ஆனந்த் ஸ்ரீனிவாசன்
அந்த ஐ. டி. நிறுவனத்தில் கடந்த ஒரு மாதமாக, தினம்தினம் தான் பார்க்கும் அந்தப் பொறுப்புள்ள வேலையின் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது ஹேமாவுக்கு!
அதுவும் இந்த மாதம் ஊழியர்களின் ஊதிய உயர்வுக் குறிப்புகளைச் சரிபார்க்க வேண்டும். அதை ஆராய்ந்து, பரிந்துரை செய்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபிநாத்துக்கு அனுப்பி, அதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றால், நேருக்கு நேரான ஆலோசனை, பின்னர் ஆராய்ந்தறிதல் , அப்புறம் மீண்டும் ஊதிய உயர்வைச் சீரமைப்பது என்று பெரிய வேலை.
அதைத் தவிர்த்து, வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டங்கள், புதிய ஊழியர்கள் தேர்வு.. என்று பலவிதமான வேலைகள் அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையின் நிர்வாக அலுவலரான அவளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. வேலைப் பளுவால் உடல்நிலை இவ்வளவு மோசமானது இப்போதுதான். தன்னைச் சமப்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள்.
முன்பெல்லாம் புன்சிரிப்புத் தவழும் புன்னகையுடன், வலிய வந்து, தன் வேலையை மிக ஆர்வத்துடன் செய்தது மட்டுமல்லாமல், அந்தந்த மாதத்துக்கான வேலை நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாகவே செய்து, ஊக்கத் தொகையையும் பெற்றவள்.
தன் வேலையை முடித்து விட்டு, பிறருக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதிலும் கெட்டிக்காரி. ஆனால், 'இப்போது ஏன் இப்படி, தான் ஆனோம்? தன்னுடைய மன அழுத்தத்தைத் தன்னால் சமாளிக்காமல் இருக்க முடியவில்லையே?' என்று ஏக்கம். அதற்குக் காரணம் அவள் குழந்தையும், குடும்பமும்தான்.
'கல்யாணம் வேண்டவே வேண்டாம்' என்று முப்பது வயது கடந்த பிறகும் சொன்னவள் திடீரென ஒரு நாள் ,சம்மதம் கொடுத்தவுடன் விஷ்ணுவுடன் திருமணம் நடந்தேறியது.
விஷ்ணுவும் சாமானியப் படிப்பு அல்ல; பிட்ஸ் பிலானியில் எம்.பி.ஏ., பின்னர் அமெரிக்காவில் எம்.எஸ். படிப்பு. கூடவே 'ஆரக்கிள் லேட்டஸ்ட் வேர்ஷன்' வரை பயின்றவர். பொதுஅறிவும் மிக்கவர். கல்யாணமான கையுடன், சென்னையில்தான் செட்டில் ஆக வேண்டும் என்று, ஹேமா போட்ட கோரிக்கை ஏற்றவுடன் இங்கே இவளது அலுவலகத்திலேயே ஆரக்கிள் டிபார்ட்மெண்ட் அக்கவுன்ட் மேலாளர். நல்ல சம்பளம் . இரண்டு பேரும் ஒரே நிறுவனம் ஒரே இடம். நிம்மதியாகவே வாழ்க்கை போனது.
கரோனா காலத்திலும் வீட்டில் இருந்தே வேலை. இருவருக்கும் பணிப் பளுவைக் குறைத்தது. நெருக்கத்தை அதிகரித்தது.
இரண்டு வருடம் கழிந்தவுடன் குழந்தை பெற்று, வழக்கமான சலுகைகள் பெற்றுக் கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமல்ல, அதற்குப் பிறகும் பிரச்னையின் தீவிரம் அதிகமானது. எல்லாப் பிரச்னைகளையும் சாதுரியமாகச் சமாளிக்கும் ஹேமா, குழந்தை வளர்ப்பில் நிறையவே சிரமப்பட்டாள்.
விஷ்ணுவுக்கு அம்மா, அப்பா கிடையாது. ஹேமாவுக்குப் பெற்றோர் இருவரும் எழுபது வயதைக் கடந்தவர்கள் கிராமத்தில் உள்ளவர்கள். அவர்கள் இயலாமை வந்து உதவி செய்ய முடியாத சூழ்நிலை.
