மாத்தி யோசி...

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் 400க்கும் மேற்பட்டோருக்கு 'மாத்தியோசி' எனும் தலைப்பிலான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாத்தி யோசி...
Published on
Updated on
1 min read

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் குழப்பமின்றி எளிதாகத் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் 400க்கும் மேற்பட்டோருக்கு 'மாத்தியோசி' எனும் தலைப்பிலான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அலுவலருமான சசிகாந்த் செந்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமில், மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது:

'பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அவர்களைத் தேர்வுக்குப் பதற்றமின்றி தயாராக வேண்டும் என்று தேர்வை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள், பெற்றோர் அளித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், 'திங் பவுண்டேஷன்' சார்பில் 'மாத்தி யோசி' என்ற தலைப்பில் மாணவர்கள் எளிதாகத் தேர்ச்சி பெறுவது எப்படி? என்பது குறித்து தன்னார்வலர்கள் வாயிலாகப் பயிற்சி முகாமை நடத்தினேன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வருகை தந்த மாணவ, மாணவிகள் தொடக்கம் முதல் கடைசி வரையில் ஆர்வத்துடன் பங்கேற்று, குறிப்புகளை எடுத்தனர். நான் கடந்துவந்த கடினமான காலகட்டங்களையும், ஐ.ஏ.எஸ். தேர்வில் மூன்று முறை தேர்ச்சி பெறாமல் 4ஆவது முறையாகத் தேர்ச்சி பெற்றதையும், அதற்கு தோல்விகளையே படிகட்டுக்களாக மாற்றியதையும் குறிப்பிட்டேன்.

இங்குள்ள மாணவ, மாணவிகள் மிகவும் திறமையானவர்களாக உள்ளதால், நன்றாகப் பயிற்சி அளித்தால் சிறப்பாக வருவார்கள். அடுத்து வரும் 3 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தைத் தேர்ச்சி வீதத்தில் மாநில அளவில் முதலிடத்தில் கொண்டு வருவோம்.

தோல்வி என்பது மாணவர்களால் அல்ல; சில முறைகளால்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு என்னுடைய தோல்வியைக் குறிப்பிட்டும், பல தோல்விகளுக்குப் பின்னர் வெற்றி கிடைக்கும் என்றும் வலியுறுத்தினேன்.

இதேபோல் பலதரப்பட்ட தோல்விகளைக் கடந்த வந்தவர்களைப் பார்க்கையில் அவர்கள் மனதில் நம்பிக்கை பிறக்கும். பயிற்சியோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இறுதி வரையில் வழிகாட்டுதல் என்பது அவசியமாகிறது.

போதுமான வழிகாட்டுதல் இல்லாத நிலையில்தான் துவண்டு விடுகிறார்கள். இதற்காக மாவட்டம்தோறும் மாணவர்கள், இளைஞர்களுக்கும் கட்டாயம் வழிகாட்டுதல் மையம் ஏற்படுத்த வேண்டும். இதை மையமாக வைத்தே அடுத்த நகர்வுகள் இருக்கும். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கவும் உள்ளேன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டந்தோறும் மாணவ, மாணவிகள் வழிகாட்டுதல் பயிற்சி அளிப்பதுபோல், இளைஞர்களுக்கும், மகளிருக்கும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளித்து பொருளாதார ரீதியாக உயர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளேன்'' என்கிறார் சசிகாந்த் செந்தில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com