மூன்றாவது ஆண்டாக வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பில் ஐ.ஐ.டி. சென்னை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேச அரசு, மத்திய அரசின் ரயில்வே கலாசாரம் சுற்றுலா ஜவுளி அமைச்சகங்களின் பங்களிப்போடு கடந்த பிப்ரவரி 15 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கலைஞர்கள், தொழில் முனைவோர், பெண்கள் என பல்வேறு பிரிவினருமாக சுமார் 1,200 தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டல் ரயில் நிலையத்தில் ஒன்றுசேர்ந்து, ரயில் மூலமாக வாரணாசிக்குச் சென்று, கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள் பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்யவும் வாய்ப்பையும் பெற்றனர்.
பயண அனுபவங்கள் குறித்து சிலரிடம் பேசினோம்.
ஆவடியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏகாம்பரேஸ்வரன்
தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடியே எழுபது லட்சம் பேரில் 1,200 பேருக்கே கிடைத்த அரியதொரு வாய்ப்பு. ஆயிரத்தில் ஒருவனாக எனக்கும் கிடைத்தது மகிழ்ச்சியாகும். வாரணாசியில் சென்று இறங்கியபோது, வாரணாசி மாவட்ட ஆட்சியரான தென்காசியைச் சேர்ந்த ராஜலிங்கம், ரயில் நிலையத்துக்கு வந்து எங்களை வரவேற்றார்.
'வணக்கம்! காசி!' என்ற தமிழ்ப் பதாகைகளும் வரவேற்றன.
தினமும் பல லட்சம் பேர் வருகை தரும் விசுவநாதர் கோயிலில் அரை மணி நேரத்தில் அருமையான தரிசனம். தலைமை பண்டிட் கோயிலின் பெருமைகளை எங்களிடம் விவரித்தபோது, மெய்சிலிர்த்தது. இது தமிழ்நாட்டு சொந்தங்களின் தமிழ் சங்கமமும்கூட!
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த செளபர்னிகா
'பெண் சுய தொழில் முனைவோர்' என்ற பிரிவில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் சென்ற குழுவில் உடன் வந்த அனைவருகே பெண்கள்.
'காசி சங்கமம்' காண்பதற்கான பயணம் என்றாலும், காசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய மூன்று புனிதத் தலங்களையும் தரிசித்தோம். காசி என்பது வடக்கே தொலைதூரத்தில் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிற ஒரு ஊர் என்று நினைத்தேன்.
அங்கே சென்று பார்த்தபோதுதான் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் தொன்று தொட்டே ஒரு நெருக்கமான உறவு இருந்து வந்திருக்கிறது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்த ராஜோபசாரம்தான். இந்த காசி தமிழ் சங்கமப் பயணம் ஆயுளுக்கும் எனது நினைவில் நிற்கும்.
சீர்காழியைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்ரீனிவாசன்
புத்தகங்கள் மூலமாக அறிந்த விஷயங்களை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பானது பிரதமர் நரேந்திர மோடியின் மூளையில் உதித்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கிடைத்தது.
உடன் பயணித்தோருடன் கலந்துரையாடியபோது, 'இளையத் தலைமுறையினர் தேசிய எழுச்சியோடு இருக்கின்றனர்' என்பதை அறிய முடிந்தது. அவர்களில் ஒருவராக உடன் வந்திருந்த பார்வைத்திறன் குறை உடைய ஆராய்ச்சி மாணவர், 'நான் எனது அகக் கண்களால் காசியைக் காண விரும்புகிறேன்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருளான 'அகத்திய மாமுனிவரது சித்த மருத்துவப் பங்களிப்பு' குறித்த கண்காட்சியை தமிழர்களோடு, பல்வேறு தரப்பினரும் ரசித்தனர்.
புனித கங்கை நதியில் மாலை வேளையில் படகில் பயணித்தோம். சலசலத்து ஓடும் கங்கை, கூட்டமாகப் பறக்கும் பறவைகள், மின்னும் வண்ண விளக்குகள், நீரில் வண்ண விளக்குகளின் எழில்மிகு பிரதிபலிப்பு .. போன்றவற்றின் அழகையும், அனுபவத்தையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இதேநேரத்தில் எனது முன்னோர்களுக்கு நீத்தார் நினைவுக் கடமையை நிறைவேற்றியதும் மிகுந்த ஆத்ம திருப்தியை அளித்தது.
