எதிர்பாராமல் அந்த ஹோட்டல் லாபியில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவன் வேகமாக வந்துகொண்டிருந்தான். ' ஹாய்' என்று அவன் சொன்னதும் எனக்கு முதலில் 'சட்'டென்று ஞாபகம் வராமல் போனது. அவன் என் அருகில் வந்து அடையாளம் கண்டு கொண்டு, 'டேய் சுந்தர்! எப்படிடா இருக்கே?' என்றான். அவன் சிரிப்பை உணர்ந்ததும் 'சட்'டென்று, 'நீ கணேஷ் தானே?' என்றேன்.
'ஆமாண்டா'
நான் மீண்டும் அவனைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. அன்று பார்த்த மாதிரியே மிக எளிமையாக இருந்தான். ஆனால், நானோ கொஞ்சம் ஆடம்பரமான டிரஸ் போட்டிருந்தேன். சரியாக 45 ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். என் நினைவுகள் மெல்ல, மெல்ல மன்னார்குடியில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் போனது.
என் அப்பாவுக்குப் பதவி உயர்வு பெற்று ஒத்தைத் தெரு மின்சார அலுவலகத்தில் தலைமை மின்பொறியாளர். ஜூலை மாத நடுவில் பணியிடமாறுதல் கிடைத்ததால், 'எனது 11-ஆவது வகுப்பின் படிப்புக்குத் தடைபடுமோ?' என்று கவலைப்பட்டார். ஆனால் அவருடைய செல்வாக்கால், மன்னார்குடி ஹை ஸ்கூலில் நான் பதினோராம் வகுப்பு மிகுந்த சிபாரிசுடன் சேர்ந்த புதிது. அந்தப் புகழ் பெற்ற பள்ளியில் 'டி' செக்ஷன்.
என் பக்கத்தில் அவன். அவன் ஏழ்மை வடிவம் அவன் தோற்றத்தில் நல்லாவே தெரிந்தது. ஆனால் நன்கு படிப்பவன். கணக்கு வாத்தியார் கரும்பலகையில் கணக்குப் பாதிப் போட்டுக் கொண்டிருக்கும்போதே 'கிடு.. கிடு'வென அந்தக் கணக்கை முடிப்பான். அப்படி ஒரு வேகம். காலாண்டு தேர்வில் நான் கணக்கிலும், ஆங்கிலத்திலும் தேர்ச்சி அடையவில்லை.
அப்பா என்னிடம், 'ஒனக்கு சிரமப்பட்டு அட்மிஷன் வாங்கி என்ன பிரயோசனம்? நீ பொறுப்பு இல்லாமல் ஃபெயில் ஆகியிருக்கே? ஆர் யூ நாட் அஷமெடு?' என்று இங்கிலீஷில் கன்னாபின்னவென்று திட்டு வேறு.
'இரண்டுக்கும் டியூஷன் வைக்கணும். அப்ப தான் நீ உருப்படுவே. சாயந்திரம் ஸ்கூல் வரேன்.'
சொன்னபடியே அன்று மாலை இங்கிலீஷ் வாத்தியாரையும் கணக்கு வாத்தியாரையும் சந்தித்து கேட்டபோது, 'ஏற்கெனவே டியூஷன்ல நிறையப் பசங்க. இருக்காங்க? என்னால ஒங்க பையன் மேல தனிக் கவனம் செலுத்த முடியாது.. சாரி' என்று சொல்லவும் இருவருமே திரும்பியிருந்தோம். வகுப்பு வாத்தியார் 'எஸ்ஸார்' என்று சொல்லப்படும் ராமச்சந்திரன் சாரிடம் கேட்டபோதும் மறுத்து விட்டார் .அவர்கள் சொன்ன அதே பல்லவி சரணம்தான். இவரும் சொன்னார்.
சோகத்துடன் திரும்பிய இருவரையும் பார்த்த கணேஷ், ' யூ டோண்ட் வொர்ரி சுந்தர். நீ அரையாண்டு என்ன? பப்ளிக் எக்ஸாமிலும் சென்டம் வாங்கற? 'அங்கிள் நீங்க எதுக்கு டியூஷன் வைச்சு பணம் கொடுக்கணும். வேண்டாம்.' நான் சுந்தர் மேத்ஸ்ல சென்டம் வாங்க வைப்பேன்' என்றான்.
