
நான் நாடக ஆசிரியனாகப் பிரபலமாகித் திரை உலகில் ஒரே நேரத்தில் 11 படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது என்னை ஊக்குவித்த இயக்குநர்கள் ஏ.சி. திருலோகசந்தர், ரா. சாரங்கன், ஏ. வின்சென்ட், சிங்கிதம் சீனிவாசராவ். கதை விவாதத்திற்கு இங்கும் அங்கும் என்று பல ஹோட்டல்களுக்குப் போவேன். எனக்கு உதவியாக இராம. நாராயணனையும் ராஜசேகரையும் அழைத்துச் செல்வேன். இதில் பிற்காலத்தில் இராம. நாராயணன் கின்னஸில் வந்தார். ராஜசேகர் வெள்ளி விழா இயக்குநரானார்.
ஒரு நாள் நான் தங்கியிருந்த திருவல்லிக்கேணி அறைக்கு ஆறு நயா பைசா கார்டு ஒன்று வந்தது. அதைப் படித்துப் பார்த்தேன். அது நூறு திரைப்படங்களை எடுத்து முடித்த, மிகவும் கண்டிப்புக்குப் பேர் போன மாடர்ன் தியேட்டர்ஸிருந்து வந்திருந்தது. அதில் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அங்கு வந்து ஒரு கதை சொல்லச் சொல்லி எழுதப்பட்டிருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸைச் சேலத்தில் உருவாக்கிய டி.ஆர். சுந்தரம் அவர்கள் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து மேல் நாட்டில் படித்தவர்.
125 படங்களைத் தயாரித்தவர். அதில் 75 படங்கள். தமிழில் முதல் படம்1937-இல் 'சதிஅகல்யா'. முதல் மலையாளப் படம் 'பாலன்'. முதல் சிங்களப்படம் 'காடு'. முதல் ஆங்கிலப் படம் 'ஜங்கிள் 1952-இல் எடுத்தவர். முதல் கன்னடப்படம் 1938-இல் வந்த 'மாயாமாயவன்' முதல் கேவாவேர் 1956-இல் வந்த எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. பி.யூ.சின்னப்பா நடித்த முதல் இரட்டை வேடப்படம் 1940-இல் வெளிவந்த 'உத்தமபுத்திரன்'. இதே பெயரில் எம்.ஜி.ஆர். டைரக்ட் செய்து படத்தை உருவாக்க நினைத்தார். ஏனென்றால் அவர் இயக்கித் தயாரித்த படம் இரட்டை வேடப்படம்தான்.
அந்த நேரம் வீனஸ் பிக்சர்ஸ் சிவாஜியை வைத்து எடுக்கும் முயற்சியில் மும்முரமாக இருந்ததால் சிவாஜி கேட்டுக் கொண்டதற்காக எம்.ஜி.ஆர். தான் வைக்க ஆசைப்பட்ட தலைப்பு 'உத்தமபுத்திரன்' படத்தை 'நாடோடி மன்னன்' என்று மாற்றிக் கொண்டார். இந்த அளவுக்கு அந்த பழைய 'உத்தமபுத்திரன்' பாராட்டப்பட்ட படம்.
இங்கே இளங்கோவன், கலைஞர், கவியரசர் என்று போட்டி போட்டுக் கொண்டு பணிபுரிந்திருக்கிறார். இது ஒரு கலைக் கோவில். ஆனால் கண்டிப்பு கடுமையானது. 'உத்தமபுத்திரன்' படத்தின் படப்பிடிப்புக்கு கால தாமதமாக வந்த பி.யூ. சின்னப்பாவை மரத்தில் கட்டி போடச் சொன்னவர் சுந்தரம்.
