நம்பினால் நம்புங்கள்...

உலகம் விசித்திரமானது. நம்மைச்சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களும் வித்தியாசமாக இருக்கும்.
நம்பினால் நம்புங்கள்...
Published on
Updated on
4 min read

உலகம் விசித்திரமானது. நம்மைச்சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களும் வித்தியாசமாக இருக்கும். பிற நாடுகளில் நடைபெறும் சுவாரசியமான நிகழ்வுகளைக் கேட்கும்போது, நம்பாமலும் இருக்க முடியாது. அந்த வகையில் சில ருசிகர நிகழ்வுகளை அறிவோம்:

'பவ்ரோக்லா குள்ளர்கள்'

போலந்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் பவ்ரோக்லா. இதை 'போலந்தின் வெனிஸ்' என அழைப்பர். நிறைய நதிகள், கால்வாய்கள், பாலங்கள் உள்ளன. இதனை மீறி சாலைகளில் முக்கிய இடங்களில் 2030 செ.மீ. உயரம் கொண்ட சிலைகள் உண்டு.

2024 நிலவரப்படி, 800க்கும் அதிகமான குள்ளச் சிலைகள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்தச் சிலைகளை 'கூகுள் மேப்' வாயிலாகத் தேடித் தேடி கண்டுபிடித்து ரசிப்பர்.

2001இல் போலந்தில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கத்தின் சின்னமாக ஆரஞ்சு இருந்தது. இந்தச் சின்னத்தை நினைவுப்படுத்தும் வகையில், முதன் முதலாக ஸ்வீட்னிகா தெருவில் ஒரு குள்ளனின் நினைவுச் சின்னம் வைக்கப்பட்டது.

இதன் பின்னர், குள்ள உருவங்கள் வைக்கப்படுவது துவங்கியது. இதைப் பார்க்கவே சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் குள்ளர்கள் விழாவும் நடக்கிறது. தற்போது பெர்லின்,களனாஸ், லிவுஸ் நகரங்களிலும் குள்ளச் சிலைகள் தோன்ற ஆரம்பித்துள்ளன.

மிருகங்களும் நம்பிக்கையும்..

மிருகங்களில் சிலவற்றைப் பார்த்தாலே நல்ல அதிர்ஷ்டம் என மக்கள் நம்புகின்றனர்.

சீனாவில் வீட்டுக்குள் வெளவால் நுழைந்து வட்டமிட்டால் வீடு தேடி அதிர்ஷ்டம் வருகிறது எனப் பொருள். சீன மொழியில் வெளவாலை 'ப்யூ' என அழைப்பர். இதற்கு நல்ல அதிர்ஷ்டம் என பொருள். நடு இலையுதிர் திருவிழாவின்போது, வெளவால் வடிவ விளக்குகளை வீடுகள், வீதிகளில் சீனர்கள் ஏற்றி வைப்பர்.

'இரண்டு வெளவால்கள் எதிரெதிராக இருந்தால் இரட்டை அதிர்ஷ்டமானது வீடு தேடி வரும். ஐந்து வெளவால்கள் சேர்ந்திருந்தால், நல்ல ஆரோக்கியம் , நீண்ட ஆயுள், செழுமை, நல்லொழுக்கம், அமைதியான மரணம் கிட்டும்' என பொருள்.

சீன கட்டடக் கலையில் வெளவால்கள் பீச் மரத்தை சுற்றி வருவதுபோல், காட்சி சின்னங்களை கலைவேலைகளில் வரைந்திருப்பதும் சகஜம். நகைகளில் ஜாடோ வகை வெளவால்கள் காணப்படும். தங்க வண்ண வெளவால்களை துணிகள், பரிசுப் பொருள்களில் காணலாம்.

ஒரு வட்டமான பெட்டியைச் சுற்றி வெளவால்கள் இருந்தால் அவை ஆசிர்வாதம், நல்லொழுக்கத்தை கொண்டு வரும் என நம்பிக்கை. இரண்டு பட்டாம்பூச்சிகளின் பின்னால் வெளவால் பறப்பது போல் திருமணப் பரிசுகளில் போட்டிருந்தால் அவை தற்காப்பு ஆசிர்வாதங்களாக எடுத்துகொள்ளப்படும்.

சைபீரியர்கள் கரடிகளை தங்கள் மூதாதையர்களாகக் கருதுகிறார்கள். மனிதர்களுக்கும் ஆவிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் திறன் கொண்டவை கரடிகள் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சைபீரிய நாடுகளில் கரடித் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கரடிகளுக்கு மனிதர்களின் பேச்சும்,எண்ணமும் புரியும் என்பதால், அதனிடம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கொண்டாடிய காலமும் உண்டு.

வேட்டையாடுதல், மீன்பிடித்தலுக்குச் செல்லும்போது கரடியை பார்த்தால் நல்ல வேட்டை உண்டாம். கலைமான் மந்தைகளை பராமரிக்கும்போது மற்ற மிருகங்களிலிருந்து அவற்றை காப்பாற்றும் என்ற நம்பிக்கை.

