நான் என் அப்பா, அம்மா கூறியதுபோல், பல வருடங்களாக ஏகாதசி அன்று விரதமிருந்து துவாதசி அன்று உணவுடன் அகத்திக்கீரையை சமைத்து உண்ணுகிறேன். ஆரோக்கியமாகவும் உணர்கிறேன். அகத்திக்கீரையை எதற்காக இப்படி சாப்பிட வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. இதைப் பற்றி மருத்துவக் குறிப்புகள் உள்ளனவா?
-அன்னபூரணி, தஞ்சாவூர்.
அகத்திக்கீரையானது அகத்தி, செவ்வகத்தி என இரு வகைப்படும். வெள்ளைப்பூவுடையது அகத்தி. செந்நிறம் பூவுடையது செவ்வகத்தி. இதைத் தவிர, சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி (பேயகத்தி என மற்ற வகைகள் உண்டு. அவைகள் சீமை அகத்தி மருந்தாகப் பெரிதும் பயன்படும். உணவாக அகத்தியின் இலை பயன்படுகிறது. பூ, பட்டை, வேர் மருந்தாகும். எல்லாவற்றுக்கும் கசப்புச் சுவை அதிகம். இடுமருந்து என்ற விஷத்தைப் போல திடீரென கொல்லாமல், நாளாவட்டத்தில் சிறிது, சிறிதாக உடலைத் தேய்த்துக் கொல்லும். இதை உணவிலும், பானத்திலும் சேர்த்தும் வசிய மருந்தாக்கியும் கொடுப்பர். இதனால் ஏற்படும் வாந்தி, வயிற்று வலி, உணவு செரியாமை முதலியவை வேறு எந்தச் சிகிச்சையிலும் குணம் ஏற்படாது. அந்த இடுவிஷத்தைப் போக்கத்தக்க விஷமுறிப்புப் பச்சிலை அகத்திக்கீரையாகும். உணவுப் பண்டமாக அடிக்கடி இதை சேர்த்து வர வயிற்றுலுள்ள விஷம் நீங்கிவிடும்.
ஏகாதசியன்று உபவாச விரதம் இருப்பவர்களுக்கு வயிற்றில் சரியான நேரத்தில் உணவு வந்து சேராமையால், அந்த அந்த நேரத்துக்குத் தயாராகக் காத்தி நிற்கும் ஜீரண நீர் சுரந்து அங்கேயே சோர்ந்து இரைப்பையில் கொதிப்பு மிகுந்து காணும் அந்த நிலையில் காலம் தவறி மறுபடி உண்ணும்போது அந்த உணவு பித்த மிகுதியால் ஜீரணமாகாது. பருக்கை, பருக்கையாக விரைத்துப் பொறுமல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி முதலியவைகளை உண்டாக்கலாம்.
அதுபோன்ற ஜீரணக் கெடுதி ஏற்படாமலிருக்கவே நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவ்விரண்டு துவர்ப்புக் கசப்புமிக்க உணவுப் பொருள்கள் உபயோகிக்கப் பெறுகின்றன. பித்தத்தின் கெடுதியை மாற்றித் தெளிவுறச் செய்து இரைப்பை குடல் வேக்காளத்தைக் குறைத்து உணவைச் செரிக்க இவை உதவுகின்றன.
கீரைகளில் பெரும்பாலானது வேகவைத்தால், கூழாக மசிந்துவிடும். வெளிநெருப்பில் வெந்து உருமாறாதவை கூட வயிற்று நெருப்பில் வெந்து கூழாகி உருத் தெரியாமல் போகும். அகத்திக் கீரை இதற்கு விதிவிலக்கு. எத்தனை வெந்தாலும் உருச்சிதையாது. சிலருக்கு மலத்துடன் தன்னுருவிலேயே வெளியாகும். அத்தகைய கடின உருக்கொண்டது. இரைப்பையில் உள்ள அதிக பித்தச் சுரப்பைத் தன்பாலிர்த்து அப்படியே வெளியாக்கிவிடும். அதனால் பசி உபவாசம் இருந்தவர்கள் பிறகு முதல் உணவின்போது இதை முக்கியமாகச் சேர்த்துக் கொள்வர். தினமும் இதைச் சுண்டிச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, வாயுத் தொல்லை ஏற்படும் என்பதால், நீங்கள் குறிப்பிடுவதுபோலச் சாப்பிடுவது உகந்தது. உபவாசம் இல்லாதவர்களும், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம். அல்லது நல்ல பசியும் ஓரிருவேளை உணவேற்காமலும் இருந்தால் இதை உண்பது நல்லது. இதை ஜீரணம் செய்யும் சக்தி இரைப்பைக்கு எப்போதும் இருக்காது.
அகத்திக்கீரையை மருந்தாக உபயோகிக்கும் நிலையும் உள்ளது. இதன் இலையை ஆய்ந்து ஒரு பிடியளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, பாதியாகக் காய்ச்சி வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டு வர பித்தம் மிகுந்து வலியுடன் சாப்பிட்ட சாதம் ஜீரணமாகாமல் விதை, விதையாக விரைத்து வாந்தியாகி உண்டாகும் வயிற்றுவலி நிற்கும். ஜீரணம் நன்றாக ஆகும். பசி சரியாகும். பித்தத்தினால் ஏற்படும் வயிற்றுவலியில் பித்தத்தை வெளியாக்கி இரைப்பையில் வேக்காளத்தைக் குறைக்க வல்லது.
வெயிலில் அதிகம் அலைவது, அடுப்படியில் அதிக வேலை, புகையிலை, சுருட்டு அதிகம் குடித்தல் ஆகியவற்றால் ஏற்படும் இரைப்பைக் குடல் வேக்காளம், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், வெட்டை போன்ற உபாதைகளைக் குறைக்க இலையைச் சமைத்துண்பது போல, இதன் வெண்நிறப்பூவையும் சமைத்து உண்பது வழக்கம். வயிற்றிலுள்ள கிருமிகளை வெளியேற்ற இலையையும், பூவையும் கஷாயமிட்டுச் சாப்பிடலாம். நன்றி: ஆரோக்கியம் 1967
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.