'சில (அ)சந்தர்ப்பங்கள்'

'ஆள மாத்துன்னு எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன். நீதான் கேட்க மாட்டேங்கிறே?' என்று அலுத்துப் போய் சலித்துக் கொண்டார் கைலாசம்.
'சில (அ)சந்தர்ப்பங்கள்'
Published on
Updated on
6 min read

'ஆள மாத்துன்னு எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன். நீதான் கேட்க மாட்டேங்கிறே?' என்று அலுத்துப் போய் சலித்துக் கொண்டார் கைலாசம். ஒரு விஷயத்துக்காக, எத்தனை முறைதான் ஒருவரை உயிர்ப்பிப்பது?

'இப்பப் பாரு.. குடிக்கவே தண்ணி இல்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடிலர்ந்தே சொல்லிட்டிருக்கேன். சொல்றேன்.. சொல்றேன்னு சொல்றியே தவிர, சொன்னபாட்டக் காணோம்...'

'நா என்ன பண்றது? ஃபோன் பண்ணினா அவன் எடுத்தால்தானே? ரிங் போயிட்டே இருக்கு. இல்லன்னா கட் பண்றான். என்ன அவசரமோ, டென்ஷனோ?'

'ஆமா.. வேன்ல அங்கங்க பறந்திட்டிருப்பான். அவன்தான் டிரைவர், அவன்தான் லோடு மேன். ஏத்துறது, இறக்குறது எல்லாமும் ஒருத்தனேன்னா அவனுக்கும் அலுத்து சலிச்சு வருமால்லியா? வண்டில போயிட்டிருக்கும்போது ஃபோன் வந்தா எவன்தான் எடுப்பான்? எடுத்துப் பேசிட்டு, எங்கயாவது மோதிட்டு நிக்கிறதுக்கா?'

'பஸ் ஓட்டும்போது எந்த டிரைவரும் ஃபோன் பேசக் கூடாதுன்னு கவர்ன்மென்ட் சொல்லியிருக்கு தெரியுமா? கண்டுபிடிச்சா அபராதம் இல்லன்னா சஸ்பென்டாக்கும். மக்கள் உயிர பணயம் வைக்க முடியுமா இவங்க அலட்சியத்தால? அது போலதான் இவனும்.. அவனுக்கு நிறைய ஆஃபர் இருக்கு. கேட்குற எடத்துக்கு தண்ணி கேன் கொடுத்து மாளல. நீ மூணு, அஞ்சுன்னு கேட்குற ஆளு.. அவன் அம்பது போடுற எடத்தைக் கவனிப்பானா இல்ல நம்ப வீட்டுக்கு அக்கறையா டெலிவரி பண்ணுவானா?'

'நீங்களே வேண்டாம்னு சொல்லிடுவீங்க போலிருக்கே? எதையாவது அவன்ட்டப் பேசி, இப்பப் போட்டுட்டிருக்கிறதையும் கெடுத்திடாதீங்க!' என்று நளினி பயந்ததுபோல் சொன்னாள்.

'நான் ஏன் அவன்ட்டப் பேசறேன்.. தண்ணி.. தண்ணின்னு அல்லாடுறியேன்னு சொல்ல வந்தேன். இதோ நாலு வீடு தள்ளி நாயுடு பையன் போடுறான்னு சொன்னேன். அவன்ட்ட வேண்டாம்னுட்டே. மாடிலர்ந்து ஒரு சத்தம் கொடுத்தாப் போதும்.. அடுத்த கணம் கொண்டாந்து இறக்கிடுவான். அது வேண்டாம்ங்கிறே!'

