
மருது என்கிற டிராட்ஸ்கி மருது, மதுரை கோரிப்பாளையத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். இவரது தந்தை மருதப்பன், காந்தி ஆஸ்ரமத்தில் இருந்தவர். பின்னர், கம்யூனிஸ ஈடுபாட்டுடன், டிராட்ஸ்கியவாதியானார்.
மருது தற்போது சென்னை திரைப்படக் கல்லூரி நிறுவனத்தின் தலைவராக நியமனம் பெற்றுள்ளார். இந்தச் சமயத்தில் 'மருதோவியம்' என்ற அவரின் பன்முகம் குறித்த ஒருநாள் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. அவருடன் ஓர் சந்திப்பு:
ஓவியரானது எப்படி?
ஓவியத்தின் மீது பற்றுதல் ஏற்பட்டது தன்னிச்சையானது. சிறு வயதிலேயே தந்தையார் இதில் ஈடுபட வைத்தார். பின்னர், சிறு வயதில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட நேர்ந்தது.
1967-இல் நடைபெற்ற தேர்தலில் என் உயரத்துக்கு மேலான 20 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்ட சுவர்களில் எல்லாம் சுவரெழுத்து, சித்திரங்களை வரைந்து என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். மதுரை நகரிலும், புறநகர் பகுதியிலும் இவ்வாறு ஓவியங்களைத் தீட்டினேன்.
திமுக வெற்றி பெற்று, அண்ணா முதல்வரானார். கட்சிக்காரர்கள் என்னைப் பாராட்டினர்.
சுவரெழுத்து பிரசாரமானது பேசுபொருளாயிற்று. முதல்வராக, அண்ணா மதுரை வந்தபோது, அவரது கவனத்துக்கும் இது சென்றது. அப்போது எனக்கு 13 வயதுதான் இருக்கும்.
முழுநேர ஓவியரானது எப்படி?
பள்ளிப் படிப்பு முடிந்து சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு அமைந்த ஆசிரியர்கள் அனைவருமே மேதைகள். எனக்கு சீனியராக ஓவியர் ஆதிமூலம் அமைந்தார். அவரது வழிகாட்டுதல் கல்லூரிக்கு அப்பாலும் தொடர்ந்தது. வீவர்ஸ் சர்வீஸ் சென்டரிலும் ஓவியப்பணி.
'மனஓசை' போன்ற சிறு பத்திரிகைகளுக்கு படம் வரைந்ததோடு, 'குங்குமம்' , 'விகடன்' உள்ளிட்ட வர்த்தக ரீதியிலான வாரப்பத்திரிகைகளிலும் ஓவியம் வரைந்தேன்.
கணினி மூலம் படம் வரைவது எப்படி?
கணினி மூலம் டைப் செய்வார்கள். கணக்குப் போடுவார்கள். ஆனால், நான்தான் கணினியை படம் வரைவதற்கு முதலில் பயன்படுத்தினேன். இ.மெயிலில் பத்திரிகைகளுக்கு சித்திரங்களையும், அட்டைப் படங்களையும் அனுப்பி வைத்தவனும் நான்தான்.
சிலர், 'வேண்டாத வேலை' என்றார்கள். ஆரம்பத்தில் திரைப்படங்களில் டைட்டில், அனிமேஷன், எஃபக்ட்ஸ் போன்றவற்றை நண்பர்களுக்காகச் செய்துவந்தேன். எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் மகன் சாரங்கன் விளம்பரப் படங்களை எடுத்துகொண்டிருந்தார். எனது தாகத்தை எல்லாம் அவரது விளம்பரப் படங்களுக்கு செய்வதன் மூலம் தீர்த்துகொண்டேன்.
திரைப்படங்களில் உங்கள் பங்களிப்பு ஏற்பட்டது எப்போது?
ராமநாராயணனின் 40 படங்களுக்கு மேல் வேலை செய்தேன். முதலில் 'ப்ளூமேட்' என்ற முறையை பயன்படுத்தியதே நான்தான். எனது படங்கள் அசைய வேண்டும் என்று விரும்பினேன். ஆரம்பத்தில் 'ஹெள' என்கிற பத்திரிகையில் கணினி ஓவியங்கள் உருவாவது தொடர்பாக ஒவ்வொரு கட்டமாகப் போட்டு விளக்கியிருப்பார்கள். அதன் தாக்கம் என்னைப் பற்றிக் கொண்டது.
கணினி மூலம் வரைந்த என் படங்களை பத்திரிகைகள் வெளியிட்டபோது, 'கணினி மூலம் வரையப்பட்ட படம்' என்று குறிப்பிட்டு வெளியிட்டனர். இப்போது எல்லாமே சுலபமாகிவிட்டது. தற்போது 'ஏ.ஐ.' தொழில்நுட்பமும் வந்துவிட்டது.
'வாளோர் ஆடும் அமலை' நூல் உருவாக்கம் குறித்து?
எனக்கு ஒரு கனவு உண்டு. சங்கப் பாடல்களின் வாழ்க்கை சார்ந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது. 'தேவதை' படத்துக்கு ஏராளமான படங்களை வரைந்து, 'ஸ்டோரி போர்டு' தந்திருக்கிறேன். பிரபல படங்களில் அவர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. பிரபல படங்களில் பங்காற்ற அழைப்பு வந்தது. ஆனால், அதனை ஏற்க முடியவில்லை. காரணம் எனக்குண்டான சுதந்திரம்தான் முக்கியம். அதை இழக்க முடியாது.
பொதுவாக, சரித்திரப் படங்களில் அரங்கம், உடை, மன்னர்கள்.. இவற்றின் அமைப்பு முறை மராத்தியப் பாணியில் அமைந்திருக்கிறது. தமிழ் மன்னர்கள் அப்படி இருந்திருக்க முடியாது. இந்த யதார்த்த தன்மைக்கு அருகில் வந்த படங்கள் என்றால், 'அவ்வையார்', 'சிவகங்கை சீமை', பி.யு. சின்னப்பா நடித்த 'உத்தமப்புத்திரன்' போன்ற படங்களைச் சொல்லலாம். எனவே, மன்னர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை எனது கண்ணோட்டத்தில் வரைந்து, அதனை நானே அச்சாக்கம் செய்து அளிக்க விரும்பினேன். அதுதான் அந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.