வந்துட்டாரு குபேரர்

வெகு சில இடங்களில்தான் குபேரருக்கு சந்நிதிகள் உண்டு.
வந்துட்டாரு குபேரர்
Published on
Updated on
2 min read

வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், நல்ல ஆரோக்கியம் நிலைத்து இருக்க வேண்டுமெனில் குபேரரை வழிபடலாம் என்பார்கள். குபேரர் புகைப்படங்களை வீட்டில் வைப்போரும் உண்டு. குபேரர் கோயில்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கோயில்களில் வெகு சில இடங்களில்தான் குபேரருக்கு சந்நிதிகள் உண்டு. ஆனால், வியத்நாமில் குபேரர் சிலைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. அங்கிருந்து சிலையை வாங்கிவந்து, குடியாத்தத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார் 3231 ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநரும், குடியாத்தம் கம்பன் கழக நிறுவனருமான ஜே.கே.என்.பழனி.

அவரிடம் பேசியபோது:

''செல்வத்தை அதிகரிக்கவும் குறையாமல் வைத்திருக்கவும் செல்வத்தின் அதிபதியான குபேரரை வணங்கினால் நல்லது. வாஸ்து முறைகளைப் பின்பற்றி, வீட்டைக் கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும். மத நம்பிக்கையின்படி, லட்சுமி, குபேரரின் அருளை பெற்றவர்கள் பணக்காரராவதை யாராலும் தடுக்க முடியாது. வாஸ்துவில், குபேர மூலையில்தான் பணப் பெட்டியை வைக்க வேண்டும் என்பர்.

'லட்சுமி, குபேரர், விநாயகர் சிலைகளை பூஜை அறையில் வைக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு மூலையில் மங்களக் கலசத்தை வைக்கலாம். வெள்ளைக் கோதுமையை மஞ்சள் அல்லது குங்குமப்பூவில் ஊறவைத்து உலர்த்த வேண்டும்..' என்றெல்லாம் குபேரரை அருள்பெற வழிகளாகக் கூறுவர். இத்தகைய சிறப்புவாய்ந்த குபேரரை வழிபட மக்கள் பெருமளவு விரும்புகின்றனர். ஆனால், கோயில்கள் குறைவு. வெகு சில கோயில்களிலேயே குபேரருக்கு சந்நிதிகள் உள்ளன.

இந்த நிலையில், குபேரரை வழிபட வேண்டுவோரின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது.

மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் குபேரர் வழிபாடுகள் நடக்கும்.

வியத்நாமில் குபேரர் சிலைகள் காணும் இடங்களில் எல்லாம் உண்டு. அங்கு குபேரர் சிலைகள் பளிங்கு கற்களில் இருப்பது உண்டு. அங்கிருந்து மூன்றரை அடி உயரமான குபேரர் சிலையை ரூ.4 லட்சத்துக்கு வாங்கினேன். அங்கிருந்து கப்பலில் கொண்டு வர ஏற்பாடுகளைச் செய்தேன். சென்னை துறைமுகத்துக்கு வந்தவுடன் அங்கிருந்து கண்டெய்னர் லாரியில் சிலையை குடியாத்தத்துக்கு கொண்டு வந்தேன்.

குடியாத்தம் நகரமும், சுற்றுப்புறப் பகுதி மக்களும் வாழ்வில் வளம் பெறும் வகையில், வாஸ்துமுறைப்படி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட நியூ பார்க் டவுனுக்கு அருகேயுள்ள 'குபேர வனம்' மனைப் பிரிவில் அமைத்துள்ளேன். இந்தச் சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடுகளையும் நடத்திவருகிறேன். இந்தச் சிலையை யாரும் வந்து எப்போதும் வழிபடலாம்'' என்கிறார் பழனி.

-தி.நந்தகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com