாசலில் கார், ஆட்டோ வந்து நிற்கறது. வசதிதான். எந்த டிரைவர் பேசறாங்க. அவங்க கூட பேசினா வாழ்க்கை அனுபவங்கள் கிடைக்கறது. சக மனிதன் கூட பேசறதே ஒரு சுக அனுபவம் இல்லையா.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கேரக்டர். ஒரு பேச்சு ஸ்டைல். அதை ரசிச்சுக் கேட்கறதே போயிடுத்தேடா? வீட்டுலேயிருந்து கிளம்பி தெருவுல நடந்து போனோம்னா எதிர் வீடு, பக்கத்து வீட்டுக்காரங்க வெளியிலே நின்னா, ஹலோ சார், ஹலோ மாமின்னு பேசலாம். வீட்டு வாசல்ல யாரும் இப்பல்லாம் நிற்கறதே இல்லை. டி.வி, முன்னாடியோ மொபைலுக்குள்ளவோ இருக்கா. அப்படியே ஒருத்தர், தன் வீட்டு வாசல்ல நிற்கணும்னு நினைச்சாலும் இப்ப வீட்டுக் கதவுன்னு எங்கே இருக்கு. எல்லாமே அபார்மென்ட்டா மாறிண்டு வர்றது.''
இந்த விவேக் ஸ்டைல் வசனத்தைத் தவறாமல் அடிக்கடி சொல்லி புலம்புவார் அப்பா. அவருக்கு மனிதர்களோடு பேசி, பழகி சந்தோஷமாக வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கையின் சாராம்ஸம் என்பார்.
ஒரு தடவை அவருடைய அண்ணா பையன். அவன் புது அப்பார்மென்ட்டில் வாடகைக்கு குடியேறியதும் ஒருநாள் அவனைப் பார்த்து விட்டு வர கிளம்பினார். அவன் லொகேஷன் அனுப்பியிருந்தான். அப்பா வைத்திருப்பதோ சாதா கைப்பேசி. 'கரெக்ட் அட்ரஸ் வாங்கிக் கொடுடா' போய் பார்த்துட்டு வரேன்' சொன்னார். அதே போல் செய்தேன். பெரியப்பா பையனைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தவர் ராமலிங்கம் என்ற யாரோ ஒருவரை அப்படி புகழ்ந்து தள்ளி விட்டார்.
'டேய் விஜயநகரம் பஸ் ஸ்டாப்புல இறங்கினேன். பக்கத்துலதான் இருக்குன்னு சொன்னே இல்ல, விசாரிச்சுப் பார்க்கறேன், அந்தத் தெருவை யாருக்குமே தெரியலைடா. அப்பறம் ராமலிங்கம்னு ஒருத்தர், அவரைக் கேட்டேன். சரி வாங்க நான் வழி சொல்றேன்னு சொல்லிட்டு என் கூட பத்து நிமிஷம் நடந்து வந்து அந்த தெரு மட்டும் இல்லாம அந்த அபார்மென்டையும் காட்டிட்டுப் போனார்டா. உண்மை என்னன்னா அவர் வேற எங்கேயோ போக வேண்டியவராம். எனக்காக அவ்வளவு மெனக்கெட்டு நடந்து வந்து உதவி பண்ணினார்டா. மனுஷனுக்கு உதவற மனித நேயத்தையெல்லாம் கூகுள் மேப் கத்துக் கொடுக்குமாடா?' ஒரு லெக்சரே கொடுத்து விட்டார் அப்பா.
ஒரு தடவை என் அத்தை பெண். அவளுடைய பெண் கல்யாணப் பத்திரிகையை எங்கள் வாட்ஸ் ஆஃப் குரூப்பில் அனுப்பி விட்டாள். அப்பாவுக்கு, தான் வயதில் பெரியவன். தன்னை நேரில் வந்து கூப்பிடவில்லை என்பதைவிட இந்த காரணத்தை வைத்துகொண்டாவது வீட்டுக்கு வந்து நாலு வார்த்தை பேசி விட்டு பெண் கல்யாணத்துக்கு வாருங்கள் என்று அழைத்து விட்டுச் செல்லக் கூடாதா? என்ற பெரிய வருத்தம். இதையெல்லாம் கூட சக மனிதர்களை அதுவும் உறவினர்களைச் சந்திக்கும் பொன்னான தருணங்களாகப் பார்ப்பதை மனிதர்கள் தொலைத்து விட்டு நிற்கின்றார்களே என்று புலம்பித் தீர்த்தார்.