தினமும் மாலை வகுப்புகள் முடிந்தவுடன் அன்று நடந்த கணக்குப் பாடத்தையும் ஆங்கிலபாடத்தையும் மீண்டும் நடத்தி எனக்கு நன்கு புரிய வைப்பான். எனக்குக் கணக்கு சொல்லிக் கொடுப்பதால் மட்டும் அவன் மீது பாசமும் பிரியமும் கிடையாது. பொதுவாக அவனின் அமைதியும் பிறருக்கு உதவும் தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது . ஆர்ப்பாட்டம் என்பதே துளியும் கிடையாது. பள்ளிக்கு வெளியில் உள்ள வள்ளலார் டீக்கடையில், இடைவேளை பீரியட் சமயம் மற்ற மாணவர்களுடன் வடையும் டீயும் குடிக்கும்போது, கணேஷை, 'குடிடா?' என்றால் கூட குடிக்க மாட்டான். அந்த அளவுக்கு சுய கெளரவம் அதிகம் பார்ப்பான்.
இவ்வளவுக்கும் அந்தக் கடை வடையும் டீயும் தரமாக இருக்கும். அந்தக் கடை முதலாளி மாணவர்களின் உடம்புக்கு ஏதும் ஆகக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தரமான பதார்த்தங்களைச் செய்யக் கூடியவர்.
மேல் இரண்டாம் தெரு அவன் வீட்டை தாண்டி எஸ்ஸார் வகுப்பு வாத்தியார் வீட்டை தாண்டி தான் என் வீட்டுக்கு போகணும். அன்று கணேஷ் ஸ்கூல் வரவில்லை. முதல்முறையாக அவன் வீட்டைப் பார்த்த போது என் கண்ணில் தண்ணீர் வந்தது. சாதாரண வீடு தான் .அப்பா எங்கோ பக்கத்துக் கிராமத்தில் உள்ள பண்ணையார் வீட்டில் கணக்குப் பிள்ளை வேலை. நெல் சம்பளம் மட்டும்தான். உடம்பு முடியாத அம்மாவுக்கு அன்று பணிவிடை செய்து கொண்டிருந்தான்.
'டேய் சுந்தர் ?என்னடா திடும்ன்னு..'
'இல்லை கணேஷ்... நீ இன்னிக்கு ஸ்கூல் வரலியா.. அதான் பாக்க வந்தேன்.'
அவன் வீட்டுத் திண்ணையில் ஆறாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை படிக்கும் மத்த ஸ்கூல் ஏழை பசங்க, பணக்கார, நடுத்தரப் பசங்க டியூஷன் படித்துகொண்டிருந்தார்கள்.
ஏழை பசங்ககிட்ட மட்டும் பணம் வாங்காமல் மற்றவர்களிடம் வாத்தியார் வாங்கும் பீஸை விட குறைவாக வாங்கி கொண்டு காலை எட்டு மணியில் இருந்து 9 மணி வரை டியூஷன் பின் ஸ்கூல். பிறகு இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை டியூஷன். அந்த வீட்டில் மேல் செலவுக்கு இவன் டியூஷன் ஃபீஸ் தான் வருமானம். 'நாம் கற்ற கல்வியைப் பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் போது அதற்கு ஊதியம் வாங்கக் கூடாது' என்று என் அப்பா பணம் கொடுத்தபோது வாங்க மறுத்தவன்.
அப்பா அப்போது ஒரு பழமொழியை ஞாபகப்படுத்தினார். 'ஆகுங்காய் பிஞ்சில தெரியும்' என்று. அதன் விளக்கத்தையும் சொன்னார். கணேஷ் அப்படி ஒரு நல்ல ப்ரெண்ட் என்றார். ஆனால் அவன் அம்மா தான் குடும்பச் செலவை எப்படிச் சமாளிப்பது என்று வற்புறுத்தியதால் ஏழைப் பையன்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் ஃபீஸ் வாங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பள்ளியில் படித்த அந்த நாள்கள் பொன்னான காலம்.
எல்லா சப்ஜெக்டிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கியதால், அவன் பள்ளியின் முதல் மாணவன். நான் அவன் முயற்சியால் கணக்கில் நூற்றுக்கு நூறு வகுப்பில் இரண்டாவது மாணவன். அப்பாவுக்கும் சந்தோஷம் . கணேஷ் நல்லா படிப்பவன் மட்டுமல்ல; கிளாஸ் ஆரம்பிக்கும் முன்பு அந்தந்த வகுப்பு வாத்தியார் வரும் வரைக்கும் அந்த வாத்தியார் பேச்சு, செயல் எல்லாவற்றையும் மிமிக்ரி செய்து வகுப்பை கலகலப்பாக வைத்திருப்பான்.