'இது சாதாரணத் தும்மல் தான் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது' என்று அவள் அம்மா ஒருமுறை சொன்னபோது, 'உங்கள் காலம் வேறே. இப்ப வேறே. நீ பேசாம இரு' என்று கோபமாகி, டாக்டரிடம் ஓடுவாள். இவள் மட்டுமல்ல; இந்தக் காலத்துப் பெண்கள், தான் அம்மா ஆனவுடன் இப்படித்தான். பெரியவர்கள் பேச்சை கேட்பதில்லை. சின்ன விஷயம் என்றால் கூட டாக்டரிடம் குழந்தையை அழைத்துப் போகிறார்கள். 'சரி பேபி சிட்டர் போட்டு குழந்தையைக் கவனிக்கச் சொல்லலாம்' என்றால் அதுவும் பயம்.
இருவரும் அலுவலகம் போனவுடன், குழந்தையை அவள் கடத்திக்கொண்டு சென்று விட்டால்? இது மாதிரியான தர்க்கங்கள், இடைஞ்சல்கள், விஷ்ணுவுக்கும், ஹேமாவுக்கும், தொடர்ந்து வந்த காரணம் அதற்குத் தீர்வு கிடைக்காததால் அவளுக்கு மன அழுத்தமும், கோபமும் இன்னும் அதிகமானது.
ஒண்றரை வயது வரைக்கும் தாய்பால், அப்புறம் நீர்ச் சத்து மாவு , கஞ்சி கொடுக்கும்போது குழந்தை இவளை சிரமப்படுத்தவில்லை. இரண்டரை வயதான பிறகு குழந்தை சாப்பிடாமல், அடம் பிடிப்பது , அங்கே இங்கே ஓடுவது, தன் இயலாமை விஷ்ணு மேல் அதிகக் கோபம் வரவழைத்தது.
விஷ்ணுவுக்கு அமெரிக்கா வேலை நேரம். மதியம் மூணு மணியிலிருந்து இரவு 11மணி வரை வேலை நேரம். வாரத்தில் நிறைய நாள் இரவு மூன்று மணி வரை வேலை செய்துவிட்டுச் சாப்பிடாமல் பெட்டில் வந்து விழுவான். ஹேமாவுக்கு வழக்கமான வேலை நேரம். குழந்தை பிரச்னையைக் காட்டி, மதியம் மூணு மணி வரைக்கும் அலுவலகத்தில் இருந்துவிட்டு, விஷ்ணு மூணு மணிக்கு கிளம்பும் முன் , தான் வீட்டுக்குப் போய்க் குழந்தையைக் கவனிக்க வேண்டும். மீதி வேலையை 'வீட்டில் இருந்தே வேலை பார்க்கிறேன்' என்று நிர்வாக இயக்குநரிடம் அனுமதி வாங்கிக் கொண்டவுடன் சில நாள்கள் அப்படிச் சென்றது.
இரண்டரை வயது குழந்தைக்குச் சாதம் ஊட்டி விடும் வேலை இருக்கே! அது பெரும்பாடு . ஒரு திட்டப் பணியைக் கூட எளிதாகக் கையாண்டு முடிக்கலாம்; ஆனா, குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவது ஒரு பெரிய போர்க்களம்.
என்ன தான் அலுவலகத்தில் இருந்து அரை மணிக்கு ஒரு தடவை வழிகாட்டுதல் கொடுத்தாலும், மதியம் இரண்டு மணிக்குள் குழந்தைக்குச் சாதம் ஊட்டி விடுவது விஷ்ணுவுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. சில நாள்கள் குழந்தை சாப்பிடாமல் அடம் பிடிக்கும். ஒரு தாய்க்கு உண்டான பொறுமையும், சகிப்புத் தன்மையும், பெத்த அப்பாவுக்குத் தெரியாது.
சில சமயத்தில் மூணு மணிக்கு முன் கூட்டியே வந்தவள், 'குழந்தை சாப்பிடலையா?அதற்கான முயற்சி ஏன் விஷ்ணு எடுக்கவில்லை?' என்று அவனிடம் கோபிப்பாள்.