மதிய உணவும் ஆர்டர் ப்ரம் ஹோம் செய்து சாப்பிட்டு விட்டு நான் என் கணிணியில் மூழ்க ஆரம்பித்தேன். அப்பா நன்றாக உறங்கிப் போனார். அதைப் பார்க்க எனக்கு நிம்மதியாக இருந்தது.
மாலை நான்கு மணி. காலிங் பெல் ஓசை கேட்டது. வேலைக் களைப்பினால் கணினி மீதே தலையைச் சாய்த்து கண் அயர்ந்திருந்தேன். திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்து பார்க்க, ஐந்து பேர் நின்றிருந்தனர். யார் என்று நான் புரியாமல் யோசிக்க ஆரம்பித்தேன்.
'கணேசன் மாமா வீடு?''
'ஆமாம், என் அப்பாதான். நீங்க?''
'எல்லாரும் அவர் ப்ரண்ட்ஸ். அப்பாவுக்கு என்ன ஆச்சு. எவ்வளவு போன் பண்ணறது. மொபைல் ஸ்விட்ச் ஆஃப்னே வருது. என்ன ஆச்சு சாருக்கு'' என்று ஒருவர் மிகவும் பதட்டமான முகத்துடனேயே கேட்டார். மீதி நால்வர் முகங்களிலும் அதே பதற்றம் தெரிந்தது.
'சரி முதல்ல எல்லாரும் உள்ளே வாங்க. அப்பா உள்ளேதான் இருக்கார். படுத்துண்டு இருக்கார்'' என்று சொல்லியபடியே அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றேன். அப்பா படுத்துக் கொண்டு இருந்த அறைக்கு வந்த அனைவரும் அப்பாவைப் பார்த்ததும் கோரஸாகக் கேட்டனர். 'என்ன ஆச்சு உங்களுக்கு?'' என்ற அனைவர் முகங்களிலும் கவலை தோய்ந்து காணப் பட்டது. அப்பா எழுந்து உட்கார முயற்சி செய்தார்.
'வேண்டாம் மாமா நீங்க படுத்துண்டே இருங்க'' என்று சொன்னாள் வந்திருந்த பெண் உறுப்பினர்.
'அப்பா கேட்க மாட்டார்'' என்று சொல்லியபடி நான் அப்பாவைக் கையைப் பிடித்து உட்கார வைத்தேன். எல்லாரையும் புன்முறுவல் பூத்து வரவேற்றார் அப்பா. 'வாங்க சார். வாம்மா. உட்காருங்க. ஹரி எல்லாருக்கும் காப்பி கொடு' ‘ என்று என்னைப் பார்த்து சொல்ல, நான் உடனே கிச்சனை நோக்கினேன்.
'வேண்டாம் மாமா. இப்பத்தான்'' என்று ஒருத்தர் ஆரம்பிக்க, நான் குறுக்கிட்டேன். 'ஒரு காப்பி கூட கொடுக்கலேன்னா எப்படி சார். இதோ வரேன்'' என்று சொல்லிவிட்டு சமையற்கட்டுக்குள் நுழைய, 'நானே காப்பி கலக்கறேன்'' சொல்லியபடியே அந்தப் பெண் முன் வந்து விட்டாள்.
அனைவரும் காப்பியை பருகியபடி இருந்தோம், 'பார்த்து வரக் கூடாதா சார். யார் அவன் இப்படி கண் மண் தெரியாம வண்டி ஓட்டிண்டு வந்து உங்க மேலே மோதினவன்?'' என்று கேட்டார் ஒருவர்.
'அவன் எங்கே போனான்னு யாருக்குத் தெரியும். சிட்டாய்ப் பறந்துட்டான். ரெண்டு மூணு பேர் ஹெல்ப் பண்ணி க்ளினிக்குல்ல கட்டுப் போட்டு ஆட்டோ ஏத்தி விட்டாங்க. போதாத காலம்'' என்று சொன்னார் அப்பா.
'சரி போன் ஏன் ஸ்விட்ச்டு ஆஃப்னே வந்தது?''
'அப்பா அப்படி விழுந்தபோது அவரோட மொபைல் பக்கத்துல இருந்த சாக்கடையில விழுந்துடுத்தாம். போயே போச்சு. போயிந்தே. வேற ஸிம்தான் வாங்கணும். மொபைல் ஒண்ணு இருக்கு. அப்பா உடம்பு சரி ஆகட்டும். அதுதான் ஸ்விட்ச் ஆஃப்னு வந்திருக்கு'' என்று சொன்னேன்.
