பெண்கள் தங்களது கைகளில் அணிவது 'வளையல்கள்'. இதை தங்களின் வாழ்வில் முக்கிய மங்கலப் பொருளாகக் கருதுகின்றனர். அணிகலன்களில் மிகவும் சிறப்பானதும், அழகு தருவதும்கூட!
தங்கம், வெள்ளி, செம்பு, கண்ணாடி போன்ற பல்வேறு பொருள்களால் செய்யப்பட்ட வளையல்கள் இருந்தாலும் 'சங்குவளையல்' மிகவும் தொன்மைச் சிறப்பு வாய்ந்தவையாக விளங்குகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளிலும் அதிக அளவில் சங்குவளையல் துண்டுகள் கிடைத்துள்ளன.
நந்து, சுத்தி, பணிலம், நாகு, வண்டு, கோடு, வளை, சுரிமுகம், கம்பு, வெள்ளை, இடம்புரி, வலம்புரி, தரா, சங்கு என சங்கில் பல வகைகள் உண்டு.
வளை, தொடி
சங்க இலக்கியங்களில் சங்கு வளையல் பற்றிய குறிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன 'வளை' என்றும், 'தொடி' என்றும் குறிப்பிடப்படுகிறது. வலம்புரி சங்கு மிகவும் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வலம்புரி சங்கில் செய்யப்பட்ட வளையல்களை அரச மகளிர் அணிந்திருந்தனர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுடைய தேவி, பாண்டிமாதேவி தனது கைகளில் தங்க வளையல்களுடன் வலம்புரி சங்கு வளையல்களை 'அணிந்திருந்ததாக நெடுநல்வாடை' கூறுகிறது.
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரிவளையொடு கடிகை நூல் யாத்து
(நெடுநல்வாடை 14143)
சங்கு வளையல் ஒளி பொருந்திய வெண்மை நிறத்துடன் விளங்கின.
வெள்ளி வள்ளி வீங் கிறைப் பணைத்தோள் (நெடு:36)
அரம் போழ் அவ்வளை பொலிந்த முன்கை (அகம் : 62)
அரம் போழ் அவ்வளை தோள் நிலை நெகிழ வளையல் (அகம் :125:1)
'தொடி' எனவும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சங்கக் காலத்தில் மகளிர் அணிந்திருந்த வளையல் பற்றிய குறிப்புகளை புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, நற்றிணை, பரிபாடல் போன்ற இலக்கியங்களில் காணமுடிகிறது. மகளிர் தம் கைகளில் வளையல்களை அணிந்திருந்ததால், தழும்புகள் ஏற்பட்டன.
எடுத்துக் கொள்வது போலும் தொடி வடுக்காணிய (கலித்தொகை 71:16)
சங்கு அறுப்பது
சங்கினை அறுத்து வளையல் செய்யப்பட்டது பற்றியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
விலங்கரம் பொரூஉம் வெவ்வளை போழ்நர் (மணி 330)
விலங்கரம் பொராத சங்கின் வெள்வளை (சீவ:2441)
கோடு போழ் கடை நரும் (மது: 511)
சங்குகளை சிறிய அரம் போன்ற கருவியால் அறுக்கப்பட்டு, வளையல்களாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கொற்கை
தமிழகக் கடற்கரை பகுதிகளில், குறிப்பாக பாண்டியர் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கொற்கையில் சங்கு எடுப்பவர்கள் நிறைந்திருந்தனர் என்பதையும், தனி குடியிருப்புகள் இருந்தன என்பதையும் மதுரைக்காஞ்சி கூறுகிறது.
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்
இலங்குவளை இருஞ்சேரிக்
கட் கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கை... ( 134138)
மேலும், சங்கப்புலவர்களில் ஒருவரான நக்கீரர் வரலாற்றில்,
அங்கங் குலைய அரிவாளில் நெய்பூசி
பங்கப்படவிரண்டு கால்பரப்பி சங்கதனை
கீர்கீர் என அறுக்கும் கீரன் என்றும்,
'சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்' என்ற சொற்போர் நடந்ததையும் நாம் அறிவோம்.
அகழ்வராய்ச்சிகளில்...
காஞ்சிபுரம், கொற்கை, காவிரிப்பூம்பட்டிணம், கரூர், பேரூர், திருக்காம்புலியூர், கொடுமணல், அழகன்குளம், கீழடி, பட்டரைப்பெரும்புதூர், மருங்கூர் போன்ற பல தொன்மைச் சிறப்பு வாய்ந்த பல ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் சங்கு வளையல்கள், வளையல் துண்டுகள், அறுத்த நிலையில் உள்ள சங்குகள், வளையல்கள் அறுத்தது போக மீதம் உள்ள பகுதிகளும் கிடைத்துள்ளன. வளையல்களில் மேற்பகுதியில் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாண்டிய மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய கொற்கையில் சங்கு வளையல்களும், அறுத்த சங்குகளும், முழுமையான சங்குகளும் அதிக அளவில் கிடைத்தன. சங்குவளையல் செய்யப்பட்ட தொழில் கூடமாக இந்த ஊர் விளங்கியிருக்க வேண்டும். இதே போன்று கொடுமணல் மற்றும் காவிரிப்பூம்பட்டிணமும் சிறப்பிடமாகத் திகழ்ந்திருக்கன்றன. மேலும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் 'சங்குவளையல்' சிறப்பிடம் பெற்று விளங்கியுள்ளது.
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர்முத்தம்
அரம் போழ்ந்தறுத்த கண்ணேர் இலங்குவளை...
விழுமிய நாவாய் பெரு நீ ரோச்சு நர்
வைகல் தோறும் வழிவழி சிறப்ப ... (மதுரைக்காஞ்சி 315326)
எனவே சங்கக் கால வரலாற்றில் 'சங்கு வளையல்' சிறப்பிடம் பெற்று விளங்குவதை இலக்கியங்களினாலும், தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளாலும் அறியமுடிகிறது.
(தொல்லியல் துறை பணி நிறைவு).