கரடி நர மாமிச உண்ணி. மக்களும் அதன் பாதங்களில் உள்ள சதையை ரசித்து சாப்பிடுவர். அதன் மாமிசம் கெட்டியானது. சில சைபீரியன் கரடிகள் 360 கிலோ எடை வரை இருக்கும். அது வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்யும். நேரடியாக அதனுடன் மோதுவது ஆபத்தானது. தனிமையான விலங்கு. நீச்சலடிக்கும், ஓடும், மரங்கள்மீது ஏறும். அவற்றின் பித்தம் மருந்துவப் பொருள். இதற்காகவே கரடி வளர்க்கும் பண்ணைகள் சைபீரிய நாடுகளில் அதிகம்.

ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பெண்களுக்கு 'ஊர்கலா' என்ற பெயர் சகஜம். இதன் பொருள் 'சின்ன பெண் கரடி'. கரடி பின்லாந்து நாட்டின் தேசிய விலங்கு. பல குழந்தைகள் கதைகளில் கரடிகளுக்கு முக்கிய இடம் உண்டு. கொரிய கலாசாரத்தில் ஒருவர் பிடிவாதமாக இருந்தால், அவரை கரடியைப் போல என கூறுவது உண்டு.

பங்குச் சந்தையில் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தால் அதனை 'கரடி சந்தை' என குறிப்பிடுவர். இருந்தாலும், 'சைபீரியாவில் கரடி நேரில் வந்தால் மூதாதையர் ஆசியுடன் போகும் காரியம் நிறைவேறும்' என்ற நம்பக்கையும் உள்ளது.

காளைகள் அதன் திறன், கம்பீரத்துக்குப் பெயர் போனவை. பாகன் கலாசாரம் ,கிரீக் கலாசாரம் போன்றவற்றில் மூதாதையர் நிம்மதியையும், முக்தியையும் பெற காளைகளை பலி கொடுத்துள்ளனர். காளைகளை முதலில் அடக்கி மனிதக் காளைகளை சந்தித்து வெற்றி கொள்ள வேண்டிய போட்டிகள் நடந்துள்ளன. அங்கு காளைகள் கம்பீரத்தின் பிரதிபலிப்பு.

சீன புராணக் கதையின்படி, மான்கள் நீண்ட வாழ்க்கை, செல்வம், நல்ல எதிர்காலத்தை பிரதிபலிப்பவை. தாங் வம்ச பேரரசர் ஹுசுவான் துசாங் தன்னுடைய தோட்டத்தில் வெள்ளை மானைக் கண்டார். அது நீண்ட, வளமான வாழ்வை காட்டுவதாக நம்பினார். புத்த ஜாதகக் கதையின்படி, மான் ஒன்பது வண்ணங்களுடன் தென்பட்டால் அதிர்ஷ்டம். நம்பிக்கை இழந்தவர்களோ இதனை பார்த்தால் மீண்டும் நம்பிக்கையை திரும்பப் பெறுவர்.

இந்தியாவில் யானைகள் தெய்வமாக வணங்கப்படுகின்றன. பொதுநிகழ்ச்சிகளிலும் அவை அலங்காரம் செய்யப்பட்டு வாசலில் நிற்க வைக்கப்படுகின்றன. மைசூரு தசராவின்போது அதன் மீது தங்கச் சிம்மாசனத்தில் சாமுண்டேஸ்வரி அம்மன் அமர்த்தப்பட்டு ஊர்வலம் பல லட்சம் மக்கள் தரிசிக்க பவனி வருகிறது. யானை முகம் கொண்ட விநாயகரை யாரால் மறக்க முடியும்.

தாய்லாந்தில் வெள்ளை யானையை பார்த்தாலே அதிர்ஷ்டம். தேவர்களின் தலைவன் இந்திரனிடம் ஐராவதம் யானை உள்ளது. யானைகள் அமைதி, மனவலிமை, சக்திக்கு அடையாளம். சிலர் வீடுகளில் யானை செல்லப் பிராணி. 'அடையடி கஜமேளா' என கேரளத்தில் யானைகளுக்கு இடையே போட்டியே நடக்கிறது.

மபோகோ சிங்கக் கூட்டணி

தென் ஆப்பிரிக்காவின் சபி மணல் சார்ந்த விஸ்தாரமான பகுதியில் ஆறு சிங்கங்கள் கூட்டணி அமைத்து, சுமார் 70 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தங்களுடைய ராஜ்ஜியத்தை நடத்தி வந்தன.

குற்றவாளிகளைக் கையாளுவதில் கடுமையான முறைகளைப் பயன்படுத்திய ஒரு புகழ் பெற்ற தென் ஆப்பிரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் பெயரால் இந்த ஆறு கூட்டணி சிங்கங்கள் 'மபோகோ சிங்கங்கள்' எனப்பட்டன. 'மபோகோ' என்றால் 'முரடன்' என்று பொருள். இவற்றில் மூத்தது மகுலு. இது மட்டும்தான் இந்தப் பகுதியை சாராதது.