மற்ற வாத்தியார்கள் இந்த மிமிக்ரி குறும்பை 'ஸ்போர்ட் டிவா' எடுத்துகொண்டனர். ஆனால் எஸ்ஸார் சார் மட்டும் அதைரசிக்கவில்லை. மொத்தம் 56 பேர். அதில் நான்கு மாணவிகள். அரையாண்டு வரை மற்ற மாணவர்கள் மத்தியில், கணேஷை கொண்டாடியவர், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவனை வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 4 மணிக்கு, கிரிக்கெட் விளையாட என்னையும் கூப்பிட்டு இருந்ததால் அவன் வீட்டுக்குச் சென்றேன். கணேஷ் வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு, கால் ட்ராயர் தெரியும்படி, கையில் கிரிக்கெட் பேட்டை வைத்துகொண்டு, வீட்டுக்குள் இருந்து வேகமா, வெளியே ஓடி வரவும், எஸ்ஸார் சார் கடக்கும்போது , கக்கத்தில் இருந்த பேட் கீழ விழுந்து விட ,அவரைப் பார்த்த பயத்தில் அனிச்சையா வேட்டியை இறக்கி விட்டு ,'சாரி சார்' என்று சொல்லியும் நானும் 'சாரி சார்' என்று சொல்லியும், அவர் அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் எங்களைக் கடந்துச் சென்றார்.
மறுநாள் வகுப்பில் ஜாடை மாடையாக அவன் பெயர் என் பெயர் குறிப்பிடாமல், 'என்ன பிரயோசனம்? ரேங்க் வாங்கியும் வாத்தியார்ன்னு சிலருக்கு மரியாதை துளி கூடதெரியவில்லை?' என்றார்.
நானும், கணேஷும் 'சாரி' கேட்டும் ,அவர் மனது ,எங்களை மன்னிக்கவில்லை என்று பின் வரும் வகுப்புகளில் எங்க இரண்டு பேரையும் மட்டும் அவர் டார்ச்சர் செய்தபோது தெரிந்தது.
ஒருநாள் மதிய உணவு இடை வேளை முடிந்து, முதல் பீரியட் ஷேக்ஸ்பியர் 'டெம்பஸ்ட்' பாடம் ரிவிஸன். அன்று வீட்டில் ஏதோ விசேஷ சாப்பாடு சாப்பிட்டு வந்த மயக்கம். தூங்கி தூங்கி, பக்கத்துச் சீட்டில் இருக்கும் என் தோளில் விழுந்த, அவனை நிமிர்த்திவிட , இதைக் கவனித்த வாத்தியார், கணேஷை எழ சொல்லி கேள்வி கேட்டார்.
'ப்ரோஸ்பரோ யார்?' என்று கேட்டதற்கு, 'மிரண்டாவின் மனைவி' என்று தூக்க கலக்கத்தில் சொல்லிவிட வகுப்பு முழுவதும் நக்கல் சிரிப்பு. உண்மையில், 'ப்ரோஸ்பேரோ மிரண்டாவின் தந்தை' என்று சொல்லியிருக்க வேண்டும். பலமுறை அப்படித்தான் அவன் சொல்லி உள்ளான் ஆனாலும் அவர் ஸ்போர்டிவா எடுத்துகொள்ளாமல் அவனை யும் என்னையும் 'கெட் அவுட் பிரம் தி கிளாஸ்' என்று விரட்டி விட்டது அவமானமாகப் போனது.
'பாருங்க உங்களை விட இந்த நாலு பெண்ணுங்க தான், முதல் நாலு ரேங்க் வாங்க போகுதுன்னு' என்று அடிக்கடி வகுப்பில் சொல்லி கொண்டு இருந்தார்.
ஆண்டுத் தேர்வு பப்ளிக் எக்ஸாம். ஹால் டிக்கெட் வாங்கிய பிறகு ,அவரிடம் வாழ்த்து பெற போனபோது, அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அவர் எங்கள் இருவரையும் அவமானப்படுத்திய விதம், எங்க இரண்டு பேருக்கும் படிப்பில் ஒரு வெறியையும், புத்துணர்ச்சி யையும் கொடுத்தது . எல்லா பரீட்சைகளையும் நன்றாகவே எழுதியிருந்தோம்.