'சரி ஏதோ உங்க நல்ல நேரம்னுதான் நான் சொல்லுவேன். சீரியஸா எதுவும் ஆகாம கால்ல அடியோட போச்சு. கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம். நாங்க மட்டும் இல்ல.. என் ஸ்நாக்ஸ் சென்டருக்கு வர எல்லாருமே கேட்டாங்க. கணேசன் மாமாவுக்கு என்ன ஆச்சு சார். இன்னிக்குக் காலையிலயும் அதே நிலைமைன்னதும் ரொம்ப பயந்துட்டேன். உங்களை இப்ப பார்க்கலேன்னா வேலையே ஓடி இருக்காது சார். ரொம்பவே பயந்துட்டோம்'' என்று கண்கள் லேசாக கலங்கிய நிலையில் அப்பா கையைப் பிடித்து சொன்னார் ஒருவர்.
'ரொம்ப தாங்க்ஸ். இந்த அன்புக்கு உங்க எல்லருக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்'' என்று தானும் கண் கலங்கினார் அப்பா.
'கைம்மாறாவது ஒண்ணாவது. என்ன மாமா. நீங்க பெரிய வார்த்தையெல்லாம் பேசிண்டு. நான் உங்களுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கேன் தெரியுமா?'' என்று உணர்ச்சி வசப் பட்டு சொன்னாள் அவள்.
'நீங்க எல்லாம் யாருன்னு நான் தெரிஞ்சக்க ஆசைப்படறேன். சொல்லுங்களேன். ஒவ்வொருத்தரும்'' என்று நான் கேட்டேன்.
'நான் சேலையூர்ல ஒரு ஸ்நாக்ஸ் சென்டர் நடத்தறேன். என் பெயர் மாதவன். ஆறு மாசம்தான் முன்னாடி இருக்கும். ஒரு நாள் உங்க அப்பா முதல் தடவையா வந்தார். நானும் சென்டர் ஆரம்பிச்சு அப்ப ஒரு மாசம்தான் ஆகியிருந்தது. ஏதோ கடவுள் புண்ணியத்துல நல்லா போயிட்டிருக்கு. ஆறு மாசத்துக்குள்ள கடைக்கு வர முக்கிய வி.ஐ.பி. ஆயிட்டார் உங்க அப்பா. இவங்க எல்லாம் கடைக்கு வர கஸ்டமர்கள். என் கடைக்கு வர நிறைய பேர் அப்பாவோட விசிறிகள்.. ..இவங்க பெயர் கமலி, சார் பெயர் பீட்டர், இவர் அப்பாஸ், இது சந்தானம். அப்பாவுக்கு என்ன ஆச்சோன்னு பதறிண்டு வந்து இப்ப பார்த்துட்டுத்தான் போகணும்னு வந்துட்டோம்'' என்று சொன்னார் மாதவன்.
'அப்பா வி.ஐ.பி.யா? எப்படி? சொல்லுங்க?''
ஆரம்பித்து விட்டாள் கமலி,, 'அப்பாவோட பேச்சைக் கேட்டா ஒரு எனர்ஜி வரும் பாருங்க மனசுல. யாரைப் பார்த்தாலும் பழகணும்னு துடிப்பார். டிபன் சென்டருக்கு வர்ற எல்லாரோடயுமே பேசிப் பழகி.. ..'' என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தவளைக் கேட்டேன்.
'அப்பாகிட்ட என்ன கத்துக்கிட்டீங்க நீங்க. இவ்வளவு இம்ப்ரஸ் ஆகறத்துக்கு?''
'ஒரு நாள் பஜ்ஜி சாப்பிட்டுண்டே என் பையன் பர்ஸ்ட் பர்த் டே இன்விடேஷனை வாட்ஸ் ஆஃப்ல அனுப்பறதைப் பற்றி மொபைல்ல அக்காகிட்ட பேசிண்டு இருந்தேன். அப்பதான் பக்கத்துல நின்னுண்டிருந்த உங்க அப்பா நாலு பேரிடம் பேசிண்டு இருந்தார். 'என்ன சார் இது இந்த மாதிரி பங்ஷன் வரும்போதாவது ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் போகலேன்னா எப்படி. சாதாரண நாள்லதான் யார் வீட்டுக்கும் யாரும் போகறதில்லை.
