
விமர்சனத்துக்கு பதிலளித்த கயடு லோஹர்!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நடிகை கயடு லோஹரும் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருக்கிறார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
இதனிடையே அவர் தனக்கு தானே மீம்ஸ் போட்டுக் கொண்டு தன்னை புரோமோட் செய்துகொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு படக் குழுவினர் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில், தெலுங்கு 'யூ டியூப்' சேனல் ஒன்றுக்கு பிரதீப் ரங்கநாதனும், கயடு லோஹரும் பேட்டி அளித்தனர். அங்கு அவர்களுக்கு ஃபோனை பரிமாற்றிக் கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது பிரதீப் கயடுவின் போனில் 'கயடு லோஹர் தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை' என்று மீம்ஸ் கிரியேட் செய்திருப்பதை பார்த்து சிரித்தார். மேலும், 'உங்களுக்கு நீங்களே மீம் கிரியேட் செய்துகொள்வீர்களா?' என்று கேட்டு கிண்டலும் செய்திருந்தார்.
இதுதொடர்பான காணொலி இணையத்தில் வைரலான நிலையில், 'தனக்கு தானே மீம்ஸ் போட்டுக் கொண்டு தன்னை புரொமோட் செய்துகொள்கிறார் கயடு லோஹர்' என்ற விமர்சனம் செய்துவருகின்றனர்.
இந்த விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில் கயடு லோஹர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், ' நாங்கள் அளித்த பேட்டி தொடர்பான விமர்சன காணொலி இணையத்தில் பார்க்கிறேன். அந்தப் பேட்டியில் நீங்கள் பார்த்த அனைத்தும் நகைச்சுவைக்காக செய்தவை.
அந்த நேர்காணலை சுவாரசியமாக்குவதற்காக நானும் பிரதீப்பும் முன்பே அதைப் பற்றி பேசிக்கொண்டோம். உங்கள் அனைவரையும் சிரிக்க வைப்பதே குறிக்கோளாக இருந்தது. நெகட்டிவான விஷயங்களைப் பரப்ப வேண்டாம். என்னை ஆதரித்தவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி' என்று தெரிவிதிருக்கிறார்.
நடிகை டு புகைப்படக்கலைஞர்!
திரைப்பட நடிகையாக அறியப்படும் சதா, அர்ப்பணிப்பான கானுயிர் புகைப்படக் கலைஞர், வன விலங்குப் பாதுகாப்பு ஆர்வலர், விலங்குகள் நல உரிமை அமைப்பின் ஆதரவாளர் என சூழலியல் பாதுகாப்பில் அதிதீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் வனவிலங்கு சரணாலயங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சதா, அங்கேயே தங்கி காட்டுயிர்களின் வாழ்வியலை கவின்மிகு காட்சிகளாகப் படம் பிடித்து வருகிறார். அடர் வனப் பகுதிக்குள் சஃபாரி சென்று அரிய வகை உயிரினங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்.
'சதா வைல்டு லைஃப் போட்டோகிராபி', 'சதா வைல்டு ஸ்டோரி' என்ற பெயரில் சோஷியல் மீடியாக்களில் சதா வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மில்லியன் கணக்கான வியூவ்ஸ்களை கடந்து வருகின்றன. யானைகள், புலிகள், சிறுத்தைகள் மட்டுமின்றி, ராஜ நாகம் போன்ற பாம்புகள், போரடைஸ் ஃபிளை கேச்சர் போன்ற பறவைகளையும் படம் பிடித்து வருகிறார்.
சதாவை முன்மாதிரியாகக் கொண்டு, கர்நாடகாவில் பல பெண்கள் கானுயிர் புகைப்படக் கலைஞர்களாக உருவாகி வருகின்றனர். கர்நாடகாவின் பந்திப்பூர் உள்ளிட்ட தேசிய பூங்காக்களில் பல பெண்கள் துணிச்சலாகவும் தைரியத்துடனும் கானுயிர்களைப் படம் பிடித்து வருகின்றனர். சதாவால் கானுயிர் புகைப்பட கலைஞராகவும் ஆர்வலர்களாகவும் மாறிய பெண்கள் பலரும் காடுகள் தினத்தன்று பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
வைரலாகும் மாளவிகா மோகனின் பதிவு!
மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'தங்கலான்' படத்தில் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார்.
தற்போது 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, அவ்வப்போது விளம்பரம், மாடலிங் சூட்டில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் மாளவிகா மோகனன் தன் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், 'ஒரு செழிப்பான வனப் பகுதியின் உள்ளே, மிக அழகான அருவியின் கீழே, என் முகத்தில் மழைத் துளிகள் பட்டதை உணர்ந்து, ஒவ்வொரு மூச்சிலும் வனத்தின் வாசனையை உணர்ந்து, மஞ்சள் வெயிலின் ஒளிக்கதிர்கள் மரக்கிளைகளின் வழியாக என் முகத்தில் ஒளிர்வதை உணர்ந்து.. பெரும் உற்சாகமாக இருந்தேன்.
எனது ஆன்மா மிக மகிழ்ச்சியாக இருக்கும் இடம் இதுதான். இந்த அழகிய புகைப்படங்களை எடுத்த இந்த அற்புதமான குழுவை நான் பெரிதும் நேசிக்கிறேன். சிறுசிறு ஓடைகளைக் கடந்து அருவிக்குச் சென்றோம், இந்த அழகான படங்களை எடுப்பதற்காக...' என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
-