'உங்களுக்குத் தெரியாது அந்த ரகசியம். அவன் வீட்டுப் பக்கத்துல இருக்கிற தொட்டிக் குழாய்ல கேன்ல பிடிச்சுப் பிடிச்சு அடுக்கிறான். அதைச் சுத்தப்படுத்தறானோ இல்லையோ? சந்தேகமாயிருக்கு. பக்குவப்படுத்தித்தானே சீல் பண்ணனும். அவன் வண்டில பறக்குற வேகத்தப் பார்த்தாலே தெரியும். அது நல்ல தண்ணி இல்லன்னு.! அவன் கொடுக்கிறது மினரல் வாட்டர்னு நினைச்சு எல்லாரும் வாங்கிட்டிருக்காங்க...ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

எனக்குள் சிரிப்பே வந்தது. 'எந்தத் தண்ணியைத் தான் நம்புவது? இவள் சந்தேகப்பட்டு வேண்டாம்' என்று ஒதுக்கும் நபருக்கும், நம்பி வாங்கும் நபருக்கும் அப்படியென்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? அவனும் என்ன செய்கிறான் என்பது யாருக்கும் தெரியாதே? இவளென்ன பார்த்தாளா? அவனை மட்டும் எப்படி நம்புகிறாள்? கார்ப்பரேஷன் லாரியிலேயே ஒரு பொட்டணம் க்ளோரினைத் தூக்கி வீசுகிறார்கள். லாரியின் ஓட்டத்தில், வண்டி குலுங்கலில் அது கரைந்து கொள்ளுமாம். அது சுத்தப்படுத்திய தண்ணியாம்! என்ன கதை பாருங்கள்? அந்த லாரி டாங்கை கழுவி மாமாங்கமிருக்கும்! யார் கண்டது?

வீடு வீடாக வந்து நோட்டீஸ் கொடுத்து விட்டுப் போனான். நம்பிக்கையோடு ஃபோன் செய்து தண்ணீர் கேன் கொண்டு வரச் சொன்னபோது சொன்னா சொன்னபடி கரெக்டான நேரத்துக்குக் கொண்டு வந்து கேன்களை அடுக்கினான். 'தன் வார்த்தைகளுக்கு இத்தனை மதிப்பா?' என்று நளினி பூரித்துப் போனாள். ஆனாலும் ரொம்ப சின்சியர் அவன் என்றாள். கதவைத் திறந்தால் காத்துக் கிடக்கிறது பத்து கேன்.

'ராத்திரி லேட் அவர்ஸ்ல வந்திருப்பான் போலிருக்கு. ஏன்னா கடைசியா பத்து மணிக்கு ஒரு ஃபோன் போட்டேன். இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணுறமேன்னுதான் இருந்தது. இருந்தாலும்பொழுது விடிஞ்சா தண்ணி வேணுமேங்கிற ஆத்திரத்துல எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு ஃபோன் அடிச்சேன்.

எடுக்கலை? ஆனா பாருங்கோ? வாசல்ல கொண்டு வந்து வச்சிட்டுப் போயிருக்கான். அஞ்சு கேன்தான் கேட்டேன். பத்து வச்சிருக்கான் பாருங்கோ! அந்த நேரத்துல தூங்கிண்டிருக்கிற நம்மள எழுப்பக் கூடாதுங்கிற இங்கிதம் இருந்திருக்கு பாருங்க அவனுக்கு! பத்து என்னத்துக்கு? தினசரி ஒண்ணுன்னாலும்கூட பத்து நாளைக்கு வருமே. நாள் கழியக் கழிய தண்ணி பழசாத்தானே போகும்? அது நமக்குக் கெடுதல்தானே? கேன்ல இருந்து பழசானாப் பரவால்லியா? அஞ்சே ஜாஸ்தி. வேறே வழியில்லே. அடிக்கடி அவன்ட்டச் சொல்லிட்டிருக்க முடியாது. தொலையுதுன்னு விட்டா? ஒரேயடியா பத்தைக் கொண்டு வந்து இறக்கினா?'

'நீங்க பேசாம இருங்க...போன் பண்ணிப் பண்ணி நானில்ல அவன்ட்ட ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு.. நீங்களா செய்றீங்க? இருந்திட்டுப் போகட்டும்!' என்று ஒரே போடாய்ப் போட்டாள். என் வாய் அடைத்துப் போனது.

