கண்டது
(நீடாமங்கலத்தில் ஓடும் வேன் ஒன்றில் எழுதியிருந்தது)
'சிற்பமாகும் நீ உளிக்கு அற்பத்தனமாய் கலங்காதே!''
-சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
(அணைக்கரை அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'கோடாலி''
(திருஉத்திரகோசமங்கை அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'கவிதை தோப்பு''
-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
(தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'வாவா நகரம்''
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
கேட்டது
(திருச்சி காய்கறி சந்தை ஒன்றில் இருவர்...)
'உங்க வீட்டில் மரம், செடி நட்டு இருக்கீங்களா?''
'எதுக்கு கேக்கறீங்க?''
'காய்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு கேக்கறீங்களே? பைசா செலவில்லாமல் அறுவடை செஞ்சுக்கலாமே... அதுக்குதான்..''
-அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.
(திண்டுக்கல் குயின் பூங்காவில் காதல் ஜோடி பேசியது)
'என்னங்க.. நான் உங்களை நம்பிதான் கட்டின புடவையோட வந்துட்டேன்...? என்னைக் கைவிட மாட்டீங்களே..?''
'உன்னோட 20 பவுன் நகையை நம்பித்தான் நான் வந்திருக்கேன்.. என்னை நீ கைவிட்டுறாதே.?''
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
(திருச்சி ரயில் நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)
'லூசாடா நீ...?''
'எந்த லூசும் தன்னை லூசுன்னு ஒத்துக்கிடாதுன்னு தெரியாம கேக்கறீயே.. நீதான்டா லூசு...''
-பி.கனகராஜ், மதுரை-16.
யோசிக்கிறாங்கப்பா!
அன்பைவிட அழகு ஆபத்தானது. அழகைவிட ஆசை ஆபத்தானது.
-தா.முருகேசன், திருத்துறைப்பூண்டி.
மைக்ரோ கதை
பேராசிரியர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும்போது, ஒரு விவசாயி தன் அருகில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். விவசாயியிடம் விளையாட்டா விளையாட பேராசிரியர் முடிவு செய்து, 'நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். உங்களால் பதில் சொல்லமுடியாவிட்டால், நீங்க எனக்கு நூறு ரூபாய் தாங்க?
நீங்கள் கேள்வி கேட்டு என்னால் பதில் சொல்ல முடியாவிட்டால், நான் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன்'' என்றார். பேராசிரியரும் பல கேள்விகளைக் கேட்க, பதில் தெரியாமல் விழித்த விவசாயி மூன்று நூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டார்.
பின்னர் பேராசிரியரோ விவசாயியிடம், 'இப்போ நீங்கள் கேள்வி கேளுங்க?'' என்றார். உடனே விவசாயி, 'மலை ஏறும்போது மூன்று கால்களும், இறங்கும்போது நான்கு கால்களும் உள்ள விலங்கு எது'' என்றார். பின்னர், பேராசிரியர் மூளையைப் போட்டு கசக்கினார். செல்போனை நோண்டி இணையத்தில் தேடினார்.
பதில் கிடைக்கவில்லை. பின்னர் அவர் விரக்தி அடைந்து, பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார். விவசாயி பணத்தைப் பெற்றுவிட்டு, சந்தோஷத்துடன் தூங்கச் சென்றார். இதைக் கண்ட பேராசிரியர், 'அந்த விலங்கு என்ன?'' என்று கேட்கிறார். அதற்கு விவசாயி தனது பாக்கெட்டில் இருந்து, நூறு ரூபாயை கொடுத்தார். "உருவத்தைப் பார்த்து யாரையும் எடை போடக் கூடாது' என பேராசிரியர் நினைக்கத் தொடங்கிவிட்டார்.
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
எஸ்எம்எஸ்
நம்பிக்கைதான் வெற்றிக்கான முதல்படி.
-முனைவர் ச.உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
அப்படீங்களா!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "நாஸா' தனது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக "வைரங்கள்' நிறைந்த புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது.
புவியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் அந்தக் கிரகத்துக்கு "55 கேன்க்ரி இ' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. .
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகமானது புவியைவிட ஐந்து மடங்கு பெரியது. எடையில் புவியின் எடையைவிட 9 மடங்கு பெரியது. புதிய கிரகத்தின் மேல் பரப்பு வெப்பநிலை 2,400 டிகிரி செல்சியஸ்.
இந்தப் புதிய கிரகத்தில் புவியில் இருப்பது போன்று தண்ணீர், பாறைகள் கிடையாது. ஆனால் கிரகத்தின் எடையில் மூன்றில் ஒரு பங்கு வைரங்கள் என்கின்றனர்.
கிரகத்தில் வெப்பநிலை அதிகம் என்பதால் மனிதன் கிரகத்தில் இறங்குவது இயலாதது. விசேஷ ரக ரோபோகளை அனுப்பி வைரங்களைப் புவிக்கு கொண்டுவரலாம்.
-சுதந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.