'நான் முயற்சி பண்ணினேன். ஆனா குழந்தை சாப்பிடலை, நான் என்ன செய்யட்டும்?' என்று பதில் ஒரு முறை விஷ்ணு சொன்னபோது, 'நமக்குப் பசி எடுத்தா டான்னு டயத்துக்குச் சாப்பிட மாட்டோம்? எப்படியாவது நீ சமாதானம் பண்ணிக் கொடுத்திருக்க வேண்டும்' என்று அவனை, குற்றவாளி கூண்டில் நிறுத்தி கேள்வி கேள்வி மேல் கேட்டு, அன்று அவன் சாப்பிடாமல் அலுவலகம் போகும் நிலைமை ஆகும். இப்படி நிறைய நாள்கள் தர்க்கம், சண்டை. மனதில் இரண்டு பேருக்கும் நிம்மதி இருக்காது.
'டி.வி. போடு அப்பதான் சாப்பிடுவேன்' என்று குழந்தை சொல்லும். சொன்னவுடனே கார்ட்டூன் படம் போட்டு இரண்டு வாய் ஊட்டியவுடன், அது அங்கும் இங்கும் ஓடிப் போகும்.
அவளும் குழந்தையுடன் ஓட வேண்டிய நிலை வரும் . ஒரு வழியாக உட்காரவைச்சு, 'சாப்பிடு' என்று கெஞ்சும்போது, 'டி.வி. வேண்டாம். ஆஃப் பண்ணு. மொபைலில் கோகோ மிலன் போடு... சோட்டா பீம் போடு' என்று அது மழலையில் சொல்லும்போது, கோபம் போய் அந்தக் கார்ட்டூன் காண்பித்து, ஊட்டி விடுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும்.
இப்போதெல்லாம் நிறையக் குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோனில் கார்ட்டூன் காட்டி குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டி விடும் சூழ்நிலை. நிலாவை காட்டியும் ,காக்கா- குருவிகளை காண்பித்து ஊட்டி விட்ட காலம் போய்விட்டது.
குழந்தைகள் உணவைக் கையால் தொட்டும், தம்மேல் பூசிக் கொண்டும், கீழே இரைத்தும், மற்றவர்கள் மேல்பூசியும் விளையாடும் செயல்களால் பிறரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியும், தம்மையும் மகிழ்விக்கும் ,இந்தப் பொருள்பட
'அமிழ்தினும் ஆற்றஇனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்' என்று திருவள்ளுவர் மக்கட்பேறு அதிகாரம் குறள் 64-இல் சொல்லியுள்ளார்.
சின்னஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும். அப்படித்தான் தாய்க்கும் குழந்தை சாப்பிட்டு மிச்சம் வைத்த சாப்பாட்டைச் சுவைக்கும் போது அமிர்தம் மாதிரி இருக்கும்.
'குழந்தை இப்படி விளையாடி பாக்குறது ஒரு ஆனந்தம் ஹேமா!' என்று தமிழ் ஆசிரியரான அவளுடைய அப்பா ஒரு முறை வந்திருந்தபோது சொன்னதில் , அவளுக்குக் கோபம்தான் அப்பா மீது வந்தது.
'ஏம்பா இங்கே ஒருத்தி குழந்தைக்கு சாதம் ஊட்டி விடறது எவ்வளவு கஷ்டம் இந்த நேரத்தில் குழந்தை மிச்சம் வைச்ச உணவு அமிர்தம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு அங்கிட்டு போங்கப்பா' என்றதும், வருத்தமாக வெளியேறினார் அவர்.
அதற்குப் பின் அவள் சாப்பிட்டு, குழந்தையைத் தூங்க பண்ணுவதற்குள் மணி ஐந்தாகிவிடும். அதற்குப் பிறகு அலுவலக இணையவழி கூட்டம் அது. இது என்று இரவு எட்டுமணிவரை வேலை நீடிக்கும்போது, 'சூடா ஒரு கப் டீ சாப்பிட மாட்டோôமா?' என்ற ஏக்கம் அவளுக்கு இருக்கும்.
அதுக்கும்தான் சமையலறை போய்ப் போடவேண்டிய நிலை. அதுவும் நடுவில் இணையவழி கூட்டம் நடக்கும்போது. எழ முடியாது.