'சரி.. இப்ப என்ன செய்றது.. அதச் சொல்லு.. நடப்பப் பார்ப்போம். பழசப் பேசி என்ன பண்ண?'

'என்னத்த செய்றது.அடுத்த தெருவுல போய், கார்ப்பரேஷன் தொட்டில பிடிச்சிட்டு வாங்க...அதான் அவசரத்துக்கு வழி?'

'என்னை என்ன சின்னப் பிள்ளைன்னு நினைச்சியா? கேனை உடனே தூக்கிட்டு ஓடுறதுக்கு? இருபத்தஞ்சு லிட்டர் கேன் அது. தூக்கிட்டு வர்றது எவ்வளவு சிரமம் தெரியுமா? கை மாத்தி கை மாத்தி நான் கொண்டு வர்றதுக்குள்ள தடுமாறுது எனக்கு கால் பிறழுது... ஒரு நாளைக்கு ரெண்டு கேன் தண்ணியாவது அதுல வேணும்.. ரெண்டு நடை போகணும் சாதாரணமாச் சொல்லிப்புட்டே?'

அங்கு குடி வந்த புதிதில் இதைத்தான் செய்து கொண்டிருந்தேன். இப்பொழுதோ பத்து வருஷம் கடந்து போனது. இந்தக் கிழ வயசிலும் தண்ணியத் தூக்கிட்டு வா? என்றால்? முதுகுப் பிடிப்பு, வாயுத் தொந்தரவு, கழுத்துச் சுளுக்கு' என்று சொல்லவொண்ணா சங்கடங்கள் உடம்பில் பரவிக் கிடந்தன. கால்களுக்கு பலமில்லை. எந்த நோவையும் வாய்விட்டு யாரிடமும் நான் சொல்லிக் கொள்வதில்லை. அநுதாபம் தேடுவதில்லை. அமைதியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். யாருக்குத் தெரிஞ்சு என்னவாகப் போகிறது?

இப்ப அவசரத்துக்கு ஒரு நடை மட்டும் கொண்டு வந்திடுங்க? சாயங்காலம் ஒரு நடை போங்க? உடனே வேண்டாம். ஏன்னா அதுக்குள்ளயும் அவன் வந்துட்டான்னா? நிச்சயம் அவன் கொண்டு வந்திடுவான். இதுவரை இப்படி லேட் ஆனதில்லே. என்ன கஷ்டமோ அவனுக்கு?' அவனிடம் இருக்கும் இரக்கம் கூட என் மேல் இல்லையோ? இப்படித்தான் தோன்றியது எனக்கு. கட் அன்ட் ரைட்டா எங்கிட்டதான் பேசுவே!

'தண்ணீர் இல்லையென்றால் அவளும்தான் என்ன பண்ணுவாள்? சமைக்கல இன்னிக்கு' என்று உட்கார்ந்தால் கதை என்னாவது? வீடே உட்கார்ந்து போகுமே? 'சரி.. இன்னிக்கு அடுப்படிக்கு லீவு. வா..வெளில போவோம். கோயிலுக்குப் போயிட்டு அப்டியே வெளிலயே கொட்டிண்டு வீடு வந்து சேருவோம்' என்று சொல்ல மனசு வருகிறதா? என் வருமானமும் அந்த அளவில்தானே இருக்கிறது. எப்படி வாய் வரும் எனக்கு? நானே சொன்னாலும் அவள் சம்மதிக்க வேண்டுமே?

'தண்டமா? ஓட்டல்ல போய் தின்னுண்டு. உடம்பக் கெடுத்துண்டு. அந்தக் காசு இருந்தா பத்துக் கிலோ அரிசி வாங்கலாம். காசென்ன அம்புட்டு வள்ளிசாப் போச்சா?' என்பாள்.

'பாவம். அதிகபட்சம் அவள் என்னிடம் கேட்பது. கோயிலுக்குக் கூட்டிப் போங்க' என்பதுதான். ஒரு நாள் கூட சினிமா போவோம் என்று சொன்னதில்லை. அந்தப் பைத்தியம் எனக்கு மட்டும்தான்.

