நூறாண்டு வாழ்ந்தாலும்..!

'பெரியவரே.. எத்தனை மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருக்கீங்க.. வீட்டை விட்டு வெளியேறுங்க?''
நூறாண்டு வாழ்ந்தாலும்..!
Published on
Updated on
1 min read

'பெரியவரே.. எத்தனை மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருக்கீங்க.. வீட்டை விட்டு வெளியேறுங்க?'' என்று கூறிக்கொண்டே வீட்டின் உரிமையாளர், முதியவர் பயன்படுத்திய நார்க் கட்டில், ஒரு சில அலுமினியத் தட்டுகள், குவளைகள், பாத்திரங்களை வீட்டுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.

அதற்கு முதியவர், 'இன்னும் கொஞ்சம் காலம் மட்டும் அவகாசம் கொடுங்கள் ஐயா.., எப்படியாவது வீட்டு வாடகையை கொடுத்து விடுகிறேன்'' என்று கெஞ்சினார். ஆனால் வீட்டின் உரிமையாளரோ, பொருள்களை ஒவ்வொன்றாய் வெளியில் தூக்கி எறிந்து கொண்டே இருந்தார்.

இதை அந்த வழியாகச் சென்ற செய்தியாளர் ஒருவர் பார்த்து வெளியில் கிடந்த பாத்திரங்களையும், சோகத்திலிருந்த இருந்த முதியவரையும் புகைப்படமாக எடுத்தார்.

'முதியவரின் பரிதாப நிலை' என்று செய்தியாக எழுதிய நிருபர், அதை தனது ஆசிரியரிடம் காண்பித்து, நடந்ததையும் விளக்கமாகக் கூறினார். அந்தச் செய்தியாளர் காட்டிய படங்களை பார்த்த ஆசிரியரோ அதிர்ந்தார். 'இவர் யாரென்று தெரியுமா?'' என ஆசிரியர் அந்த செய்தியாளரை பார்த்து கேட்டார். அவரோ, ' தெரியாது'' என்றார்.

'இவர்தான் குல்சாரிலால் நந்தா. ஜவஹர்லால் நேரு 1964 -இல் இறந்தபோதும், லால்பகதூர் சாஸ்திரி 1966-இல் இறந்தபோதும் இரு முறை தலா 13 நாள்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தவர். பொருளாதாரம் படித்த இவர், மத்திய அமைச்சராகப் பல ஆண்டுகள் இருந்தவர். 1948-இல் இவரது தலைமையில்தான் கொல்கத்தாவில் ஐஎன்டியூசி தொடங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட தியாகியான இவருக்கு அரசு ஓய்வூதியமாக அனுப்பிய ஐநூறு ரூபாயையும் வாங்க மறுத்தவர்'' என்று ஆசிரியர் கூறினார்.

இந்தச் செய்தி நாளிதழில் வெளியானவுடன் அந்த வீட்டின் முன்அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. இதைப் பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்ததோடு, தனது வீட்டில் குடியிருந்தவர் குல்சாரிலால் நந்தா என்று தெரிய வந்தது.

பலரும், 'வசதியான வீடு தருகிறோம் வாருங்கள்'' என்று கெஞ்சினர்.

'எனக்கு இப்போது 94 வயதாகிறது. எனக்கு எதற்கு வசதியான வீடு?'' என்று கூறி விட்டார் நந்தா. இதையெல்லாம் பார்த்த வீட்டின் உரிமையாளர் முதியவர் நந்தாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபோது, 'வாடகை நிலுவைத் தொகையை சீக்கீரம் தந்து விடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்'' என்றார் நந்தா.

1898 ஆகஸ்ட் 4 முதல் 1998 ஆகஸ்ட் 15 வரை நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் தன் வாழ்நாள் முழுவதும் சாதாரண குடிமகனாகவே வாழ்ந்து மறைந்தவர். இவருக்கு 1997-இல் 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு வழங்கி, கௌரவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com