இந்த மாதிரி சந்தர்ப்பங்களையும் நாம யூஸ் பண்ணிக்கலேன்னா நாளைக்கு ஒவ்வொரு மனுஷனும் தனியாவே வாழ ஆரம்பிச்சுடுவானோன்னு பயமா இருக்கு. தான் உண்டு தன் மொபைல் உண்டுன்னு வாழறது ஒரு வாழ்க்கையா. மனிதனோட மனிதன் மனசார பேசிப் பழகி ஆனந்தமா இருந்த அந்த நிமிடங்களை எங்கேயோ தொலைச்சுட்டு ஏதோ இயந்திரமா ஒரு வாழ்க்கை வாழ்ந்துண்டு இருக்கோம்'' என்று அப்பா சொல்லிண்டு இருந்தது என் மனசுல பட்டுன்னு நுழைஞ்சு அன்னிக்கு முழுக்க உட்கார்ந்து யோசிச்சேன்.
அப்பதான் அவரோட வார்த்தைகள்ல இருக்கற உண்மை எனக்குப் புலப்பட ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் எவ்வளவோ தடவை நாம எப்படியெல்லாம் நம்மளை இந்த மொபைல், சோஷியல் மீடியானால நத்தை உடம்பைச் சுருட்டிக்கற மாதிரி சுருட்டிண்டு தனியா வாழ ஆரம்பிக்கறோம்னு மாமா லெக்சர் கொடுத்திருப்பார் தெரியுமா? சோஷியல் மீடியானால முழு உலகத்தோடயே கனெக்ட் ஆகியிருக்கோம்கற ஒரு போலி போர்வைக்குள்ள புகுந்துண்டு இந்த உலகமே தூங்கிண்டு இருக்குன்னு சொல்லுவார் அப்பா. ஒவ்வொரு மனுஷனும் சக மனுஷனோட எவ்வளவு முடிஞ்சதோ அவ்வளவு பழகணும். அதுதான் உண்மையான வாழ்க்கைன்னு சொல்வார் அப்பா. அதுதான் அவர் எங்களுக்குக் கொடுத்த எனர்ஜி வார்த்தைகள்'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னாள் கமலி.
'மாதவன் சார், உங்க டிபன் சென்டர் பெயர் என்ன?''
'ஈவினிங் ஈட்ஸ்''
'உங்க சென்டர்லேயிருந்து கூட நான் புட் ஆஃப்ல ஆர்டர் பண்ணி வாங்கி இருக்கேனே. கொஞ்ச நாளா அது லிஸ்ட்ல இல்லையே''
'ரெண்டு மாசமா இந்த புட் ஆஃப் ஆர்டர் டெலிவரி பண்ணறது நிறுத்திட்டேன் சார். எல்லாம் சாரோட வழிகாட்டல்தான்''
'சரிதான். உங்க பிஸினஸையும் கெடுத்துட்டாரா?''
'இல்லை. பிஸினஸ் எந்த வகையிலயும் கெடலை. நான் சொல்லிட்டேன். என் சென்டர்லேயிருந்து ஸ்நாக்ஸ் வேணும்னா வந்து சாப்பிடுங்கன்னு. சார்தான் சொல்லிக் கொடுத்துட்டாரே. பழகுங்க. வாங்கன்னு, அன்பா ரெண்டு வார்த்தை பேசிட்டு ஸ்நாக்ஸ் சாப்பிட்டுப் போங்க. தினமும் மீட் பண்ண ஒரு சான்ஸ்னு சொல்லிட்டேன், கஸ்டமர்ஸ் கிட்ட. எல்லாம் உங்க அப்பாவோட வழிகாட்டல்தான்''
'சார் நீங்க கூட 'ஈவினிங் ஈட்ஸ்'லேயிருந்து ஸ்நாக்ஸ் ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருக்கீங்கன்னு சொன்னீங்க. அது எந்த ஏரியான்னு உங்களுக்கு ஞாபகம் இல்லாம கூட போயிருக்கலாம். ஆனா உங்க அப்பா அங்கே நேரே வந்து சாப்பிடறதோடு மட்டும் இல்லாம எல்லாரோடயும் பழகறதுனால அவருக்கு ஏதோ ஒரு ப்ராப்ளம்னதும் இவ்வளவோ பேர் உங்க வீட்டுக்கே பதறி அடிச்சுண்டு ஓடி வந்து விசாரிக்கறோம். இதெல்லாம் புட் ஆஃப்ல சாத்தியம் இல்லைன்னு உங்க அப்பா சொல்றது சரிதானே'' என்று சந்தானம் சார் சொல்ல, ஆமோதித்தானர், அனைவரும்.