'ஏன் இன்னிக்கு லேட்டு?' என்று அவள் கேட்டு நான் பொய் சொன்ன நாள்கள் அநேகம். ஆபீஸ் ஆடிட், இன்ஸ்பெக்ஷன், ஆண்டு முடிவு..'என்று விதம்விதமாய்ச் சொல்லியிருக்கிறேன். எல்லாம் பாழாய்ப் போன இந்தச் சினிமா ஆசைதான். புரியுமோ, புரியாதோ? நம்பியிருக்கிறாள்.

தண்ணீர் கேனை எடுத்துகொண்டு கிளம்பினேன். மதுரையில் இருக்கும்போது இந்தக் கேனை டூ வீலரில் மாட்டிக் கொண்டு பாய்ந்து பாய்ந்து போய்த் தண்ணீர் கொண்டு வருவேன். அது சின்ன வயசு. தெருக் குழாய்கள் இல்லாமல் போனதும், தண்ணீர் பஞ்சமென்பதும் எப்போதோ வந்து விட்ட ஒன்று. வீட்டுக்கு வீடு குழாய்கள் போட்டு தண்ணீர் வரி கட்டியதுதான் மிச்சம்..

நிறையச் செலவழித்து தண்ணீர் தொட்டி கட்டி அந்தப் பள்ளத்துக்குள் ரெண்டு படி இறங்கி, வாகாய்ப் பிடிப்பதுபோல் எல்லாம் பாந்தமாய்த்தான் செய்து வைத்தது. யார் செய்த புண்ணியமோ? ஆரம்பத்தில் சில நாட்கள். ம்கூம்.. சில மாதங்கள் என்றே சொல்லுவோம். கொஞ்சம் தாராளமாய்த்தான் இருக்கட்டுமே. தண்ணீரும் வரத்தான் செய்தது.

'பிறகோ எங்க வீட்ல வரல, உங்க வீட்ல வரல' என்று பிராது கிளம்பி எல்லா வீட்லயும் வரலை என்றே ஆகிப் போனது. எல்லார் வீட்லயும் வராததனால் மனமும் சமாதானமாகிப் போனது. ஆனால் ஒன்று. தண்ணீர் காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தது இந்தச் சென்னைக்கு வந்த பின்னால்தான். கார்ப்பரேஷன் தண்ணீர்த் தொட்டிகள் அங்கங்கே வீதிக்கு ரெண்டு என்று இருக்கத்தான் செய்தன. அதில் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினால்தானே? திங்கள், வியாழன் என்பார்கள். கிழமைதான் வந்து போகும். அதையும் கழுவிச் சுத்தம் செய்து வெயிலில் காய விட்டுக் கண்ணால் கண்டதில்லை.

அப்படியே கொட்டினாலும் எங்கள் தெரு தொட்டியில் அன்றே, அன்றே அல்ல. ஓரிரு மணி நேரத்தில் பிடித்து விட வேண்டும். இல்லையென்றால் அதன் அருகேயுள்ள வீட்டுக்காரர் டியூப் போட்டு இழுத்து விடுகிறார். அதெப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான். அந்தத் தெருவிலேயே தண்ணீர்ப் பஞ்சம் என்பது அவருக்கு மட்டும் கிடையவே கிடையாது.

அப்பப்போ ஒரு குடம், ரெண்டு குடம் என்று பிடிக்கச் செல்பவர்கள் தண்ணீர் திருடப்படுவதைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இதென்னங்க அநியாயமாயிருக்கு? என்று அவரவர் மனசுக்குள் சொல்லிக் கொண்டதோடு சரியாரும் எதிர்த்துக் கேட்டதில்லை. ஆனாலும் எளிய மக்களின் சகிப்புத்தன்மையே அலாதி. இல்லையென்றால் இங்குள்ள அரசியல்வாதிகள் வண்டியோட்ட முடியுமா?

