பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்லதொரு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், தேர்வு உபகரணங்களையும் வழங்கி அசத்தியுள்ளனர் மக்கள் பிரதிநிதிகள்.
கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல். சி., பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் பல ஆயிரம் மாணவர்களுக்கு முக்கிய வினாத்தாள் அடங்கிய புத்தகங்களையும், ஜாமென்டரி பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்டவற்றையும் மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கியுள்ளார்.
இதேபோல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு 'தேர்வை வெல்வோம்' என்ற வழிகாட்டி புத்தகத்தையும் கல்வி உபகரணங்களையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தனது தொகுதிக்குள்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முக்கிய வினாத்தாள் அடங்கிய தொகுப்புப் புத்தகத்தையும், கல்வி உப
கரணங்களையும் வழங்கியுள்ளார். திருப்பத்தூர் எம்எல்ஏ அ.நல்லதம்பி தனது தொகுதிக்குள்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு 'என்ன படிக்கலாம்?' என்ற உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தையும் வழங்கியுள்ளார். இதோடு, அவர் டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தொடர் பயிற்சி மையத்தை இலவசமாக நடத்திவருகிறார்.
காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் தனது தொகுதிக்குள்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தி, தன்னார்லர்களைக் கொண்டு தேர்வுக்கான வழிகாட்டுதல்களை வழங்கியதோடு, கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
பொள்ளாச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் எஸ்.எஸ்.எல்,சி., பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய வினா விடை புத்தகங்களை சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவரும், எம்எல்ஏவுமான பொள்ளாச்சி வா.ஜெயராமன் வழங்கி வருகிறார்.
இதேபோல், குனியமுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முக்கிய வினா விடை புத்தகங்களை ஆண்டுதோறும் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி அளித்துவருகிறார். அத்துடன் அவர் 'அம்மா ஐ.ஏ.எஸ். அகாதெமி' என்ற இலவசப் பயிற்சி மையத்தை நடத்திவருவதோடு, தேர்வர்கள் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறவும் புத்தகங்களையும் வழிகாட்டுதல்களையும் அளித்துவருகிறார்.