தன்னிடம் அனுமதி கேட்காமல் சென்னைக்குக் காரில் புறப்பட்ட பி. பானுமதி அவர்களுக்குச் சேலம் முழுக்கப் பெட்ரோல் போட முடியாமல் செய்து திரும்பி வர வைத்தவர் அவர். இத்தனை கட்டுப்பாடுடன் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸþக்கு அச்சத்துடன் போனாலும் போய்த்தான் பார்க்கலாமே என்று முடிவு செய்தேன்.
1973-இல் நான் எழுதிய 'தீர்க்க சுமங்கலி' படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக்காக ரயிலில் கே.ஆர். விஜயா, அவர் கணவர் வேலாயுத நாயருடன் நான் புறப்பட்டேன். நான் சேலத்தில் அவர்களிருவரிடமும் சொல்லிக் கொண்டு நள்ளிரவில் இறங்கிக் கொண்டேன்.
நள்ளிரவு தூக்க நேரம். யூனிட்டில் எங்கள் எல்லோருடைய டிக்கெட்டும் தயாரிப்பு நிர்வாகியிடம் இருந்தது. என்னிடம் டிக்கெட் இல்லை. வாசலில் ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட் கேட்டார். நான் என்னிடம் டிக்கெட் இல்லை என்று கூறினேன். அங்கே நின்ற மாடர்ன் தியேட்டர்ஸ் கார் டிரைவரிடம் சொல்லச் சொன்னேன். அவரோ உங்களைக் கூட்டி வர சொன்னார்கள். உங்கள் டிக்கெட்டுக்கெல்லாம் நான் சொல்ல முடியாது என்றார்.
ஆரம்பமே அவர்களின் கண்டிப்புத் தெரிந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் என் நிலைமையைப் புரிந்து கொண்டு போகச் சொன்னார். மாடர்ன் தியேட்டர்ஸ் ரிகர்சல் ஹாலில் ஃபேன் கூட இல்லாத ஒரு அறையில் கயிற்றுக் கட்டிலில் படுக்கச் சொல்லி விட்டு டிரைவர் போய் விட்டார். அவர் போனதும் இரவில் இரண்டு கிரேட்டேன் நாய்கள் மோந்து பார்தது விட்டு ஓடின. நான் கதவைப் பூட்டிக் கொண்டேன்.
அடுத்த நாள் காலை டீ, டிபனுக்கு என்னிடம் 47 பைசாவைப் பையன் வாங்கிச் சென்றான். எங்கே குளிப்பது என்று கேட்டேன். ஒரு கிணற்றைக் காட்டி வாளியில் இரைத்துக் குளிக்கச் சொன்னார்கள்.
காலை 10 மணிக்கு டி.ஆர். சுந்தரம் மகன் முன்னால் என்னை ஜமுக்காளத்தில் உட்கார வைத்தார்கள். அவர் உயரமான நாற்காலியில் இரண்டு உயரமான நாய்களைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார். கதை சொல்லச் சொன்னார். சொன்னேன். பத்து நிமிடம் கூட இருக்காது. 'வீ வாண்ட் ஆக்ஷன், எண்டர்டெயின்மென்ட் நாட் சச் லைக் திஸ் ஸ்டோரி'' என்று கூறி விட்டு நாய்களைப் பிடித்தபடி போய் விட்டார்.
கச்சேரி செய்த வித்வானைப் போல என் கழுத்து சுலுக்கியதுதான் மிச்சம். பெரிய பெரிய படங்கள் எடுத்தாலும் மனோகரை வைத்து 'வண்ணக்கிளி'யும், மனோரமாவைக் கதாநாயகியாக்கிக் 'கொஞ்சும் குமரி'யும் எடுத்த நிறுவனத்தில் என் கதை செல்லுபடியாகவில்லை. எனக்கு வந்து போன செலவுக்கென்று 128 ரூபாய் தந்து பஸ்ஸில் ஊட்டிக்கு ஏற்றி விட்டார்கள். ஒரு கலை கோவிலைத் தரிசனம் செய்ததில் பெருமை கொண்டேன்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.