அவருக்கும் அந்த வருட பேட்ச் மாணவர்கள் 56 பேரும் பாஸ். ஒருங்கிணைந்த, தஞ்சை மாவட்டத்தில் முதல் மாணவன். பள்ளியிலும் முதல் மாணவன் என்பதால் அவன் போட்டோ தாங்கி நின்றது. எல்லா பாடங்களிலும் 80 விழுக்காடு. கணக்கில் நூற்றுக்கு 100. 1970களில் 80 சதவீதம் வாங்குவது மிகவும் சிரமம்.
எஸ்ஸார் வாத்தியாரின் வகுப்பில் முதல் முறையாக எல்லோரும் ஆஸ் பாஸ், அதுவும் அந்தப் பள்ளியில் இவர் வகுப்பு மட்டும் 'ஆல் பாஸ் ' என்றதும், சக ஆசிரியர்கள் . தலைமை ஆசிரியர்,வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் தன் சொந்த செலவில், எஸ்ஸார் சார் ஒரு தேநீர் விருந்து, ஏற்பாடு செய்தார். விருந்து தினம் அன்று எங்கள் இருவரையும் கூப்பிட்டு அனுப்ப நான்கு முறை ஆள் அனுப்பியும் , நாங்கள் கலந்து கொள்ளவில்லை.
பின்னர் அவன் கல்லூரி படிப்புக்குத் திருச்சி புனித வளனார் கல்லூரி செல்வதாகவும், திருவானைக்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் ஏழை மாணவர்களுக்குச் சாப்பாடும், தங்குமிடமும் கொடுக்கும் சத்திரத்தில் படிக்கப் போவதாகவும் டிகிரி வரை கவலை இல்லை என்றும் சொல்லிவிட்டுப் போனான். எங்க வீடு வசதி என்பதால், நான் பக்கத்தில் உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் டிகிரி முடித்தேன்.
அடுத்த நான்கு வருடத்தில் ஓரிருமுறை சந்தித்துப் பேசியதுதான். பாதைகள் மாறியது. பயணங்களும் மாறியது. எந்தவித போக்குவரத்தோ, இல்லை.
இப்போது லாபியில் அவனைப் பார்த்தபோது அவன் மிக எளிமையாக முன்பு பார்த்த மாதிரி இருந்தான். எளிய உடைகளை அணிந்திருந்தான். தோற்றமும் அப்படியே.
என்னுடன் ஒப்பிடுகையில், என்னைவிட கொஞ்சம் வசதி குறைவாகவே தான் தெரிந்தது. அதுக்கு காரணம் என் வீடு வசதி அதிகம். என் மனைவி வீடும் வசதி அதிகம்தான். அவன் பாவம் சிரம நிலையில் இருக்கிறான் என்று நினைத்தேன்.
நான் கொஞ்சம் கர்வத்துடன் அதே சமயம் நிம்மதியாகவும் உணர்ந்தேன். கடவுள் என்னை நல்ல நிலையில் வைத்துள்ளார் என்று. அந்த ரிசார்ட் வகை ஹோட்டலில் டைனிங் ஹாலில் காப்பி குடித்துகொண்டே வகுப்பில் அடித்த கூத்துகள் பற்றிப் பேசினோம். தமிழ் வாத்தியார் பாடம் நடத்தும்போது ,கடைசிப் பெஞ்சுக்கு நான் போய் நிம்மதியாகத் தூங்கியதையெல்லாம் நினைவுக்கு வந்தது.
ஒருநாள் தமிழ் வாத்தியார், ' மாடு மேய்க்க தான் நீ லாயக்கு' என்று திட்டியதும் வகுப்பு முடிஞ்சதும் 'செய்யட்டுமா? இல்லை இப்பவே போகட்டுமா சார் ?' என்று நான் சொன்னதைக் கேட்டு,மொத்த வகுப்பும் கணேஷ் உட்பட மாணவர்கள் சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கும் அளவுக்குப் போனது.