மகுலு என்றால் பெரியவன், ஈர்க்கத்தக்கவன் என்று பொருள். இதன் கம்பீரமானது மற்ற ஐந்தையும் 'அண்ணன்டா' என அழைக்க வைத்தது.

இரண்டாவது சிங்கம் 'பிரட்டி பாய்' என அழைக்கப்படும் அழகு பையன். தந்திரசாலி. முடிந்தவரை சண்டையை தவிர்த்துவிடுபவன். மூன்றாவது 'த்ரிடி' . இது சிகை அலங்காரத்துக்கு பிரபலம். தனித்துவமான முக பிடரியை கொண்டிருந்ததால் இந்தப் பெயர். தனது சொந்த சகோதரனின் குட்டிகளையே கொன்றதால் 'சாத்தான்' எனவும் பெயர்.

நான்காவதான 'ஸ்க்யூ ஸ்பைன்' சிங்கத்தின் முதுகு தண்டு, இடது இடுப்பில் உள்ள தனித்துவமான தன்மையால் இந்தப் பெயர். ஐந்தாவதான 'ட்ரெட்லாக்ஸ்' என்ற சிங்கத்தின் மேனியில் ஏதோ சிக்கிக் கொண்டு,அதனால் ரோமம் ஒரு வகையான ட்ரெட் லாக்கை உருவாக்கியிருந்தது. ஆறாவது சிங்கமான 'கின்லி வால்' வாலில் ஒரு நூதன வளைவு உண்டு.

2004-இல் இவை கூட்டணி அமைத்து, மேற்கு நோக்கி நகர்ந்து சபி மணல் பகுதியை ஆக்கிரமித்தன. நீர் யானைகள், இளம் காண்டா மிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளிட்ட பல விலங்குகள்தான் இரை. 2006இல் இந்தக் கூட்டணி முதல் முறையாக சபி மணல் பகுதியை அடைந்தபோது, ஏற்கெனவே இருந்த 4 சிங்கக் கூட்டணியின் தலைவனை கொன்றுவிட மற்ற 3 சிங்கங்கள் பயந்து ஓடிவிட்டன. இவை ஆண் சிங்கங்களைக் கொல்லும். பிறகு அவற்றின் குழந்தைகளை கொன்று விடும். அதாவது சந்ததியே இல்லாமல் செய்து விடும். .

2010இல் 5 சிங்கங்களின் கூட்டணி ஒன்று உருவாகியிருந்தது. அனைத்தும் ஆண் சிங்கங்கள். இதன் தலைவன் 'மாஜிங்கி லேன்ஸ்' வித்தியாசமாய் மபோகோவின் எல்லைக்குள்நுழைந்து சவால் விட்டன. இதில் 'கின்லி வால்' கொல்லப்பட்டது. மாஜிங்கி லேன்ஸ் அந்தப் பகுதியைக் கைப்பற்றியது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் இரண்டு மாபோக்கள் கொல்லப்பட்டன. 2012இல் சவால் மேலும் வலுப்பட்டது. பின்னர் 'த்ரி.டி'யும் துரத்தி கொல்லப்பட்டது. மகுலு, அழகிய பையன் மட்டுமே பாக்கி. 2012இல் அவைஜோடியாக ஒரு தேசிய பூங்காவில் நுழைந்து ஒரு காட்டெருமையை அடித்து கொன்றதை பலர் பார்த்துள்ளனர்.

2013இல் மாலாமலாவில் மகுலு தனித்து வலம் வந்தது. பிறகுஅதன் முடிவு தெரிய வேயில்லை. தற்போது இந்தப் பகுதியில் காட்டு நாய்கள் அமோகமாய் பெருகி விட்டன.சிங்கக் கூட்டங்கள் இடம் பெயர்ந்தோ அல்லது சிதறியோ காணாமல் போய் விட்டன.

மபோகோக்களின் காலத்தில் சபி மணல் பகுதியில் உதவி வார்டனாக இருந்த வில்லெம் போத்தா கூறுகையில், 'மபோகோ சிங்கங்கள் குறைந்தது 100 சிங்கங்களுக்கு மேல் கொன்று புசித்திருக்கும்.

15 சிங்கங்களுக்கு மேல், இவற்றின் கூட்டு வேட்டையால் முதுகு தண்டுகள் துண்டிக்கப்பட்டு அவை வாழவே கஷ்டப்பட்டபோது, அவற்றின் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வர அவற்றை நானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன். எவ்வளவு சிங்கக் கூட்டணிகள் வந்தாலும் மபோகோ சிங்கங்களின் அட்டகாசத்துக்கும், கொடூரத்துக்கும் ஈடிணை இல்லை' என்றார்.

ராஜி ராதா, பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com