'நானும் பிடிக்கப் போயிருக்கிறேன்தான். சார்.. வாங்க.. இப்டி வந்திருங்க?' என்று டியூப்பை எடுத்து என் கேனுக்குள் விட்டு விடுவார். 'ஊரு மதுரையா?' என்று சிநேகிதமானார். நம்ம ஊரு விருதுபட்டி என்று சொல்லிக் கொண்டார். புரிந்தது.

'இன்னும் ஒரு நடை வருவீங்களா?' என்றும் கேட்டுக் கொள்வார். அதாவது, 'அதுக்கு மேலே வந்திராதீங்க?' என்று அர்த்தம்.

'இந்தச் சென்னைக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு. இந்தப் பக்கமெல்லாம் காடாக் கிடந்தபோது, வாங்கிப் போட்ட எடம் இது. வந்த புதுசுலல்லாம் கொல பயம். பாம்பும் தேளும் நட்டுவாக்காலியும் அப்படி ஓடும். வீடுகள் வரவர ஒண்ணொண்ணாக் காணாமப் போயிடுச்சி. சின்னதா ஒரு வீடு கட்டிக் குடி வந்தாச்சு..' என்றார்.

உள்ளே தலைநீட்டிப் பார்வையைச் செலுத்தினேன். பத்துக்குப் பத்து அறையாய் நீளக்க கோமணத்துணி போலிருந்தது வீடு. கொல்லைப்புறம் வாட்டர் கேன்களாக அடுக்கப்பட்டிருந்தது இங்கிருந்து தெரிந்தது. சரசரவென்று மொபெட்டில் பறக்கிறாரே? அந்நியன்.. இவர் பையன்தானோ? நினைத்துக் கொண்டேன்.

கேட்கவில்லை. அதே நீளத்துக்கு மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்டு மாடியாக்கியிருந்தார். நிறையப் பேர் இருந்தார்கள் அவர் வீட்டில். நாலஞ்சு பெண்கள் தென்பட்டார்கள். மகள்களும், மருமகள்களுமாய் இருக்கலாம் என்று எண்ணினேன். வீடே சளசளவென்றிருந்தது. பெரிய குடும்பி!'

'அவருக்காவது எனக்குத் தண்ணீர் கொடுக்க மனமிருந்தது. அவர் சம்சாரத்துக்கோ துளியும் மனசாகாது. இப்டி ஆளாளுக்கு நாலஞ்சு நடை எடுத்தீங்கன்னா அப்புறம் நாங்க என்ன பண்றதாம்?' என்று சலித்துக் கொண்டது அந்தம்மாள். பொதுத் தொட்டிதானே அது. எப்படிச் சொந்தம் கொண்டாடுகிறார்கள் பாருங்கள். ரெண்டு நடைக்கு மேல் எவரும் போனதில்லைதான் நாலஞ்சு நடையாம். எல்லாம் காலக்கிரகம்.

'எத்தன வாட்டிதான் இதுக்குக் குழாய் மாத்துறது? சரியா மூடாம அவுக பாட்டுக்குத் தெறந்து போட்டுட்டுப் போயிடுறாக? ஒவ்வொருதடவையும் நாந்தான் ஓடி ஓடி வந்து அடைக்கிறேன். திருகித் திருகி... அந்த பிளாஸ்டிக் குழாய் எவ்வளவுதான் தாங்கும்.. யாருக்காச்சும் தெரியுதா? தண்ணி பிடிக்க மட்டும் ஓடி ஓடி வந்திடுறாக? அப்பப்ப யாராச்சும் குழாய் வாங்கி மாட்டுங்க?'

'மற்றவர்கள் தண்ணீர் பிடிப்பதை எப்படியாவது குறைக்க வேண்டும் அல்லது படிப்படியாக நிறுத்த வேண்டும்' என்கிற யுக்தி இந்த வழி பிரதாபப்பட்டது. அதிகம் பயனடைபவர்கள் அவர்கள்தான். அதுக்கு அந்தாள் துணை. அதாவது அங்கு அடிக்கடி தென்படும், வந்து உட்கார்ந்து டீ குடிக்கும் ஒருவன். மனிதர்களே சுய நலமிக்கவர்கள்தான். அவனவன் வசதி. அவனவனுக்கு!

