கண்டது
(சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
'புழுதிக்குட்டை'
ஜெ.குமார், சென்னை98.
(எல்.ஐ.சி. டைரியில் கண்டது)
'துணை எழுத்து இல்லை என்றால், வார்த்தை தடுமாறும். நல்ல துணைவி இல்லை என்றால் வாழ்க்கையே தடுமாறும்.'
கே.திருக்குமரன், கடையம்.
(சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள டீக்கடைகளின் பெயர்கள்)
'மச்சி ஒரு டீ சொல்லு', 'டீ தூள் டீ கடை'.
ஜி.குப்புசுவாமி, சென்னை26.
கேட்டது
(செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)
'மச்சி.. நீ ஏன்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா..?'
'நீயெல்லாம் படற கஷ்டத்தைப் பார்த்து எப்படிடா கல்யாணம் பண்ண மனசு வரும்...'
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்23.
(திண்டிவனம் தனியார் பள்ளி எதிரே இருந்த புத்தகக் கடை ஒன்றில் கடை உரிமையாளரும், வாடிக்கையாளரும்..)
'என்ன சார்... உங்க கடை போர்டில் 'இங்கு நோட் புக், பென்சில், பெண்கள் விற்கப்படும்'ன்னு எழுதி வைச்சிருக்கீங்க?'
'பேனாக்கள் என்று பெயின்டரிடம் எழுதச் சொன்னேன்.. அவர் பெண்களுன்னு எழுதிட்டு போயிட்டாரு...?'
டி.கே.சுப்ரமணியன், விழுப்புரம்.
(கோவை டவுன் ஹாலில் உள்ள ஒரு வீட்டில் தம்பதி பேசியது)
'உங்ககிட்ட ஒரு சந்தோஷமான விஷயமும், சங்கடமான விஷயமும் சொல்லப் போறேன். முதல் விஷயம் நான் இன்னைக்கு என் வீட்டுக்குப் போறேன். ஒரு வாரம் தங்கப் போறேன்...'
'ஓ.கே. டார்லிங்.. அடுத்தது சங்கடமான விஷயம் என்ன? அதையும் சொல்லிடு...'
எம்.பி.தினேஷ், கோவை25.
யோசிக்கிறாங்கப்பா!
'துணியாத வரை வாழ்க்கை அச்சுறுத்தும். துணிந்து பார். அதுவே வழிகாட்டும்.'
ந.சண்முகம், திருவண்ணாமலை.
மைக்ரோ கதை
அந்த டவுன் பஸ்ஸில் 6 பேர் உட்காரும் கடைசி இருக்கையில், 5 பேர்தான் உட்கார்ந்திருந்தனர். அதில் ஒருவர் தனது பக்கத்தில் துணிப்பையை வைத்திருந்தார்.
'யாரும் வர்றாங்களா?' என்றேன். 'ஆள் வருது' என்றவர், 'சரியான பட்டிக்காடு' என்று முணுமுணுத்தது எனது காதில் விழுந்தது. பஸ் புறப்பட்டும் அவர் தனது பையை எடுக்கவில்லை. ஆளும் வரவில்லை. அடுத்த நிறுத்தத்தில், முறுக்கு மீசையுடன் உடல் பருமனான ஒருவர் பஸ்ஸில் ஏறினார். அவரைப் பார்த்த நான், 'சார் கடைசி சீட்டில் ஒரு இடம் இருக்கு.. அங்கே உட்காருங்க?' என்றேன். அங்கு சென்றவர், 'ஐயா பையை எடுங்க..' என்று சொல்லிவிட்டு, தாராளமாக உட்கார்ந்தார். என்னைப் பார்த்த பை வைத்திருந்தவர் முணுமுணுக்கதான் முடிந்தது.
என்.சோமசுந்தரம், திருநாகேஸ்வரம்.
எஸ்எம்எஸ்
'வறுமையைக் கண்டு அசராதே! வருவாய் வரும்போது ஆடாதே!!'
-யு.கே.ராஜேந்திரன், சென்னை40.
அப்படீங்களா!
வெளிநாட்டில் இருப்பவர்களைச் சொந்தங்களுடன் விடியோ கான்ஃபரன்ஸில் இணைத்தது ஸ்கைப். 2003இல் தொடங்கிய ஸ்கேப்பின் சேவை மெல்லமெல்ல வர்த்தக ரீதியாகவும் பிரபலமானது.
நிறுவனங்களின் குழுக் கூட்டங்கள் ஸ்கைப்பில் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் சேமிக்கப்பட்டதுதான் இதன் சிறப்பு. அதுவும், கரோனா காலத்தில் வீட்டில் இருந்தே பள்ளி, கல்லூரி படிப்புகளும், அலுவலகப் பணிகளுக்கும் ஸ்கைப் பெரும் உதவியாக இருந்தது. கரோனா பரவல் முடிவுக்கு வந்து இயல்புநிலை திரும்பியவுடன், ஸ்கைப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் சரியத் தொடங்கியது.
2023இல் 3.6 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளதாக ஸ்கைப் தெரிவித்தபோதிலும், அதன் பங்குகள் தொடர் சரிவை சந்தித்தன. இதனால் மே 5 முதல் ஸ்கைப் மூடப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்கைப் பயன்பாட்டாளர்கள் 'மைக்ரோசாப்ட் டீம்ஸ்'க்கு மாறிக் கொள்ளலாம் என்றும் நவீன தகவல் தொடர்புக்கு 'மைக்ரோசாப்ட் டீம்ஸ்' பெரும் உதவியாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஸ்கைப்பில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் டீம்ஸ்'க்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஸ்கைப் போன்றே அதிநவீன தொழில்நுட்பத்துடன் மைக்ரோசாப்ட் டீம்ஸ் இருக்கும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. ஸ்கைப் கட்டணப் பயன்பாட்டாளர்கள் தங்களின் கட்டண காலம் முடியும் வரையில் சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே இணைத்த ஸ்கைப் மே 5 முதல் விடைபெறுகிறது.
அ.சர்ப்ராஸ்