'எஸ்ஸார் தங்களைப் பழிவாங்கியது, ரமாகிட்ட கோண்டு லவ் புரோபோசல் பண்ணி அடி வாங்கியது, வள்ளலார் கடை பின்புறம் விசு சாஸ்திரிகள் வீட்டு பையன் தம் அடித்ததை அந்த வழியா வந்த விசு அப்பாகிட்ட கோண்டு போட்டுக் கொடுத்தது, சோஷல் ப்ரேக் அன்னிக்கு எல்லோருக்கும் ஒத்த தெரு பிள்ளையார் கோயிலில் வகுப்பில் காசு வசூல் பண்ணி பிள்ளையாருக்கு அபிஷேகம் பண்ணி பிரசாதம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சுண்டல் வாங்கி அதை வகுப்பில் உட்கார வைத்துப் பரிமாறிக் கொண்டிருந்த போது, கரண்ட் கட்
ஆனதும் , இது தான் சமயம் எனத் தன்னைப் பழி வாங்கிய ரமாவின் இலையில் அவளுக்குப் பிடிக்காத சர்க்கரைப் பொங்கலை உக்கார்ந்து இடத்திலிருந்து ரமா இலைக்குத் தன் இலையில் பரிமாற பட்டத்தை தூக்கிப் போட்டது, அவள் புரியாமல் தவித்தது..' என அப்பப்பா எவ்வளவு இனிமையான நினைவுகள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் எல்லாவற்றையும் மலரும் நினைவுகளாக நாங்கள் இருவரும் பகிர்ந்தபோது அது சந்தோஷத்தைக் கொடுத்தது. குழந்தைகளாக மாறிவிட்டோம் என்றால் அதுதான் உண்மை.
நாங்கள் தொலைபேசி எண்களையும், தொடர்பு விவரங்களையும் பரிமாறிக் கொண்டோம். என் கார்டை கொடுத்தபோது அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது.
ஆனால் கணேஷ் என்ன செய்கிறான் என்கிற விவரத்தை கேட்க மறந்துவிட்டேன்.
இருவரும் எங்களுடைய காரை எடுக்க பார்க்கிங் இடத்துக்குச் சென்றோம் .அவன் காரைப் பார்த்ததும் பழையதாகத் தோன்றியது.அது '2001 சான்ட்ரா' மாடல் கார்.
லாபியில் அந்த வார ஞாயிற்றுக்கிழமை என் வீட்டில் மதிய உணவுக்கு அவனை, அவன் மனைவியுடன் அழைத்ததை மீண்டும் அவன் தன் காரில் ஏறும்போது நினைவூட்டினேன்.
'நிச்சயமாக வருகிறேன்' என்றான்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் வசித்த பார்க்வியூவுக்கு அவன் மட்டும் காரில் வந்தான். தன் மனைவியை அழைத்து வர முடியாததற்குக் காரணம் சொன்னான். எனது வீட்டைப் பார்த்து ஈர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், 'வெகு நேர்த்தி' என்று சொன்னதும் என்னைவிட என் மனைவி மிகவும் சந்தோஷமானான். அந்த வீட்டை வாங்க அவள் அப்பாவிடமிருந்து அறுபது சதவீதம் பண உதவி .மீதி லோன் போட்டுக் கடனில் தான் வாங்கி இருந்தேன். நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம். மனைவியின் சமையலை வெகுவாகப் பாராட்டினான்.
'அன்னிக்கு கேட்கணும்ன்னு நினைச்சேன்; அவசரமாக நீ கிளம்பி போனதால் கேட்க முடியல .நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்கே?' என்று நான் கேட்டபோது, 'நான் என்ன செய்கிறேன் என்று நேரில் வந்து பாரு. இப்போதைக்கு அப்படித்தான் சொல்ல முடியும்' என்றான்.
ஏதோ அவன் சிரம நிலையில் இருப்பதாக உள்ளுக்குள் நினைத்து இப்படிக் கேட்டேன். 'ஏதாவது உதவி வேண்டுமா கணேஷ்?'
தனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நலமாக இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டான். ஆர்வம் மிகுதியால், 'ஏதாவது கடனில் இருந்தால் சொல்லு நண்பனுக்காகக் கடனை அடைக்க உதவுகிறேன்.தயக்கம் வேண்டாம் கணேஷ்' என்று கூடச் சொல்லிப் பார்த்தேன்.
'டேய் சுந்தர் ! எப்ப வேணும்ன்னு எனக்குத் தோணும்போது, நிச்சயமாகக் கேட்பேண்டா!' என்று புன்முறுவலுடன் சொன்னான் கணேஷ்.