'நீங்க ஒரு அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்க? இந்தத் தெரு முக்குல ஒரு தொட்டி வச்சிடுறோம். எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கிக் கொடுக்கணும். அப்பத்தான் பரிசீலிப்பாங்க?' என்றார் கார்ப்பரேஷன் ஆள். அவ்வப்போது அவர் தலை தெரியும் அந்த வீட்டில். பிறகு செல்வாக்குக்குக் கேட்கணுமா? ஏதோ நாங்களா இருக்கக்கண்டு ஆளுக்கு ரெண்டு கொடம் விடுறோம். பார்த்துக்குங்க!!

தண்ணீர் கேனை எடுத்துகொண்டு கிளம்பினேன். இருபத்தஞ்சு லிட்டர் கேன்.இருநூற்றம்பது ரூபாய். இதோடு நாலஞ்சு மாற்றியாயிற்று. எப்படித்தான் அதில் ஓட்டை விழுமோ? தண்ணீரோடு கொஞ்சம் அழுத்தித் தரையில் வைத்தால் எங்காவது ஒரு ஓரத்தில் பிடுங்கிக்கொண்டு விடும். தண்ணீருக்கான செலவுகள் விதம் விதமாய் முளைத்தன.

'அந்த நாயுடு வீட்டுத் தொட்டியில் இந்த நேரம் தண்ணீர் இருக்காது' என்று தோன்றவே, 'பக்கத்து லிங்க் ரோடிக்குச் செல்வோம்' என்று கிளம்பினேன். டூ வீலரை எடுத்து சைடு கொக்கியில் மாட்டிக் கொண்டு புறப்பட்டேன். வரும்போது தண்ணீர் வெயிட்டோடு ஓட்ட முடியாது. ஒரு பக்கம் தள்ளும். விழுந்து வைத்தால்? தள்ளிக்கொண்டாவது வருவோம். தூக்குச் சுமை குறையுமே?

லிங்க் ரோட்டில் உள்ள தொட்டியில் தண்ணீர் தீர்ந்திருந்தது. பொடியாக நூல் இழுத்தது போல் விழுந்தது. அதில் வைத்து என்று நிறைந்து எப்பொழுது நான் வீடு திரும்புவது? எவ்வளவு நேரம் நிற்பது?

அடுத்த தெருவுக்குப் புறப்பட்டேன். அங்கும் ஒரு தொட்டி உள்ளதுதான். ஆனால் பக்கத்து அபார்ட்மென்ட் லேடி ஒருவர் கேள்வி கேட்பார்.

'உங்க தெருவுல தொட்டி இருக்கும்ல.. என்ன வாடிக்கையா இங்க பிடிக்க வர்றீக?'

'இன்னிக்குத்தாங்க வர்றேன்.நான் ரெகுலரா வர்ற ஆளில்ல..'

'இல்லயே, உங்கள அடிக்கடி பார்த்திருக்கனே.! இன்னிக்குப் பிடிச்சிக்குங்க... சும்மாச் சும்மா வராதீங்க? எங்க ஆட்களுக்கு வேணாமா?'

'úஸால் ப்ரொப்பரைட்டர் போலிருக்கு' என்று என்ன அதிகாரமான பேச்சு?

அந்தத் தெருவிலும் தொட்டி காலி. என்ன செய்யலாம்? வண்டியைக் கிளப்பினேன். 'கொக்கியில் கேன் நன்றாய் மாட்டியிருக்கிறதா?' என்று பார்த்துகொண்டேன்.

சில சமயம் ஜம்ப் ஆகி கீழே விழுந்து விடும். அது தெரியாமல் நாம்பாட்டுக்குப் போய்க் கொண்டிருப்போம். ஊரில் இப்படி ஆகியிருக்கிறது. எடுத்துக் கொடுக்கவா காத்துக் கொண்டிருப்பார்கள்? தண்ணி பிடிக்க ஆச்சு.. என்று கிளம்பி விடும் அன்பர்கள்தான்! மனிதனுக்கு எளிதாய்க் கிடைக்கும் லாபங்களில் எப்போதுமே ப்ரீதி அதிகம்! விலையில்லாப் பொருட்கள் போல!

