கும்மிப்பாட்டு, கோலாட்டம் என்றாலே பெரும்பாலும் பெண்களே இடம்பெற்றிருப்பார்கள். ஆனால் ,தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட வாசுதேவநல்லூரில் உள்ள ஒரு கும்மிபாட்டு குழுவில் முழுவதும் ஆண்களே இருக்கின்றனர். இவர்கள் பட்டதாரி இளைஞர்கள் என்பதோடு, ஆர்வமாக கும்மி பாட்டு, கோலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, 'கும்மி பாட்டு' என்ற பாரம்பரியக் கலையைப் பரப்பி வரும் குழுவின் தலைவரும், பாடகருமான அண்ணாதுரையிடம் பேசியபோது:
'எனது தந்தை மாடசாமி, வாசுதேவநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். எனக்கு 15 வயதாகும்போது, திருவிழாக்களில் நடைபெறும் கும்மி பாட்டையும் கோலாட்டத்தையும் பார்த்து அதை கற்கும் ஆர்வம் ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் தான் பிரசித்தி பெற்ற இந்தக் கலையில் பெரும்பாலும் பெண்கள்தான் இடம்பெற்றிருப்பார்கள். அந்தக் கலை மீது ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக, எங்கு கோயில் கொடை விழா நடந்தாலும் அங்கு சென்று கும்மி பாட்டு நிகழ்ச்சியை பார்ப்பேன். பின்னர் அந்தக் குழுவை வழிநடத்தும் பாடகர்கள் உள்ளிட்டோரிடம் பழகி பாடல்களை கற்றேன்.
பின்னர், தனியாக 'அண்ணாமலை கும்மி பாட்டு கோலாட்டக் குழு' என்ற பெயரில் குழுவைத் தொடங்கினேன். பாடகர்கள்,துணை பாடகர்கள், கும்மி அடிப்பவர்கள்,குலவையிடுபவர்கள், உறுமி, தவில் மேளம், உடுக்கு வாசிப்பவர்கள் என அனைவருமே ஆண்கள் தான்.
'பெண்கள் இல்லாமல் எப்படி கும்மி பாட்டு குழுவை நடத்தப் போகிறீர்கள்?' என ஆரம்பத்தில் பலரும் என்னிடம் கேட்டனர். ஆனால், இப்பொழுது இக்குழுவின் செயல்பாட்டை பார்த்து அப்படி கேட்டவர்கள் பாராட்டி வருகின்றனர்.
முப்பது ஆண்டுகளாக இந்தக் குழு மூலம் கும்மி, கோலாட்ட நிகழ்ச்சியை திருவிழாக்களில் நடத்தி வருகிறோம். எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்றாலும் கூட பாரம்பரியக் கலை அழிந்து விடக்கூடாது என்பதற்காக எனது ஐம்பத்து ஐந்து வயதிலும் இடைவிடாமல் நடத்தி வருகிறேன். ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளேன்.
குழுவில் பட்டதாரி இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் இணைந்து வருவது எனக்கு பெருமையாக உள்ளது. அவர்களுக்கு நான் இந்தக் கலையை கற்று தருவதால், பாரம்பரிய கலையை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இந்த கலையை என் உயிர் உள்ளவரை கற்றுக் கொடுக்க வேண்டும். கலையை அண்டை மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என்பதுதான் எனது ஆசை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.