

அருள்செல்வன்
'கற்பனைக் கதாபாத்திரங்களான 'சூப்பர்மேன்', 'ஸ்பைடர்மேன்' போன்றவை இன்றும் மக்கள் மனதிலும் நீடித்து உள்ளன. நல்ல வளமான கற்பனை மூலம் ஏ.ஐ. தாக்கத்தை வெல்ல முடியும். ஏ.ஐ.யை இணைத்துகொண்டு நம் கற்பனையும் கலந்தால் வேறொரு திசையில் பயணிக்க முடியும். அதை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். நம்மை அது பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. நாம் அதற்கும் கீழே சென்று விடக்கூடாது'' என்கிறார் ஓவியர் ஷ்யாம்.
ராஜபாளையத்தைப் பூர்விகமாகக் கொண்ட அவர், சென்னையில் பிரபல ஓவியராக விளங்குகிறார்.
அறிவியல் முன்னேற்றத்தின் அசுரக் குழந்தையாகப் பிறந்திருக்கும் 'ஏ.ஐ. தொழில்நுட்பம்' எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, 'ஏ.ஐ. ஓவியங்கள்' பிரபலமாகி வருகின்றன. 'ஏ.ஐ. என்பது ஓவியர்களுக்கான வில்லனா?' என்பது குறித்து அவருடன் ஓர் சந்திப்பு:
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் படங்கள் வரைவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
'ஒரு தமிழ்ப் பெண் சமையல் அறையில் காய்கறி வெட்டிக் கொண்டு சமைத்துகொண்டிருக்கிறாள்' என்று ஏ.ஐ.யில் சொன்னால் போதும். நம்முடைய கலாசாரப்படி எல்லாம் கொண்டு வந்து கொடுத்து விடும். இப்படிப்பட்ட படத்தில் சில ஓவியர்கள் தங்களது பெயரைப் போட்டு தாங்கள் வரைந்ததாகக் காட்டிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட படங்கள் ஒரே மாதிரி தான் இருக்கின்றன.
படத்துக்கான குறிப்புகளைக் கொடுத்து, யார் பதிவு செய்தாலும் ஒரே மாதிரியான பெண்தான் வருவாள். இதையே ஓவியர் போடும்போது வேறுபடுத்திக் காட்டலாம்.
ஓவியர் வரைவதைவிட ஏ.ஐ. படங்களில் அந்த உயிரோட்டம் குறைவாகவே இருக்கும்.
ஏ. ஐ. யை தடுக்க முடியாது. அறிவியலை, அதன் முன்னேற்றங்களை, வளர்ச்சியைத் தடுக்க முடியாது. அது வளர்ந்துகொண்டே தான் இருக்கும். அந்த அறிவியலை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் இணைத்து, என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டுமே தவிர அதை ஒதுக்கிவிட முடியாது. அபாரமான திறமை இருந்தால் ஏ.ஐ.யை வைத்தும் வேலை வாங்கலாம்.
ஏ.ஐ. ஓவியர்களுக்கான வில்லனா ?
அனைத்துத் துறைகளையும் ஏ.ஐ. கலக்கி வருகிறது. எல்லாருக்கும் இது ஓரளவுக்கு வில்லனாகவே இருக்கிறது. ஒருவரிடம் நமக்கு வேலை வாங்கத் தெரியவில்லை என்றாலே நாம் நல்ல முதலாளி கிடையாது. வேலை செய்பவரிடம் அவர் நோகாமல் வேலை வாங்குவது தான் நமது தந்திரம்.
'பென்சில் ஓவியம் வரைந்து கொடுங்கள்' என்று வெளிநாடுகளில் இருந்து கூட எனக்கு ஆர்டர்கள் வருகின்றன. ஆனால், 'ஏ.ஐ .யை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள்' என்கிறார்கள், அறிவியல் முன்னேற்றத்தை அன்றாடம் கண்டு கொண்டிருக்கும் அவர்களே இப்படிக் கைப்பட வரையும் ஓவியங்களைத் தான் விரும்புகிறார்கள்.