சுந்தருக்கு மனதில் ஒரு எண்ணம் பிறந்தது.நிச்சயம் ஒரு நாள் தன்னை நாடி வருவான் என்று. வாசல் வரை வந்து கணேஷை வழி அனுப்பும்போது டைனிங் டேபிளில் சொன்னதை மறுபடியும் சொல்றேன்.
'நீங்க இரண்டு பேரும் அவசியம் என் வீட்டுக்கு லஞ்ச்சுக்கு வரணும். நான் வீட்டுக்குப் போனதும் மனைவியுடன் கன்சல்ட் பண்ணி என்னிக்கு அழைக்கணும்ன்னு சொல்றேன்டா?' என்றான் கணேஷ்.
அவனுடைய பழைய காரில் ஏறி கிளம்பி போனான் கணேஷ். என்னிடம் சொகுசான கார் வைத்திருப்பதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன் .
'விரல்கள் அனைத்தும் சமமாக இல்லை' என மனதுக்குள் நினைத்துகொண்டேன்.
நான் அதிர்ஷ்டசாலி. நான் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன். நல்ல சம்பளம். சொகுசான வீடு.ஒரு ஆண் ,ஒரு பெண் குழந்தைகள்.மாமனார் சப்போர்ட் வேறு கூடுதல் பலம். இரண்டு வாரங்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் லஞ்சு சாப்பிட கூப்பிட்டு இருந்தான். கணேஷின் அந்தஸ்தில் அவள் ஈர்க்கப்படாததால், என் மனைவி கொஞ்சம் தயங்கி, 'நானும் வரணுமா?' என்றாள். கூட வர தயங்கினாள்.
'பள்ளியில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என் படிப்புக்கு நிறையச் சொல்லிக் கொடுத்தவன், போகாமல் இருந்தால் நல்லா இருக்காது' என்பதைச் சொல்லி அவளைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.
கடைசியில் வர சம்மதித்தாள்.
அவன் தங்கியிருக்கும் இடம் கடல் மட்டத்திலிருந்து 200 அடி மேல். இருந்தது போகும் வழியில் ஒரே பசுமை. தேயிலை எஸ்டேட்டைப் பார்த்துகொண்டே பயணித்தோம்.
அவனது வீட்டுக்குச் செல்லும் வழியைக் கேட்டோம். அவனுடைய பெயரை கேட்டவுடன் மரியாதையுடன் எழுந்து நின்று பேசினார்கள். வழியைச் சொன்னார்கள். அது ஒரு எளிய ஆனால் அழகான வீடு. ஒரு 4 படுக்கையறை பங்களா. முன்னால் இரண்டு பழைய மாடல் கார் நிற்பதைப் பார்த்தேன். வீட்டுக்குள் நுழைந்தபோது, வீட்டின் உள்ளே மனதை தொடும் அழகுடன் எளிமையாக நேர்த்தியாக இருந்தது. நுழைந்ததுமே ஒருவித இதமான மெல்லிசை, கூடவே வீடு முழுவதும் நறுமணக் காற்று உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எங்களை வாசலிலேயே அன்புடன் வரவேற்றான் கணேஷ்.
போனவுடன் நறுமணம் மிக்கக் காப்பி கொடுத்தான். பின்னர் வீட்டைச் சுற்றி காண்பித்தான். மதிய உணவு நன்றாகப் பரிமாறப்பட்டது.
அந்த நேரத்தில் அங்கிருந்த பட்டாபி, எஸ்ஸார் பையன் மாதிரி இருந்தது. அவனோடு பழகியது இல்லை. கையில் லேப் டாப் வைத்திருந்தான் கணேஷ். ஏதோ சொல்ல டைப் அடிக்கக் கொஞ்ச நேரம் கழித்துப் பிரின்டு எடுத்து வந்தான்.
'உன் மைண்ட் வாய்ஸ் கேட்டுது சுந்தர் நீ நினைச்சது சரி தான். பட்டாபி எஸ்ஸார் பையன் தான். எஸ்ஸார் இறந்து போனதை கேள்விப்பட்டு பட்டாபியை வரச் சொல்லி என்னுடன் வைத்துள்ளேன். இப்ப அவன் என் பெர்சனல் அசிஸ்டன்ட்.'