'நாங்க கொஞ்சம் முந்தைய ஜெனரேஷன். பாருங்க கமலியை, யங்கர் ஜெனரேஷன், உங்க அப்பா பேச்சுல இம்ப்ரஸ் ஆகியிருக்காங்க?''
'கணேசன் சார் ஒரு இயக்கமே நடத்தறார்னு சொல்வேன். அதை நாமளும் அவர் கூட சேர்ந்து நடத்தணும். வருங்கால சந்ததியை கொஞ்சம் வழி நடத்தணும்னு நினைக்கறேன். உங்க அப்பா.. ஹீ ஈஇஸ் ரியலி úத்ரட் ஹரிஹரன்'' என்று சொன்னார் பீட்டர் சார்.
அப்பொழுது எனக்கு கம்பனியிலிருந்து கைப்பேசி அழைப்பு வர எடுத்தேன். 'நாளைக்கு கம்பனிக்கு கண்டிப்பா வரணுமா. சார் என் அப்பாவை இந்த நிலைமையில் தனியா விட்டுட்டு எப்படி சார். ..எழுந்து சரியா நடக்க முடியாம.. ..'' என்று தலையைச் சொறிந்தபடியே பேசினேன்.
'வேற வழியில்லை ஹரிஹரன். பாரின் டெலிகேட்ஸ் வர்றாங்க. மீட்டிங்ல நீங்க நேர்ல இருந்துதான் ஆகணும்'' என்று எம்.டி. சொல்லி விட்டு கைப்பேசியை வைத்துவிட, யோசனையுடன் கைப்பேசியை அணைத்தேன்.
என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பிக்க எத்தணிக்கக் கூட இல்லை. 'ஹரிஹரன், டோண்ட் ஒர்ரி, நாங்க எதுக்கு இருக்கோம். நாளைக்கு நீங்க ஆபீஸ் போங்க. உங்க அப்பாவைப் பார்த்துக்கறது எங்க பொறுப்பு. நாங்க எங்களுக்குள்ள டயத்தை பங்கு போட்டுண்டு உங்க வீட்டுக்கு வந்து உங்க அப்பா கூட இருக்கோம். நீங்க கவலையே படாம ஆபீஸ் போங்க. நாளைக்கு காலை டிபன் நான் கொண்டு வந்துடறேனே. உங்களுக்கும் அப்பாவுக்கும்.. .'' என்று மாதவன் சொல்ல, அவரோடு மற்ற நால்வரும் சேர்ந்து கொள்ள, கண் கலங்கி நன்றி சொன்னேன், கைகூப்பி, அனைவருக்கும்.
அனைவரும் கிளம்பிச் சென்று விட்டவுடன் நான் மீண்டும் கணிணியில் மூழ்கியபடி ஒரு மணி நேரம் அலுவலக வேலை செய்து விட்டு அவர் அறைக்கு வந்து பார்க்க, அப்பா தூக்கத்திலிருந்து விழித்திருந்தார். 'இப்ப உடம்பு எப்படி இருக்குப்பா. டாக்டர் கிட்ட போகணுமா?'' என்று கேட்டேன்.
'எனக்கு ஒண்ணும் இல்லை ஹரி. சரியாப் போச்சு. வந்தவாளோடு பேசி, மனசுக்கும் உடம்புக்கும் சொல்ல முடியாத புது தெம்பு வந்துடுத்துடா. ரெண்டு நாள்ல எழுந்து ஓட ஆரம்பிச்சுடுவேன்'' என்று சிரித்தபடியே சொன்னவரின் குரலில் முழு வீச்சில் ஆற்றல் தென்பட்டதைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. மனிதர்களை சந்தித்தால் இத்தனை ஆற்றல் வருமா ஒருவருக்கு.
இப்பொழுது புரிய ஆரம்பித்தது. மனிதனோடு மனிதன் பேசிப் பழகுவதுதான் வாழ்க்கையின் உண்மையான சுவாரசியம். இயற்கையான, சந்தோஷமான வாழ்க்கை. விஞ்ஞான வளர்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கும். புதிய கண்டு பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கும், புதிய செயலிகள் தோன்றிக் கொண்டுதான் இருக்கும். ஆனால் மனிதன் முடிந்தவரை சக மனிதனோடு பேசிப் பழகி கூடி வாழ்வதை விட்டு விடக் கூடாது. அதில்தான் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது.
அப்பாவின் கருத்துகளின் சாராம்சத்தை உணர்ந்து கொண்ட என் மனதில் ஒரு புதிய ஒளி தோன்றியதை உணர்ந்தேன்.