பேச்சுத் துணை

இந்தக் காலத்தில் பூங்கா என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்று நகரங்களில் தேடி பார்க்க வேண்டி இருக்கிறது.
பேச்சுத் துணை
Published on
Updated on
4 min read

தேவவிரதன்

இந்தக் காலத்தில் பூங்கா என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்று நகரங்களில் தேடி பார்க்க வேண்டி இருக்கிறது. நான் மாணவனாக இருந்தபோது, தியாகராய நகரில் இரண்டு பூங்காக்கள் பிரபலமானவை; ஒன்று பனகல் பார்க். மற்றொன்று சோமசுந்தரம் பார்க் தியாகராய நகர் உஸ்மான் ரோடு இறுதியில். பனகல் பார்க் இந்த 'மெட்ரோ' கலவரத்தில் அடிபட்டுவிட்டது. சோமசுந்தரம் பார்க் பற்றி எனக்கு தெரியவில்லை. ஏனெனில், சமீப காலங்களில் நான் பெரும்பாலும் தி. நகர் என்ற சென்னையின் மகா நகரத்துக்குச் செல்லவே இல்லை. அந்தப் பகுதியில் எல்லா நாள்களும் திருநாளே; திருவிழாவே. அலைமோதும் கூட்டத்தையும், வாகனங்களின் நெருங்கிய அணிவகுப்பையும் பார்த்தாலே பரவசமாவதில்லை. பயம் உருவாகிறது.

சமீபத்தில் கூட ஒரு நிகழ்வு நடைபெற்றது. நான் ஒரு கச்சேரிக்காக வாணி மஹால் செல்ல வேண்டியிருந்தது. ஆட்டோக்காரர் கேட்ட தொகை அதிகமாகத் தோன்றியபோதிலும் 'சரி போனால் போகட்டும்' என்று ஏறி சென்றேன். ஆட்டோக்காரக்கு ஆனால், அங்கிருந்த வாகன நெரிசல், கூட்டக் கலவரத்தைப் பார்த்தவுடன் கேட்டது நியாயம் என்றே எனக்கு தோன்றியது. வாணி மஹாலுக்கு அருகே இருந்த ஓர் அசாத்தியமான துணி , 'ரெடிமேட்' கடையின் ஆடம்பரமான கட்டடத்தையும் விளக்குகளையும் பார்த்தபடி அவன் என்னைக் கேட்டான். 'நம்ம ஊர்லே இத்தனை ட்ரெஸ்ஸா வாங்கி அணியராங்க?'' என்றான் ஆச்சரியத்துடன். நான் பதில் சொல்லவில்லை. புன்னகைத்தேன்.

நான் அறிந்த இரண்டு குடும்பங்களிலேயே கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காகவே மாப்பிள்ளை வடநாட்டு 'ஷெர்வானி' , 'தலைப்பாகை' உடையையும், மணப்பெண், 'லெஹன்கா' என்ற பளபளக்கும் உடைகளையும், அலங்கார கடைகளுக்குச் சென்று இரண்டு, மூன்று லட்சம் ரூபாயில் வாங்கி அணிந்து அழகு பார்த்ததையும் சொல்வதால் என்ன லாபம்?

ஐயோ.. நான் சொல்லவந்த விஷயத்தைவிட்டு வேறு எதையோ பேசுகிறேன்? வயதாவதால் வரும் பிரச்னை இதுதான்.

'பார்க்' இல்லாததால் கடற்கரைதான் இப்போது பொழுது போக புகலிடம். நானும் ஒரு மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபாதையை ஒட்டி இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். போகிறவர்கள், வருகிறவர்கள், நடு வயதினர், சிறுவர்கள், விடலை பசங்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என்று பல்வேறு உடைகளில் மக்கள், மிடுக்காக நடை பயிலுபவர்கள் என்று பலர்.

காலியாக இருந்த என் இருக்கையில் ஒரு வயதானவர் வந்து அமர்ந்தார். அவருக்கும் என்னை போல் அறுபதுக்கு மேல், ஏன், எழுபதுக்கு மேல் கூட இருக்கலாம். பின்னர், திடீரென என்னை பார்த்து புன்னகைத்தார். நானும் புன்னகை செய்தேன்.