மதிய உணவின்போது, எனது எம்.டி. பற்றிப் பேச்சு வந்தது .
'கோபிநாத்தா? நாங்க இரண்டு பேரும் நண்பர்கள்டா?' என்றான் கணேஷ். அருகில் இருந்த டேபிள் ஒன்றில் கம்பெனி கிஃப்ட் ஹாம்பேர் ஒன்றைப் பார்த்தேன். நான் பணிபுரியும் கம்பெனியின், சுமார் 50% பங்குகளை அந்தக் கம்பெனி வைத்திருந்தது எனக்குத் தெரியும். அதுபற்றி விசாரித்தேன். என்னிடம், அந்தக் கம்பெனி தன்னுடையது என்று சொன்னான். இப்படிச் சொன்னதும் அதிர்ச்சியை நான் காட்டிக் கொள்ளவில்லை. வீட்டின் பின்புறம் உள்ள இந்தப் பெரிய தோட்டமும் தனக்குச் சொந்தமானது என்றும் சொல்ல வியப்பில் ஆழ்ந்தேன் , எவ்வளவு நேர்த்தியாக அழகாக ஒரு தோட்டம். ஒரு பக்கம் காய்கறிகள். இன்னொரு பக்கம் பழ தோட்டங்கள். பணியாள்கள் மிக அக்கறையுடன் தோட்டத்தைப் பராமரித்து வருவது தெரிந்து. உடம்புக்கும் மனதுக்கும் நிம்மதி தந்தது என்றால் அது உண்மை.
நான் கொஞ்சம் மிரண்டு போனேன்.எனக்குப் பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. அது அடங்க வெகு நேரமாயிற்று! இதுவரை 'வாடா' என்று கூப்பிட்டு வந்தவன் , எப்போது 'சார்' என்று கூப்பிட்டேன் ஏன் என்று தெரியவில்லை.
கிளம்பும்போது என் மனைவிக்குப் பட்டு புடவை வெள்ளிதட்டு தாம்பூலம். என் குழந்தைகளுக்கு டிரஸ். போன்றவற்றை அவன் மனைவி கொண்டு வந்தார். அப்போது தான் கவனித்தேன் ஒரு கால் ஊனத்தோடு.
'சாரிடா இப்போது தான் அவள் டாக்டரை பார்த்து விட்டு வந்தாள்?'
என்னையும் என் குடும்பத்தையும் அறிமுகப்படுத் தினான்/ தினார்.
தோட்டத்தில் காய்த்த பழங்கள் ,காய்கறிகளைக் காரின் டிக்கியில் பணியாளர்கள் வைத்தார்கள்..அவன் டேபிளில் இருந்த கிஃப்ட் ஹாம்பேரை என்னிடம் கொடுத்தான்.
அன்று பணிவு எப்படி என்பது பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். அது ஒரு பெரிய பாடம். தோற்றம் ஏமாற்றும். 'யாரையும் தரக்குறைவாகவோ,ஏளனமாகவோ, நினைக்கக் கூடாது' என்று நினைத்தேன்.
அன்று லாபியில் என் அந்தஸ்து பற்றி நான் கொண்ட கர்வம் இன்று கணேஷ் இருக்கும் நிலைமை. அவன் உழைப்பால், இந்த இடத்தை அடைந்துள்ளது என்பது மட்டும் நிச்சயம். அவனை அவமானப்படுத்திய எஸ்ஸார் பையனுக்கு வேலைப் போட்டுக் கொடுத்து, தன்னுடன் வைத்துள்ளான். இரண்டுக்கும் உள்ள இடைவெளி பார்த்தபோது, நான் வெட்கப்பட்டேன். 'அல்பனுக்கு அந்தஸ்து வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பானாம்' என்கிற பழமொழி நினைவுக்கு வந்தது. 'நிறைகுடம் தளும்பாது' என்ற பழமொழிக்கு அவன் பொருத்தமானவன்.
வீட்டுக்குத் திரும்பும்போது காரில் நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள். அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது.
கார் கண்ணாடியில் நான் என்னையே பார்த்தேன். கடன்கள், சுமைகளில் பகட்டான வாழ்வு வாழ்கிறேன், ஆனால் ,எனக்குச் சம்பளம் கொடுப்பவர் மிகவும் அமைதியானவர், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.
உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாகத் தான் ஓடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.