மரபார்ந்த விளையாட்டுகளை மீட்டெடுக்கவும், சிறார்களிடம் படைப்பாக்கத் திறனை உருவாக்குவதுடன் வாழ்வியல் திறன்களைப் பயிற்றுவிக்கும் கலைக் கொண்டாட்டம் புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்தும் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகளுக்கு பம்பரம், கோலிக் குண்டு, தாயக்கட்டை உள்ளிட்ட மரபார்ந்த விளையாட்டு உபகரணங்களுடன் சேமிப்பை வலியுறுத்தும் உண்டியல், சிறார் நூல்கள் உள்ளிட்ட 18 பொருள்களைக் கொண்ட தொகுப்பு விலையின்றி வழங்கப்பட்டது.
முகாமில், ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட 17 சிறார் நூல்களை வாசித்து முடித்த 17 மாணவ, மாணவிகள் அதன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் இந்த அமர்வை ஒருங்கிணைத்தார்.
முகாம் ஒருங்கிணைப்பாளரும், அரசுப் பள்ளி ஆசிரியரும் வீதி கலை இலக்கியக் களத்தைச் சேர்ந்தவருமான கஸ்தூரி ரெங்கன் கூறியது:
'திருச்சியைச் சேர்ந்த 'பல்லாங்குழி' என்ற அமைப்பு இதுவரை மாநிலம் முழுவதும் 10 சிறார் கலைக் கொண்டாட்ட முகாம்களை நடத்தியிருக்கிறது. புதுக்கோட்டையில் முதல் முறையாக நடைபெற்ற இந்த முகாம் 11-ஆவது முகாம்.
'பல்லாங்குழி' இயக்குநர் இனியன் ராமமூர்த்தி முகாம்களை ஒரு தவமாகவே மேற்கொண்டு வருகிறார். கணினிப் பொறியியலில் பட்டதாரியான இனியனை சில ஆண்டுகளுக்கு முன்பு பூச்சிக் கடியால் பாதிக்கப்பட்டு நுரையீரல் செயலிழப்புடன் கோமா நிலைக்குப் போய் மீண்டு வந்தவர்.
ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த இனியன், ஒவ்வொரு ஊருக்கும் இயல்பான மரபு சார்ந்த விளையாட்டுகளை ஆவணப்படுத்தினார். அவ்வாறு ஆவணப்படுத்திய 256 விளையாட்டுகளை சிறார்களிடம் கொண்டு செல்வதற்காகவே 'பல்லாங்குழி' அமைப்பை உருவாக்கினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த ஒரு நாள் முகாமுக்கு முன்பே அரசுப் பள்ளிகளைத் தேடிப் போனார். மாணவர்களிடம் ஏற்கெனவே தேர்வு செய்த சிறார் நூல்களை வழங்கிப் படிக்கச் சொன்னார். படித்த மாணவர்களை முகாமில் பேச வைத்தார்.
கோமாளி வேடமணிந்த மூவர் முகாமை களைகட்ட வைத்தனர். சமூகச் சிந்தனைகளை எளிதாக சிறார்களிடம் விதைக்கும் வகையில் பேசிய அந்தக் கோமாளிகள், முடிவில் 'போக்சோ' சட்டத்தின் செயல்பாடுகளையும், அதற்கான தொடர்பு எண் 1098, உயர்கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்கி தமிழ்நாடு அரசின் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் விழிப்புணர்வு எண் 14417 ஆகியவற்றையும் சொல்லி முடித்தனர். அதன்பிறகு அறிவியல் செயல்பாடுகளும் நிகழ்த்தப்பட்டன.
மிகவும் செயற்கையான வாழ்வியல் நம்முள் புகுந்துவிட்ட இந்தக் காலத்தில் இதுபோன்ற முகாம்கள் அவசியம்' என்கிறார் கஸ்தூரி ரெங்கன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.