சேலத்தைச் சேர்ந்த தையல் கலைஞர் ஹேமா
நான் எனது வாழ்க்கையில் என் பெற்றோரோ, உறவினர்களோ இல்லாமல் தனியாகப் பயணித்ததில்லை. கடந்த ஆண்டுகளின் காசி தமிழ் சங்கமம் பற்றி அறிந்தது முதலே, 'அடுத்த முறை செல்ல வேண்டும்' என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் அப்பாவும் தைரியம் சொல்லி ஊக்குவித்தார். இணையத்தில் விண்ணப்பித்து, குவிஸ் கேள்விகளுக்கு பதில் சொல்லி, நானும் மகளிர் பயணக் குழுவில் தேர்வானேன்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எனது பயண ஆவணங்களைச் சரிபார்த்து, ஒரு குடை, அடையாள அட்டை, தொப்பி, பேனா, தண்ணீர் பாட்டல், காசி குறித்த புத்தகம் உள்ளிட்டவை அடங்கிய கைப்பையை அளித்தனர். வெவ்வேறு நாள்களில் ஐந்து ரயில்களில் மூன்று பெட்டிகளை என்னைப் போன்ற காசி சங்கமப் பயணிகளுக்காகவே ஒதுக்கி இருந்தனர்.
ரயிலில் காலையில் சிற்றுண்டி, பகல் உணவு, இரவு உணவு, முற்பகல், பிற்பகலில் டீ, ஸ்நாக்ஸ் என்று வேளாவேளைக்கு அருமையான விருந்தோம்பல்தான். வட இந்தியாவில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், சுடச்சுட தென்னிந்திய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
வாரணாசி கோயில்கள், பாரதி இல்லம், கலைநிகழ்ச்சிகள் என எங்கே போனாலும் குளிர்சாதனப் பேருந்துகள்தான். வாரணாசியிலிருந்து பிரயாக்ராஜ், அயோத்தி சென்று வரும்போது, காவல் துறை பாதுகாப்பு, பிரத்யேக அனுமதி என சிறப்பு ஏற்பாடுகள்.
இரவு தங்குவதற்கும் நட்சத்திர உணவகங்கள். பிரயாக்ராஜில் நதிக்கரையில் கூடாரத்தில் தங்கியது புது அனுபவம். எட்டு நாள்கள் கூடவே இருந்ததில் ஏகப்பட்ட புதிய நட்புகள். மீண்டும் சென்னை திரும்பியபோது, குடும்பத்தினர் இல்லாமல் தனித்து பயணித்திருக்கிறேன் என்ற உணர்வு இல்லாமல், சக பயணிகளிடமிருந்து , பிரியாவிடை பெற்றேன்.
பரமக்குடியைச் சேர்ந்த எல்.ஐ.சியில் பணியாற்றும் அனந்தராமன்
கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 30 பேர் காசி தமிழ் சங்கமத்துக்குச் சென்று வந்து, தங்கள் அனுபவங்களைச் சொன்னபோதே எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. காசி விசுவநாதர் அருளால் இந்த வருடம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. சென்ற ஆண்டுகளிலும் சரி, இனி வரும் ஆண்டுகளிலும் சரி காசி தமிழ் சங்கமம் பங்கேற்பாளர்களுக்கு அரிய வாய்ப்பு என்னவென்றால், கும்பமேளாவில் புனித நீராடல்தான்.
காவல் துறையின் வாகனம் முன் செல்ல, அடுத்தடுத்து நாங்கள் சென்ற ஐந்து பேருந்துகள் பின் தொடர சுமுகமான பிரயாக்ராஜ் பயணம். கூடாரங்களில் தங்கவும், உணவுக்கும் சிறப்பு ஏற்பாடுகள். காலை ஐந்தரைக்கே நாங்கள் தயாராகிவிட, இருபுறமும் காவல் துறையினர் கயிற்றுத் தடுப்பு அமைத்து வழி ஏற்படுத்திக் கொடுக்க, நாங்கள் நிதானமாக நடந்து சென்று எங்களுக்கென்றே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த சுமார் 100 மீட்டர் கங்கை நதிப் பகுதியில் புனித நீராடினோம்.
மன மகிழ்ச்சியோடு கூடாரத்துக்குத் திரும்பினோம். இப்படி சிரமமே இல்லாமல் கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. 'தற்கால கலாசாரப் பரிவர்த்தனை' என்ற அடிப்படையில் ஓரிரு உத்தரப் பிரதேச கலை நிகழ்ச்சிகளையும், ஓரிரு வட இந்திய உணவுகளையும் ருசிக்கும் வகையில் சேர்த்திருக்கலாம்.
எஸ். சந்திரமெளலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.