'சிவப்பிரகாசம், ஓய்வு பெற்ற பேங்க் அதிகாரி'' என்று அறிமுகம் செய்துகொண்டார். நானும் என்னைப் பற்றி சொன்னேன்.

'அடையார்?'' என்றார். 'இல்லை, பெசன்ட் நகரே'' என்றேன்.

'பிள்ளை, பெண்கள்?''

நான் புன்னகை செய்தேன். ' யூ. எஸ்ஸில். மகன், சிங்கப்பூரில் மகள்'' என்றேன். அவரும் ஆமோதிப்பதுபோல் தலையசைத்தார்.

'என் மகன் ஒருவன் யு.எஸ். மற்றவன் யு.கே.'' என்றார்.

நான் வேலை பற்றி கேட்கவில்லை. கடவுளைப் போல் உலகெங்கம் பறந்து, விரிந்து, வியாபித்து ஒவ்வொரு குடும்பத்தையும் தனக்குள் அமிழ்த்திக்கொண்ட 'கணிப்பொறி' வேலையாகத்தான் இருக்கும்.

'எப்போது கடைசியாக போய் வந்தீர்கள்?'' என்று கேட்டேன். அவரும் புன்னகை செய்தார். 'போன மாதம்தான்.''

'ப்ச்...அந்த ஊர்ல இது போல இல்லாமல் கால் போன போக்கிலே நடக்கலாம். ஆனால், என் பிள்ளை போகக் கூடாது என்று தடுத்து விடுவான்'' என்றேன் நானே வலுவில்.

'சரிதான்...அந்த ஊர் நிலைமை வேற. அங்கே தெருவோ, ரோடோ சுத்தமாக, காலியா இருந்தாலும் நம் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். காரணம் பயம்'' என்றார் அவராகவே.

'க்ரைம்' தான் காரணம்'' என்றார்.

நான் தலையசைத்தேன். 'உண்மைதான்''.

அதற்குள் அவராகவே சொன்னார். ''இப்போது இங்கு மட்டும் என்ன பேப்பரை படிக்கவே பயமாக இருக்கிறது'' என்றார்.

'போராட்டமும், வன்முறையும் வாழ்க்கையின் அங்கமாகி விட்டதே?'' என்றேன் வருத்தத்துடன். 'அங்கே போனால்தான் என்ன? அவர்கள் இரண்டு பேரும் காலையில் போனால் மாலையிலோ, இரவிலோதான் வருவார்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களை பார்த்து

கொள்வதுதான் நம் வேலை. அவைகளே சற்று பெரியவை, ஆறு, ஏழு வயது ஆனாலே நம்மை லட்சியம் செய்யாது. இன்னும் பெரிசானாலோ கேட்கவே வேண்டாம். நாம் ரொம்ப ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்'' என்றார் அவர்.

'இங்கும் முன் போல என் மனைவியால் எல்லா வேலைகளையும் செய்ய முடிவதில்லை. வயது ஒரு பெரும் பாரம். வேலை செய்ய ஓர் ஆள் வைத்திருக்கிறோம்'' என்றேன் நான்.

'நாங்களும்தான். வேறு வழியில்லை. வயதாவது வரமா, சாபமா என்று தெரியவில்லை. பல நண்பர்கள் குடும்பங்கள் நல்ல பண வசதி உள்ளவர்களானால் பல வசதிகள் உள்ள முதியோர் இல்லங்களில் வாழ்கிறார்கள். நிஜத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொள்கின்றனர்.''

'உண்மைதான்'' என்றேன்.

பிறகு சற்று நேரத்துக்கு நானும் அவரும் போன வெளிநாடுகளின் சுத்தம், சுகாதாரம் போன்ற விஷயங்களையும், பொதுவாக மக்களின் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதையும் பற்றி பேசினோம். அதற்குள், எங்களிடம் ஓர் இரு பிச்சைக்காரர்களும், பிச்சைக்காரிகளும் வந்து கையை நீட்டி விட்டு சென்றனர்.

'பொது இடங்களில் இன்னும் இந்தத் தொல்லை போகவில்லை'' என்றார் அவர்.