இரண்டு தண்டவாளங்கள் ஒரே நேர்கோட்டில் போனால் ஆபத்து இல்லை. ஆனால் இங்கு ஒரே நேர்கோட்டில் செல்ல முடியாத நிலைமை. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லோரிடமும் கோபம்,இயலாமை அதிகம் தென்பட, 'இனியும் தாமதிக்கக் கூடாது' என்று ஒரு மனோதத்துவ நிபுணரை சந்தித்து, ஆலோசனையைக் கேட்க கிளம்பினாள்.
'இந்த அளவுக்கு மன அழுத்தம் உங்கள் உடல்நிலையைச் சீர்குலைக்கும் நிலையில் உள்ளது. குழந்தை ஐந்து வயசு வரைக்கும் நீங்க குடும்பத்தைக் கவனிக்கணும்ன்னு நினைச்சா, வேலையை ராஜிநாமா பண்ணுங்க? அப்பதான் உங்கள் உடல் நலம் மேம்படும். இது மாதிரி தம்பதிகளுக்கு அதுவும் இரண்டு பேரும் வேலைக்குப் போவதில் இந்த மாதிரி பிரச்னைகள் வரவே செய்யும். சில பேர் அதிர்ஷ்டசாலிகள். கணவனின் பெற்றோர் இல்லை. பெண்ணின் பெற்றோர் குழந்தையை கண்ணும் கருத்துமாகப் பாத்துப்பாங்க . அந்தக் கொடுப்பினை உங்களுக்கு இல்லை என்று உங்கள் பேச்சில் தெரிகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. வேலையை விட்டுட்டு குழந்தையைக் கவனிங்க... ஓய்வு எடுங்கள். யோகா, நடைப்பயிற்சி போங்க. ஆறு மாசம் கழிச்சு வாங்க? அப்புறம் நீங்க நல்ல குணம் அடையுங்க...' என்றார் மனோதத்துவ நிபுணர்.
ஆனாலும் ஹேமா முடிவு எடுப்பதில் நிறையவே தயக்கம் தெரிந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இரண்டு பேரும் கடன் பெற்று வாங்கிய புது ஃபிளாட்டுக்கான மாதாந்திரத் தவணை, கார் கடன், குழந்தைக்கான சேமிப்பு... எப்படிச் சமாளிப்பது? விஷ்ணுவின் சம்பளத்தில் இதெல்லாம் சாத்தியமா ? தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல், பத்து நாள்கள் இப்படியே போனது.
'நடப்பது நடக்கட்டும் . நம் அனுபவத்துக்கு, ஒரு வருடம் கழித்து, நல்ல வேலை கிடைக்கும் இந்த நிறுவனத்தில், பத்து வருடம் உழைத்து உள்ளோம். இதற்கு முன் நிறைய நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளோம். அந்த அனுபவம் கைக் கொடுக்கும்' என்று ஹேமா முடிவெடுத்து, புதிய ஒப்பந்தம் பெற பணிநிமித்தமாக பெங்களூரு சென்ற நிர்வாக இயக்குநருக்கு தன் நிலைமை பற்றி விளக்கி விட்டு, நோட்டீஸூம், மெயிலும் கொடுத்தாள்.
சிறிது நேரத்தில், 'உங்கள் ராஜிநாமா ஏற்கப்படவில்லை. நீங்கள் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறீர்கள். இது சம்பந்தமாக 'ஒன் டூ ஒன் மீட்டிங்' வரும் வெள்ளி அன்று 6 மணிக்கு உள்ளது. அதில் பங்கேற்கவும்' என்று பதில் வந்தது.
அன்று வெள்ளிக்கிழமை ஐ.டி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடன் 'ஒன் டூ ஒன் மீட்டிங்'.
'உங்கள் பிரச்னை நல்லாவே எனக்குப் புரியுது. நான் எப்படி உங்களுக்கு உதவுவது என்பது புரியலை. ஆனால் நான் உங்களை நிறுவனத்தில் இருந்து இழக்க விரும்பவில்லை. இந்த நிறுவனம் 10 வருஷத்துக்கு முன்னர் ஆரம்பித்தபோது, வெறும் அஞ்சு பேர்தான். இன்னிக்கு, 600 பேர் வேலையில் இருக்கக் காரணம் நீங்கள்தான்.