நான் வரைய ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு நாளும் எனது தொழில் தொய்வடைந்ததில்லை. கற்ற கல்வியை , பெற்ற அனுபவத்தைப் பிறரால் எப்படித் திருட முடியாதோ, அது போல்தான் உங்களது திறமையையும் யாராலும் திருட முடியாது.
ஏ.ஐ.யில் ஆயிரம் துரிதமான இன்ஸ்டன்ட் ஓவியங்கள் தயார் செய்து அனுப்பலாம். ஆனால் என்னுடைய கற்பனை முழுக்க, முழுக்க என்னுடையது. பிரத்யேகமானது.அதைப் பிறரால் கற்பனை செய்ய முடியாது.
ஓவியக் கண்காட்சிகளில் வைக்கும் படங்கள் எல்லாம் ஏற்கெனவே நாம் பார்த்து ரசித்த இயற்கைக் காட்சிகள்தான். ஆனால் அது அசலானது போல் ஓவியமாக மாறும்போது, வேறு ஒரு அனுபவத்தைத் தருகிறது. கற்பனை கலந்து தத்ரூபமாக அதை வரையும்போது ரசிக்கின்றனர். சில இடங்களில் ரசிப்பார்கள், சில இடங்களில் சாதாரணமாகக் கடந்து போவார்கள். ஆனால் ஏ.ஐ. என்பது உங்களுக்கு சம்பவங்களைக் கொடுக்கிறது. இதற்கு ஓவியர் தான் வரைய அமர வேண்டுமென்று அவசியமில்லை.
அண்மையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், பெரும்பாலான புத்தகங்களின் அட்டைப் படங்களுக்கு ஏ.ஐ. மூலம் உருவாக்கியதையே பயன்படுத்தியிருந்தார்கள். சரித்திரக் கதைகளுக்கெல்லாம் படம் போட்டு இருந்தார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான ராஜாக்கள் ஒரே மாதிரி இருந்தார்கள். அந்த ராஜாக்கள் நம்முடைய கலாசாரம் இல்லாத மாதிரியும் இருந்தனர்.
சாதாரணமாக, ராமாயணம், மகாபாரதத்தை டி.வி.யில் பார்க்கும்போது நம்முடைய நடிகர்கள் நடித்தால் நாம் அதில் ஒன்ற முடிகிறது. அதை ஹிந்தியில் எடுத்து அங்குள்ள நடிகர்கள் நடித்தால் சற்று ஒன்றுதல் குறைவாக இருக்கும். பின்னர், அனிமேஷனில் வந்தபோது ராமர் , கிருஷ்ணன், அர்ஜுனன் எல்லாம் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் இருந்தார்கள். போகப் போக ஏற்றுக் கொண்டார்கள். இப்படிப்பட்ட மாற்றத்தை நாம் ஏற்க வேண்டும். அதனுடன் போராடி நாம் ஜெயிக்க வேண்டும். இல்லையேல் அது நம்மை வென்றுவிடும்.
வில்லனா என்கிறீர்கள். நமக்கு எதிரே இருப்பவர்கள் இருப்பவர் முன்பு நாம் நிராயுதபாணியாக இருந்தால் அவர் வில்லன். நம்மால் மோத முடியும் என்று நாம் நினைத்தால் நாம் தான் ஹீரோ.
ஏ.ஐ.யால் ஓவியக்கலை நலிவடைந்து விடுமா? ஓவியர்கள் மீள்வது எப்படி?
ஏ.ஐ.யில் கடவுள் படங்கள் நிறைய, அருமையாக வர ஆரம்பித்துள்ளதால், ஏ.ஐ. ஓவியங்கள் என்று சொல்லியே விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் காலண்டர் ஓவியர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஊடகத்தில் உள்ளவர்கள் ,இதை அவர்களே செய்ய ஆரம்பித்தால் பத்திரிகை ஓவியர்களும் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும். இதையும் தாண்டி கற்பனை வளம் அதிகம் உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள்.
கற்பனையில் நினைப்பதை ஓவியர் ஒருவரால் மட்டும்தான் சரியாக உருவாக்க முடியும். அவர்கள் நினைத்ததை சரியாக ஓவியர் வரையும்போது அதற்கு வரவேற்பு இருக்கும்.
