இயக்குநர் ஏ.பீம்சிங்! - நான் சந்தித்த பிரபலங்கள் - 5

இயக்குநர் ஏ.பீம்சிங் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
இயக்குநர் ஏ.பீம்சிங்
இயக்குநர் ஏ.பீம்சிங்
Published on
Updated on
2 min read

இயக்குநர் ஏ.பீம்சிங்

நான் பாட்டு எழுத வந்து தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம்... என்று அலைந்துத் திரிந்து யார், யாருக்கோ சீட்டு எழுதிக் கொடுத்தும் என்னைச் சந்திக்கக் கூட அனுமதிக்காத நிலையில் இருந்தேன்.

1965-66-இல் என்னைக் கீழ்ப்பாக்கத்தில் இருந்த 'வெங்கடேஸ்வரா சினி டோன்' என்ற நியூடோன் ஸ்டூடியோவுக்கு வரச் சொல்லி அனுமதித்த ஒரே மனிதரும், இயக்குநருமான, என் மரியாதைக்குரிய ஏ.பீம்சிங்.

அந்தக் காலத்தில் கீழ்ப்பாக்கத்தில் இருந்த இரண்டு ஸ்டூடியோக்களில் ஒன்று சிட்டாடல் ஸ்டூடியோ. இன்னொன்று நியூடோன் ஸ்டூடியோ. இங்கு போய் இதில் மேலாளராகப் பணிபுரிந்த ராமானுஜம் என்பவரிடம் என்னை வரச் சொன்ன விவரத்தைச் சொன்னேன்.

அவர் சிரித்த முகத்துடன் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, மாடியில் இருந்த பீம்சிங்குக்குத் தகவல் சொல்லி விட்டுச் சில நிமிடங்களில் என்னை மாடிக்கு அழைத்துச் சென்று உள்ளே போகச் சொன்னார். அப்போது நான் திரைப்பட ரசிகன்.

வேறொன்றும் திரைத்துறையைப் பற்றி தெரியாது. அவரது திரைத்துறை வாழ்க்கை 1954-இல் ஆரம்பித்துப் பல மொழிகளிலும் கொடிக் கட்டிப் பறந்து, 100 படங்களுக்கு மேல் இயக்கியவர் என்பதும், பி.யூ. சின்னப்பா, பானுமதி நடித்து கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் அவர்களுக்கு உதவியாளராக இருந்து 'ரத்னகுமார்' படத்தில் பணிபுரிந்தவர் என்பதையும் அறிந்தேன்.

ஏ.பீம்சிங் இருந்த ஏ.சி. அறைக்குள் வியர்க்க, விறுவிறுக்க உள்ளே நுழைந்தேன். அவருடன் பிரபல எழுத்தாளர்கள் ஜாவர் சீதாராமன், வலம்புரி சோமநாதன், இறைமுடிமணி, உசிலை சோமநாதன் என்றும் இணை இயக்குநர்களான திருமலை, மகாலிங்கம் என்று பலரும் இருந்தார்கள். 'எல்லோருக்கும் வணக்கம் சொல்ல வேண்டும்' என்ற அடிப்படை எண்ணம் கூடத் தோன்றாமல் அவர்கள் எதிரே நின்றேன். அங்கே இருந்த ஒரு ஃபைலை என்னிடம் கொடுத்து, அதில் ஒரு காட்சியைப் படிக்கச் சொன்னார்கள்.

நான் என் உடம்பில் வியர்வை நனைவதை உணர்ந்து அந்தக் காட்சியை மெல்லப் படித்துக் காட்டினேன். அங்கிருந்த யார் முகத்திலும் ஆதரவுக்கான அடையாளம் இல்லாததைக் கவனித்தேன். என்னைக் கீழே அலுவலகத்தில் இருக்கச் சொன்னார்கள். அப்போது ஒரு பையன் வந்து, ' டைரக்டர் உங்களைக் கூப்பிடச் சொன்னார்' என்று கூட்டிச் சென்று சாப்பாடு போட்டான். என் தெய்வம் என்னை ஆசீர்வதித்ததாக உணர்ந்தேன். காரணம் அன்று கடன் வாங்கிச் சாப்பிடும் நிலைமை.