உங்கள் உழைப்பு. நிறைய பேரை வேலைக்கு ஆள் எடுத்து, இன்னிக்கு நிறுவனம் நல்ல நிலையில் இருக்கக் காரணம் நீங்கள்தான். அதையும் நான் மறக்கலை. நான் ஒரு முடிவை எடுக்கப் போறேன். அதை செயலாக்கம் செய்யப் போவது இதுதான் முதல் தடவை. அது என்னவென்று நான் இப்போ சொல்ல விரும்பலை.
ரொம்ப ரகசியம். ஆறு மாதம் கழிச்சு, என்ன என்பது உங்களுக்குத் தெரிய வரும். ஆறு மாதத்துக்கு நீங்கள் ஓய்வெடுங்கள். உங்கள் ராஜிநாமா ஏற்கப்படவில்லை. உங்கள் பணி அனுபவம் அடிப்படையில் ஆறு மாதம் உங்களுக்குப் பாதிச் சம்பளம் தர நான் முடிவு எடுத்துள்ளேன். மீண்டும் ஆறு மாதம் கழித்து நிச்சயம் நல்ல மனநிலையில் வருவீங்க. இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாய் இருங்க. வாழ்த்துகள்' என்றார்.
இங்கு நிர்வாக இயக்குநர் கோபிநாத் பற்றிச் சொல்லியாக வேண்டும். கனிவான பேச்சு. அதே சமயம் கோபிக்காமல் வேலையை முடிக்கச் சொல்வார். அமெரிக்காவிலும் ஒரு கிளை. மொத்தத்தில் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பது நிறைய பேருக்கு அனுகூலமாக இருந்தது என்கிற நிலைதான்.
விஷ்ணுவிடம், இந்த விஷயத்தைச் சொன்னபோது, அவனால் நம்ப முடியாமல், 'வேலை பார்க்காமல், ஆறு மாசம் பாதிச் சம்பளமா ? ஓ.கே. ஹேமா சந்தோஷமாய் இரு!' என்றான்.
மறுநாள் முதல் காலையில் 7மணிக்கு எழுந்தாள் ஹேமா. குழந்தையை 'பிளே ஸ்கூல்' கிளப்பி விட்டாள். காலை 10 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் சமையலை முடித்தாள். தானே போய் பிளே ஸ்கூல் சென்று குழந்தையை அழைத்து வந்தாள். குழந்தைக்கு ஊட்டி விட்டாள்.பின் தானும் ஓய்வு எடுத்தாள்.
'உடற்பயிற்சிக் கூடம் போக வேண்டாம்' என்று நினைத்து, தினமும் மாலை பூங்காவில் நடைப்பயிற்சி போய் வந்தாள். அதற்கு முன் குழந்தை தூங்கி எழுந்தவுடன், பால், பழங்கள் கொடுத்து விட்டு குழந்தையையும் பார்க் அழைத்துச் சென்றாள்.
பக்கத்து தெருவில் குழந்தையை பாட்டு வகுப்பு, அழைத்துப் போய் அவளும் சில கீர்த்தனைகள் கற்றாள். இரண்டு நாளைக்கு ஒருமுறை அலுவலகத்தில் தன் அணியில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தாள். தன்னுடைய வேலைக்கு, இன்னமும் என்ன ஆக்கபூர்வமாக, அதன் மேம்பாட்டுக்கு வேண்டிய பயிற்சிக்குப் போனாள்.
'என்ன ஹேமா? நீ தான் வேலையை ராஜிநாமா பண்ணிட்டே? பிறகு எதுக்குக் காசு செலவு பண்ணி பயிற்சிக்குப் போகணும்?' என்று விஷ்ணு கேட்க, 'அப்படி இல்ல விஷ்ணு இப்ப எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்குது. என் சேமிப்புப் பணத்திலிருந்து தானே போறேன். எனக்கும் இன்னும் நிறைய விஷயம் தெரிய வரும். காசு எப்ப வேணுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனா இது மாதிரி புது விஷயங்கள் கத்துக்க இதுதானே நல்ல சந்தர்ப்பம்' என்றாள் ஹேமா.