'மெயின் ரோட்டுக்கு சற்று முன்பாக ஒரு தொட்டி இருக்கும். கொஞ்ச நாள் முன்பாகத்தான் வைத்திருந்தார்கள். அங்கு செலவு அதிகமில்லை' என்று தோன்றியது. போகிற வருகிற ஆட்கள் கால், கை கழுவுவதைப் பார்த்திருக்கிறேன். அதற்கா அந்தத் தண்ணீர். அது நல்ல தண்ணியாச்சே! சுட வச்சுக் குடிச்சா பஞ்சமில்லையே! அதைப்போய்.. அங்கு நோக்கி வண்டியை விட்டேன். ஆளைக் காணலியே என்று நளினி காத்துக் கொண்டிருப்பாள். இன்னிக்கு சமையல் லேட்டுதான்.

சற்று தூரத்தில் ஒரு சிறு கூட்டம். 'என்னாச்சு.. அதுவும் அந்தத் தொட்டி பக்கத்துல? இருந்திருந்தும் நாம அபூர்வமாகப் பிடிக்கப் போற நேரத்துலயா இந்த இடைஞ்சல்? என்னடா இது தொந்தரவு?' என்று சலித்துக் கொண்டே நெருங்கினேன்.

'என்னங்க இது.. என்னாச்சு?' என்று வழக்கமாகத் தண்ணீர் கேன் கொண்டு வரும் அந்த ஆள், வேன் முன்னே நின்றிருந்தான். இடது பக்க டயர் நசுங்கிப் பள்ளத்தில் இறங்கியிருந்தது. ஆட்கள் பின்னாலிருந்து தள்ளித் தள்ளி ஓய்ந்து கிடந்தார்கள். சதும்பப் பதிந்திருந்தது சகதியில்.

'என்னாச்சு? பஞ்சராயிடுச்சா? இப்படி எறங்கிக் கெடக்கு?'

என் பேச்சைக் காதில் வாங்காமல் யாருக்கோ ஃபோன் பண்ணுவதில் லயித்திருந்தான். அவன் பரபரப்பு எனக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியது.

'என்னங்க? ஏதாச்சும் உதவி வேணுமா? சொல்லுங்க? ரோட்டோரமாக கூடக் கொண்டு ஒதுக்க முடியாது போல்ருக்கு?'

சற்றுத் தள்ளி அந்த வழி வரும் வாகனங்களைத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தான் ஒரு ஆள். கிளீனரோ? துணையாளோ?

'சார்.. கொஞ்சம் வண்டி தர முடியுமா? ஒர்க்ஷாப் வரைக்கும் போயி ஒரு டோ-டிரக்கைத் தள்ளிட்டு வந்திடுறேன். ஃபோன் போக மாட்டேங்குது. சடனா வண்டியை ஒதுக்கியாகணும். முக்கியமான ரூட்டு இது' என்று சொல்லிக் கொண்டே என் வண்டியிலிருந்த கேனை எடுத்து என்னிடம் நீட்டினான் அவன். டூ வீலரை ஸ்டான்ட் எடுத்து எதிர்த் திசையில் திருப்பினான். கொஞ்ச நேரம் பார்த்துக்குங்க சார்'என்றவாறே வண்டியில் ஏறிப் பறந்தான்.

நான் செய்வதறியாது நின்றேன். வீதியின் முனையில் ஒரு டிராஃபிக் போலீஸ் இந்த இடத்தை நோக்கி வருவது தெரிந்தது.

வேனுக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட தண்ணீர் நிரப்பிய கேன்கள் பாரமாய் வண்டியை அழுத்தி துளி அசைத்தாலும் சாய்ந்து விடுமோ? என்கிற அபாய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com