நீங்கள் நினைப்பதை ஏ.ஐ. மூலம் தான் அதைச் செய்ய முடியும் என்றால் அதை அவர்களே செய்து கொள்வார்கள். ஓவியர்கள் தேவையில்லை.
நாளுக்கு நாள் மாறிவரும் உலகத்துக்கு அறிவியல் மிக அவசியம். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறிவந்த அறிவியல் முன்னேற்றம் இப்போது பத்து நாள்களுக்கு ஒரு முறை மாறிவிடுகிறது. அறிவியல் வளர்ச்சியுடன் சிந்தனை சேரும்போது, சாதாரண மக்களுக்குக் கூட புதுப் புது யோசனைகள் உதிக்கின்றன. அப்படி இருக்கும்போது அறிவியலின் அவதாரங்கள் பிரகாசமாக மேலெழுந்து வரும்.
முக்கியமாக, கலைத்துறையில் அது உடனே கால் பதித்து விடும். ஒரு காலத்தில் கட் அவுட்டுகள் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருந்தது. அதனால் ஏராளமான பேர் பிழைத்துவந்தார்கள். பிளக்ஸ் பேனர்கள் வந்தவுடன் கட் அவுட் வரைந்தவர்கள் திணறிவிட்டு, வேறு தொழிலுக்குச் சென்று விட்டார்கள்.
தொழில்நுட்பங்களைத் தாண்டி ஓவியர்கள் முத்திரை பதிக்க என்ன செய்ய வேண்டும்?
'எந்தப் பாட்டில் தண்ணீரிலும் மீனை போட்டால் நீந்தி கொண்டிருக்கும்' என்பது போல எந்தச் சூழலிலும் நமக்கு நீந்தத் தெரிய வேண்டும், முடியும் என்கிற மனநிலை நமக்கு வர வேண்டும். தெரியவில்லை என்று நினைக்கும் போது நாம் பலவீனப்பட்டுப் போகிறோம்.
ஓவியர்களுக்கு மட்டுமல்ல; எந்தத் துறையிலும் ஏ.ஐ. வந்ததாலும் சந்திக்க வேண்டும். ஏ.ஐ.யுடன் இணைந்து ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்றால் அதனை வெற்றிகரமாகச் செய்யலாம். முடியவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம். மீள்வதும், மீளாமல் போவதும் நம்மிடம்தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் ஏ.ஐ. பரவி ஒரு உச்சத்துக்கு சென்று மீண்டும் பழைய நிலைக்கு அதல பாதாளத்துக்கு சென்று விழுந்து விடும். அப்போது சலிப்பூட்டி விடும். திரைப்பட நடிகர்களுடன் பேசும்போது, அவர்கள் என்னிடம் அன்புடன், 'சார்.. என்னைச் சின்னதாக ஒரு லைன் ட்ராயிங் போட்டுத் தர முடியுமா?' என்று கேட்பார்கள்.
திரையில் விதவிதமா வந்த அதே நடிகர்களுக்கு கட் அவுட் வைத்திருப்பார்கள். விதவிதமாக போஸ்டர் அடித்திருப்பார்கள். எண்ணற்ற புகைப்படங்களை எடுத்திருப்பார்கள். ஆனால் சின்ன, சின்ன ஆசைகளில் ஒன்றாக சின்னதாக ஒரு கோட்டோவியத்தை அவர்கள் விரும்புகிறார்கள். அந்தக் கோட்டோவியங்கள் என்றும் அழியாது. இப்போது கூட எனக்கு பென்சில் ட்ராயிங் போட்டுக் கொடுங்கள் என்று ஏராளமான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஏ. ஐ.யின் பின்புலம் தெரிந்து விட்டால் அதை நோக்கிச் செல்ல மாட்டார்கள். அந்த மயக்கத்தில் இருந்து விலகி விடுவார்கள். புதிதாகப் பார்க்கும்போது அது அதிசயமாகத் தெரியும். கற்பனை நமக்கு மட்டும் உள்ள பிரத்யேகமானது. கற்பனை வளம் இருந்தால் ஏ.ஐ.யை மிஞ்சி நாம் ஜொலிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.