'நீங்க வேற...இது ஒரு கூட்டு பிசினஸ் என்று பேசிக் கொள்கிறார்கள்'' என்றேன்.

'ம்..இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்'' என்றார் அவர்.

'சரி..நான் வருகிறேன்'' என்று கிளம்பி விட்டார் அவர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் அவரை மூன்று முறை அங்கு சந்தித்து இருப்பேன். அவர் தனக்கு பிடித்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். பல திவ்யத் தேசங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த அனுபவங்களைப் பற்றி பேசினார். 'நான் அவரளவு பக்திமான் இல்லை' என்றாலும், 'எனக்கு தெரிந்த வகையில் கடவுள் நம்பிக்கை, ஸ்லோகங்கள் படிப்பது உண்டு' என்று கூறினேன். நான் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று அதே பெஞ்சில் அமர்ந்து அவருடன் உரையாடி வந்தேன்.

இப்படியே தொடர்ந்த எங்கள் நட்பில் நான் இன்னும் சில விஷயங்கள் கூட தெரிந்துகொண்டேன். 'அவருக்கு கர்நாடக இசையில் நாட்டம் உண்டு' என்றும் 'டிசம்பர் சீசனில் தவறாமல் மயிலாப்பூரில் நடக்கும் கச்சேரிகளில் ஏதாவது இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளுக்காவது தவறாமல் போய்விடுவார்' என்றும் கூறினார். 'நான் கச்சேரி கேட்பதைவிட கதாகாலட்சேபங்களுக்கு போவதில் நாட்டம் உண்டு'' என்று கூறினேன். அவரும் அதை ஆமோதிப்பது போல் இப்போது 'துஷ்யந்த் ஸ்ரீதர்' என்று ஓர் இளைஞர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சிகள் தருவதை பற்றிக் கூறினார். நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அவர் கருத்தை ஆமோதித்தேன்.

அவர் அமெரிக்காவில் சான் ஹோúஸ என்ற இடத்தில் உள்ள அவர் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு நடந்த ஒருசில விசேஷமான தமிழ் நிகழ்ச்சிகளுக்கு போயிருந்தது பற்றியும் கூறினார்.

'என்னவோ சார். என்ன இருந்தாலும் நம்மூரில் இருந்துகொண்டு அந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் இருக்கும் மகிழ்ச்சி போல் இல்லை'' என்றார் சற்று சோகமாக!

நானும் என் சிங்கப்பூர் அனுபவங்களை குறிப்பாக அங்கு உள்ள மாலை நேரங்களில் இருட்டியவுடன் ஒளிமயமாக மாறும் 'க்ளோ கார்டன்' பூங்காவை பற்றிக் கூறினேன்.

'புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டதற்கு, 'இல்லை. அந்தக் காலத்தில் கல்கி, தேவன் போன்றவர்கள் கதைகள் ஒன்றிரண்டு படித்ததுண்டு' என்று மட்டும் சொன்னார்.

'எல்லாம் சரிதான் சார். ஆனால், நம்ப ஊரில் வேலை செய்வதற்கும் அங்கு சென்று வேலை செய்வதிலும் நிறைய வேற்றுமை இருக்கிறது'' என்றார் .

'அங்கு மிக்க கடுமையாக உழைக்க வேண்டும்'' என்றார் தொடர்ந்து. நானும் அவர் கருத்தை ஆமோதித்தேன்.

'நம் குழந்தைகளும், பேரன், பேத்திகளும்தான் நமக்கு உள்ள பெரிய சொத்து. ஆனால், காலத்தின் மாற்றங்கள், வாழ்க்கை பற்றிய கருத்துகள் எல்லாமே நம்மிலிருந்து வேறு படுகின்றன' என்றார் சற்று சோகமான குரலில்.

எனக்கும் அது புரிந்ததால், 'உண்மைதான். மாற்றங்கள் தானே வாழ்க்கை?'' என்று பொதுப்படையாகச் சொல்லி வைத்தேன்.