'அவர் கூப்பிடுவார்' என்ற நம்பிக்கையில் அங்கே இருந்த மேக்கப் அறையில் இருந்த ஒரு பழைய காலத்து மர நாற்காலியில் உட்கார்ந்தேன். என்னை அறியாமல் என் மனச் சோர்வில் தூங்கிவிட்டேன். பத்து நிமிடம் போயிருக்கலாம். என் கால்களில் பிரம்படி விழுந்தது. விழித்துப் பார்த்தேன். அங்கே நின்ற ஸ்டூடியோ மேக்கப் மேன் ராமச்சந்திரன் என்பவர்,

'ஏய்யா நீ தூங்குறதுக்கா இந்த நாற்காலி. இது யாரெல்லாம் உட்கார்ந்து மேக்கப் போட்ட நாற்காலி தெரியுமா? பாகவதர், கலைவாணர் இவங்களெல்லாம் உட்கார்ந்ததை ஞாபகமார்த்தமா வச்சிருக்கோம்' என்று கோபப்பட்டார்.

கமல்ஹாசனின் ஒப்பனையாளர் சுந்தரமூர்த்தியின் அப்பாதான் என் கரங்களில் பிரம்பால் அடித்த ராமச்சந்திரன். மனம் நொந்து போன நேரத்தில் மீண்டும் இறைவன் ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்ல வைத்தான். ஏ. பீம்சிங்கின் யூனிட்டில் நான் பதினான்காவது உதவியாளனாகச் சேர்த்துகொள்ளப்பட்டேன்.

அவர் 'பதிபக்தி', 'பாவ மன்னிப்பு', 'பார்த்தால் பசி தீரும்', 'பாலும் பழமும்,' 'பந்த பாசம்', 'பார் மகளே பார்' போன்ற 'ப' வரிசை வெற்றி இயக்குநரிடம் 'சாது மிரண்டால்', 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி', 'பட்டத்து ராணி' என்று பல படங்கள் நடந்தபோது நானும் சிறிது நடக்க ஆரம்பித்தேன். எடிட்டிங் அறையில் அவரது திறமையைக் கற்றேன்.

நான் பணிபுரிந்த அந்தக் காலத்தில் செட் போட்டு படப்பிடிப்பு நடக்கும். நான் கொடுத்த தவறான சட்டையை ஜெமினி கணேசன் போட்டுக் கொண்டு நடித்துவிட்டு போன பின் எடிட்டிங்கில் கன்ட்னியூட்டி மிஸ்டேக்கில் நான் கொடுத்த சட்டை தவறாகிவிட அந்தக் காட்சியை மீண்டும் செட் போட்டு எடுத்தார்கள்.

அன்றைய நிலையில் அவருக்குப் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம். அதை நினைத்து வருந்தினேன். ஆனால் அவர் அதைப் பொருள்படுத்தாமல் நான் பாட்டு எழுத வந்து உதவி இயக்குநராக அவதிப்படுகிறேன் என்று சொன்னதைக் கேட்டு பாட்டு எழுத வாய்ப்பு தந்தார். டி.கே. ராமமூர்த்தி இசையில் என்னால் எழுத முடியவில்லை.

'பட்டத்து ராணி' படத்தில் வாலி எழுதிய பாடலில் இரண்டு வரிகளை தணிக்கைக் குழு நீக்கியவுடன், வாலி ஊரில் இல்லாத போது உடனே அதற்குப் பதிலாக இரண்டு வரிகளை எழுதச் சொல்லி அதை பி.சுசீலா பாடினார். நான் 1978-இல் இயக்குநராகி தயாரிப்பாளரானதும் , ' உன்னிடம் மயங்குகிறேன்' நாடகத்தைப் படமாக்கினார்.

இதுதான் அவர் இயக்கிய கடைசிப் படம். அந்தப் படம் வெளிவரவில்லை. அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அன்று அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன். மூன்று மாதங்களுக்கு முன்னால் அவரது நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு அவரது புகழையும் பிறரை புண்படுத்தாத பண்பையும் பாராட்டிப் பேசும் பாக்கியம் பெற்றேன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com