இப்போதெல்லாம் விஷ்ணுவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சரியா மூணு மணிக்கு அலுவலகம் கிளம்பி போகிறான். வரும்போது மட்டும் இரண்டு மணி நேரம் கூடுதல் ஆகிறது. அதைத் தவிர்க்க முடியாது என்கிற கருத்து இப்போது அவள் மனதில் வந்திருந்தது. அந்த வகையில் ஹேமா தன்னைப் பற்றிச் சரியான புரிதல் கொண்டதற்கு அவளுக்கு நன்றி சொன்னான்.
'விஷ்ணு.. இரண்டு நாள் லீவ் போடு! ;கொடைக்கானல் போயிட்டு வருவோம்' என்றால் ஹேமா.
'கொடைக்கானல்தானே போகலாம்.'
'எங்குத் தங்குவது? எந்த விடுதி நல்லது என்பதை ஆன்லைன் மூலம் பார்த்து வைக்கிறேன்.'
விஷ்ணுவும், ஹேமாவும் சுற்றுலா கிளம்பினர். ஆறு மாதத்தில் தன் உடம்புக்கு, பிசியோதெரபி, யோகா, பாட்டு வகுப்பு.. என மனம் அமைதியாக இருந்ததை உணர்ந்தாள். கோபம், மன உளைச்சல் குறைந்திருந்தது.
ஆறு மாதம் முடியும் நாள் வந்தது. அன்று நிர்வாக இயக்குநர் கோபிநாத்திடமிருந்து மெயில். தன்னை உடன் சந்திக்கும்படி கூறியிருந்தார்.
மற்ற ஊழியர்கள் வேறு அன்று முக்கிய கூட்டத்தில் இருந்தார்கள். விஷ்ணுவும் இருந்தான்.
கோபிநாத் பேச ஆரம்பித்து எடுத்த எடுப்பில், 'ஹேமா இனி இந்த நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு நிர்வாக அலுவலர் இல்லை. அவர் பார்த்த வேலைக்கு வேறு ஒருவரை நியமித்துள்ளேன்' என்றார்.
எல்லோருக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. ஒருவரையொருவர் பார்த்துகொண்டு, 'இவ்வளவு வருடம் உழைத்த ஹேமாவுக்கு இதுதான் பரிசா? இதைச் சொல்ல தான் இந்த அவசரக் கூட்டமா? ‘ என்று நினைத்தனர்.
'தன் முகத்தில் நிர்வாக இயக்குநர் கரியைப் பூசிவிட்டாரே? அன்று சொன்னது வேறு. இன்று சொல்வது வேறு' என்று அவமானமாகப் போனது ஹேமாவுக்கு. அழுகையும் வந்தது. அலுவலகம் முழுவதும் மெளனமாக இருந்தது.
கோபிநாத் தொடர்ந்த பேசும்போது, 'ஆறு மாதம் முன்பு, ஹேமா தனக்கு மன அழுத்தம் தாங்கவில்லை. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை;. குடும்பம், குழந்தையைக் கவனிக்க முடியலை; நான் வேலையை ராஜிநாமா பண்ண போகிறேன்' என்று என்னிடம் சொன்னபோது, நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
பத்து வருடம் இராப்பகலாக வேலை செய்து இந்த அளவுக்கு நிறுவனத்தை நல்ல நிலையில் கொண்டு வந்ததில், அவர் பங்கு அதிகம் என உங்களுக்குத் தெரியும். அதனால் ராஜிநாமா அப்படியே இருக்கட்டும்; உங்களுக்குப் பாதிச் சம்பளம் தரேன்; வீட்டில் இருந்து நல்ல ஓய்வு எடுத்து, உடல், மனம் இரண்டையும் நல்ல நிலையில் வையுங்க என்று சொல்லி அனுப்பினேன்.
அவர் விடுமுறையிலும் தன்னை மேம்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு என்று பயிற்சி, கருத்தரங்கு எனப் போய் வந்தார் அதுவும் தன் சொந்த செலவில் .அவ்வப்போது தன் துறை ஊழியர்களுடன் தொடர்பிலேயே இருந்தார்.
பணி மீதான அக்கறை கொண்ட அவரை நிறுவனத்தில் இருந்து இழக்க விரும்பவில்லை. இந்த ஆறு மாதத்தில், அவர் உடலும் உள்ளமும் புத்துணர்வு பெற்றதால், அவர் மீண்டும் வேலைக்கு வர சொல்லி, நான் தான் கூப்பிட்டேன். ஹேமா இனி இந்த நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு பிரிவில் பொது மேலாளராகப் பொறுப்பேற்க இருக்கிறார்' என்றார்.
எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. விடுமுறையில் போன ஹேமாவுக்குப் பதவி உயர்வுடன் திரும்பவும் வேலையா? ஹேமாவுக்கும் இது ஆச்சரியம் தான்.அவள் இதை எதிர்பார்க்கலை.
கோபிநாத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
'இவருக்கு மட்டுமல்ல இங்குள்ள மூத்த ஊழியர்கள், புதிய ஊழியர்கள் யாருக்கேனும் இது மாதிரி பிரச்னை வந்தால், அதைத் தீர்க்கும் விதமாக நிறுவனம் சார்பில் புதிய திட்டமாக 'சபாட்டிகல் விடுமுறை' என்ற திட்டத்தைப் புதிதாக அறிமுகம் செய்துள்ளேன். 'சப்பாட்டிகல்' என்கிற வார்த்தை லத்தீன், கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல். 'ரெஸ்ட்' அல்லது 'ப்ரேக் எடு' என்று அதற்கு அர்த்தம்.
அவரவர் தகுதிக்கேற்ப, மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரை முழுச் சம்பளத்துடன் அல்லது பாதிச் சம்பளத்துடன், சம்பளம் இன்றி என நிர்ணயம் செய்யப்படும். இதன் மூலம் இங்கு வேலை பார்ப்பவர்கள் தங்களுடைய மனம், ,உடல் உபாதை ஆகியவைகளை ஓய்வின் மூலம் சரி செய்து புத்துணர்ச்சியோடு, மீண்டும் வேலைக்கு வர ஒரு நல்ல வாய்ப்பு.
மேலைநாடுகளில் இது மாதிரியான திட்டம் அமல் படுத்தி வரும் நிலையைப் பார்த்து, நானும் ஏன் இங்கு அமல்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தபோது, அந்தச் சந்தர்ப்பம் ஹேமா மூலம் கிடைத்தது. தற்போது இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஓய்வுக் கால விடுப்பு வழங்க சட்டபூர்வ அனுமதி தேவை இல்லை.
பல முற்போக்கான நிறுவனங்கள் ஊழியர்களின் திறமையைத் தக்க வைக்கவும், ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கவும், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்தவும், ஒரு வழியாக ஓய்வுக்கால விடுப்புக் கொள்கைகளை அதாவது 'சப்பாட்டிகல் லீவ்' திட்டத்தை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. சப்பாட்டிகல் லீவ் கொள்கைகளின் நன்மைகள் ஏராளம். முதலாவதாக, இது ஊழியர்களுக்கு ரீசார்ஜ் மற்றும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்.
கொழுந்து விட்டு எரியும் பிரச்னையின் அபாயத்தைக் குறைக்கும். பணியாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும். இது நிறுவனத்திலேயே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வாய்ப்பை வழங்கும்.
இது பணியாளர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள், தொழில்முறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும், அவர்களின் திறன்கள் மற்றும் அறிவுத் தளத்தை அதிகரிக்கிறது. மேல் கல்வியைத் தொடர அனுமதிக்கிறது, தங்கள் பணியாளர்களை மேம்படுத்த அல்லது போட்டி சந்தையில் திறமையைத் தக்கவைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இது குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும்' என்றார் கோபிநாத்.
அவரது இந்தச் செயலைக்கண்டு , எல்லோரும் பாராட்டிய அதே நேரத்தில் ஹேமா பேச ஆரம்பித்தார்.
'ஐ. டி. நிறுவனங்களில் இது மாதிரியான சப்பாட்டிகல் லீவ் திட்டத்தை முதல் முதலாக அமல்படுத்திய மாதிரி மற்ற நிறுவனங்கள் முன் வரவேண்டும் . அது தான் தொழிலாளர்கள் மீது காட்டும் உண்மையான அக்கறை. கோபிநாத் சாருக்கு மீண்டும் என் நன்றி' என்றாள் ஹேமா.
இனி அந்த நிறுவனத்தில் பணியாளர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதால் உற்பத்தித் திறனும் அதிகமாகும், என்கிற நம்பிக்கையானது நிர்வாக இயக்குநர் கோபிநாத்தின் மனதில் பிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.