திடீரென்று அவரை நான் இரண்டு, மூன்று நாள்களாகப் பார்க்கவில்லை. அவர் வரவில்லை. தொடர்பு எண்களும் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது. சற்று கவலையும் தோன்றியது; உடம்பு சரி இல்லையோ? அல்லது திரும்ப வெளிநாடு சென்று விட்டாரோ என்று குழப்பமாக இருந்தது. எப்படி விசாரிப்பது என்றும் தெரியவில்லை.

திடீரென்று ஓர் நாள் எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது. நாங்கள் அமர்ந்து பேசும் இடத்திற்கு சில அடிகள் தூரத்தில் ஓர் வேர்க்கடலை விற்பவன் ஓர் வண்டியில் அதை வைத்துகொண்டு வியாபாரம் செய்து கொண்டிருப்பான். அவன் எங்களை பார்த்திருக்கக் கூடும்.

அவனைக் கேட்டால் என்ன?

அன்றும் அவர் வரவில்லை என்பதால் நான் அவனை நோக்கிச் சென்றேன்.

'என்ன அய்யரே? வேர்க்கடலை சாப்பிடறீங்களா? நீங்கதான் வாங்கவே மாட்டிங்களே?'' என்றான் புன்னகையோடு.

'சரி சரி..எனக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டும்'' என்றேன்.

'சொல்லுங்க.. என்ன விஷயம்?'' என்றான்.

'கொஞ்ச நாளாக இங்கு நான் உட்காரும் இடத்தில் என்னுடன் ஒரு பெரியவர் கிட்டத்தட்ட என்னை மாதிரி வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்...பார்த்திருக்கிறே இல்லை?'' என்று கேட்டேன்.

அவன் விழித்தான். 'எந்த பெரியவர்?''

'அதானப்பா...அந்த உட்காரும் சோபாவில்..'' என்று நான் வழக்கமாக உட்காரும் இடத்தைக் காட்டினேன்.

'ஆமாம்.. அதெற்கென்ன? நான் உங்களை பார்த்திருக்கேனே?'' என்றான்.

'என்னோடு இன்னொருவரும் கிட்டத்தட்ட என் வயதில் உள்ளவரும் வந்து உட்கார்ந்து என்னோடு பேசிக்கொண்டிருப்பாரே, பார்த்ததில்லை?''

'இன்னொருத்தரா? உங்களை போலவா?'' என்றான்.

'ஆமாம்'' என்றேன்.

அவன் திடீரென விழித்தான். பிறகு 'இல்லையே?'' என்றான்.

'என்னது? இல்லையா? உயரமாக, கண்ணாடி போட்டுண்டு?'' என்றேன்.

'என்ன சார்... உங்களைப் புரிஞ்சிக்கறவன் அவரை பார்த்திருக்க மாட்டேனா?'' என்றான் உறுதியாக?''

'இல்லையா?'' என்றேன் அதிர்ச்சியுடன்.

'ஆமா சார்.. நீங்களேதான் உங்களுக்குள்ளவே பேசிக்கிறாகப் போல முணுமுணுன்னு பேசிக் கொண்டிருப்பீங்க?'' என்றான் சற்று கேலியான குரலில்.

'என்னது?'' என்றேன் நான் அதிர்ச்சியுடன்.

'ஆமா சார்...வயசானவங்க சில பேர் அப்படி பேசிக்குவாங்க..எங்க வீட்டில் கூட ஒரு கிழம் இருந்திச்சு.. ஆனா அது பொம்பளை..அது அந்த மாதிரி தனக்கு தானே பேசிக்கும். நீங்களும் அது போலன்னு நெனச்சுக்கிட்டேன்'' என்றான் புன்னகையுடன்.

எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

'ஏம்பா. நீ நிஜமாகத்தான் சொல்கிறாயா?'' என்றேன் பயந்த குரலில், 'ஆமா சார்.. எனக்கு பொய் சொல்லி இதுலே என்ன லாபம்?'' என்றான் அவன்.

நான் ஒரு நிமிஷம் பேசாமல் நின்று விட்டு மெதுவாக என் இருக்கைக்குத் திரும்பினேன். நாம் எந்த 'கெரியாட்ரிஸ்ட்' அல்லது 'சைக்கியாட்ரிஸ்ட்'யை சென்று பார்ப்பது என்று கவலையுடன் சிந்தித்தபடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com