டேபிள் டென்னிஸில் இந்தியாவின் புகழை கொடிகட்டி பறக்கச் செய்த சரத் கமல், இருபத்து ஐந்து ஆண்டுகள் சிறப்பாக விளையாடிய நிலையில் ஓய்வு பெறவுள்ளார்.
சென்னையில் நடைபெறவுள்ள உலக கன்டென்டர் போட்டியே அவரது கடைசி போட்டியாகும்.
1982 ஜூலை 12-இல் சென்னையில் பிறந்த சரத் கமல் இளம் வயதிலேயே டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டார். அவரது தந்தை, மாமா ஆகியோரும் சிறந்த வீரர்களே.
10 தேசிய சாம்பியன் பட்டம்
சரத் கமலின் அறிமுகம் மிகவும் கடினமாக அமைந்தது. 2003-இல் முதன்முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்றார் சரத். 10 தேசிய சாம்பியன் பட்டங்களை தன் வசம் வைத்துள்ளார். தொடர்ந்து 2004-இல் முதன்முறையாக ஏதென்ஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றார்.
சர்வதேச அரங்கில் அவரது முதல் பெரிய வெற்றி 2006-இல் மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் கிடைத்தது. 2 தங்கம் வென்றார். 2010-இல் 2 தங்கம், 2018-இல் 4 பதக்கம், 2022-இல் 2 தங்கம், வெள்ளி வெண்கலம் வென்றார்.
காமன்வெல்த் போட்டிகளில் மொத்தம் 7 தங்கம் வென்ற சரத், ஆசியப் போட்டிகளில் சீனா,கொரியா, ஜப்பான் போன்ற டேபிள் டென்னிஸ் வல்லரசுகள் இருந்த நிலையில், 2 வெண்கலம் வென்றார். எகிப்து ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
5 ஒலிம்பிக் தகுதி
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சரத் கமல் 2004 ஏதென்ஸ் முதல் 2024 பாரீஸ் வரை மொத்தம் 5 ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் மா லோங்குடன் ஆடியது சரத் கமலுக்கு பெரிய ஒலிம்பிக் அனுபவமாகும்.
2 வயதில் டேபிள் டென்னிஸ் ராக்கெட்டை கையில் பிடித்த சரத் கமல் தற்போது 42 வயது வரை மைதானத்தில் களமாடி வருவது சிறப்பானது. அவரது பயணம் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. இந்திய டேபிள் டென்னிஸின் போக்கையே மாற்றிக் காட்டினார் சரத் கமல்.
ஆசிய அளவில் சீனா, கொரியா, ஜப்பான், ஹாங்காங் போன்றவை டேபிள் டென்னிஸில் வல்லரசுகளாக திகழ்கின்றன. அந்த நாட்டின் வீரர், வீராங்கனைகளை வெல்வது மிகவும் கடினமாக கருதப்பட்டது. ஆனால் சரத் கமல் அதையெல்லாம் மாற்றினார். 2018 ஆசியப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பலம் வாய்ந்த ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்தது.
ஒலிம்பிக் அணிவகுப்புக்கு தலைமை
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்திய அணியின் கொடி அணிவகுப்புக்கு தலைமை வகித்து வந்தார் சரத் கமல். நாட்டின் உயரிய விளையாட்டு விருதான 'கேல்ரத்ன விருது' உள்ளிட்ட பல்வேறு விருதகள் சரத் கமலுக்கு வழங்கப்பட்டன.
ஐ.டி.டி.எஃப். தரவரிசையில் 30-ஆவது இடத்தை வகித்த அவர், டாப் 20 வீரர்களுக்கு கடும் நெருக்கடியாகத் திகழ்ந்தார். சுவாங் யுவான், ஜூ சே ஹயக், காதிரி அருணா, மார்கோஸ் பிரைட்டாஸ், பாட்ரிக் பிரான்ஸிஸ்கா, டார்கோ ஜார்ஜிக் உள்ளிட்ட பிரபலமான வீரர்களை வீழ்த்தியுள்ளார். சரத் கமலின் தந்தை, சகோதரர், மாமா உள்ளிட்டோர் சிறந்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக விளங்கினர்.
சரத் கமல் ஆடத் தொடங்கியபோது, சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் கிட்டவில்லை. தற்போது அவரது வழியில் ஏராளமான இளம் வீரர், வீராங்கனைகள் உருவாகி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சரத் கமல் கூறியதாவது
'சென்னை டபிள்யுடிடி கன்டென்டர் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளேன். சென்னையில் தான் எனது டேபிள் டென்னிஸ் பயணம் தொடங்கியது. தற்போது தொடங்கிய இடத்திலேயே முடிவடைகிறது. சர்வதேச டேபிள் டென்னிஸ் அதலெட்டிக் கமிஷன், இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தில் நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன்.
பயிற்சியாளராக செயல்படும் எண்ணமில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் சென்னையில் டேபிள் டென்னிஸ் பயிற்சி தரும் வகையில் உயர்தர அகாதெமி தொடங்கப்படுகிறது. வரும் ஜூன் மாதம் இதற்கான பணிகள் தொடங்க உள்ளேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.