
'தான் உண்டு தன் வேலை உண்டு' என இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மத்தியில் பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க இயலாத இளையத் தலைமுறையினர் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு அரசுப் பணிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் நூலகத்திலேயே அதற்கான ஏற்பாடுகளை விரிவாகச் செய்து கொடுத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார் நல்நூலகர் கோ.ராமசாமி.
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை நூலகத்தில் பணியாற்றும் இவர், 1990- இல் பட்டு வளர்ச்சித் துறையில் பணியில் சேர்ந்தார். நூல்கள் மீது கொண்ட ஆர்வத்தால் 2006-இல் நூலகத் துறைக்கு தன் பணியியை மாற்றி கொண்டார்.
அவரிடம் பேசியபோது:
'எனக்கு சொந்த ஊர் செங்கோட்டை. எனது பெற்றோர் கோதண்டராமன்- முத்துலட்சுமி.
செங்கோட்டை அரசு நூலகத்தில் அரசால் வழங்கப்பட்ட 34,674 நூல்களும், போட்டித் தேர்வுகளுக்காகவே நன்கொடையாளர்கள் மூலம் பெற்ற 15 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களையும் படிக்க வழங்கி வருகிறேன்.
போட்டித் தேர்வர்களுக்காக விழுதுகள் சேகர், வருவாய்த் துறையில் பணிபுரியும் முத்துக்குமார் உள்ளிட்ட நல்ல உள்ளம் கொண்ட அரசு ஊழியர்
களைக் கொண்டு வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பயிற்சி வகுப்புகளையும் நூலகத்திலேயே நடத்தி வருகிறேன். இதுதவிர, குரூப் -1 ,குரூப் -2, குரூப் -4,வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வு ,காவலர் தேர்வு என பல வகை போட்டித் தேர்வுகளுக்கும் இங்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சி வகுப்புகளில் செங்கோட்டை ,தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் ,பாவூர்சத்திரம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 மாணவர்கள் வரை கலந்து கொள்கின்றனர். வாரத்தில் மற்ற நாள்களில் 100 மாணவர்களுக்கு மேல் நூலகத்துக்கு வந்து காலை முதல் இரவு வரை தேவையான போட்டித் தேர்வு நூல்களை எடுத்து படிக்கிறார்கள். போட்டித் தேர்வு நடைபெறும் நேரங்களில் விடுமுறை நாள்களிலும் நூலகம் இயங்கும்.
தென்காசி, திருநெல்வேலி ,சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் இருந்து மாதிரி வினாத்தாள் பெறப்பட்டு மாதிரித் தேர்வும் நடத்தப்படுவதால், பலவகை வினாத்தாள்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. தேர்வு முடிவுகளும் சில நாள்களிலேயே தெரிவிக்கப்பட்டு விடுவதால், தேர்வர்கள் விடைத்தாள்களைப் பார்த்து நிறைகுறைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.
17 வருடங்களில் செங்கோட்டை அரசு நூலகத்தை நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி தேர்வுகளை எதிர்கொண்டுள்ளனர். இதில் சுமார் ஐநூறு பேர் பல அரசு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, கடந்த ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் இன்பா வெற்றி பெற்று தேர்வு பெற்றதை என்னுடைய உழைப்புக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
2024-இல் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் இந்த நூலகத்தில் பயிற்சி பெற்ற 10 பேர் அரசு பணியில் இணைந்துள்ளனர்.
நூல் வெளியீட்டுவிழா , புத்தகத் திறனாய்வு ,போட்டி தேர்வுகளுக்காக செய்து வரும் பணிகள் என எனது சேவைப் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் நல்நூலகர் விருது, சிறந்த வாசகர் வட்ட நூலக ஆர்வலர் விருது, சிறந்த நூலகருக்கான மாவட்ட ஆட்சியர் விருது, பல்வேறு சுழற் கழகங்கள், அரிமா சங்கங்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும், புளியங்குடி அப்துல் கலாம் பொதுநல சேவை அமைப்பு விருது, செங்கோட்டை நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட விருது என நூற்றுக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளேன்.
நூலகம் என்பது செய்தித்தாள்கள், பத்திரிகைளை படிக்கும் இடம் மட்டும்தான் என்பதை மாற்றி, போட்டித் தேர்விற்கு மாணவர்கள் படிக்கும் இடமாக நூலகத்தை மாற்றியுள்ளேன்' என்கிறார் ராமசாமி.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.