பேல் பூரி
கண்டது
(குடந்தையைச் சுற்றியுள்ள வித்தியாசமான திருநாமங்களைக் கொண்ட விநாயகர்கள்...)
'பிணம் மீட்ட விநாயகர், வெள்ளந்தாங்கி விநாயகர், இடிதாங்கி விநாயகர், வட்டிப்பிள்ளையார், ஊனை தீர்த்த விநாயகர், முக்குறுணிப் பிள்ளையார், வலஞ்சுழி விநாயகர், வெள்ளெருக்கு விநாயகர், தேனுறையும் விநாயகர், கரும்பாயிரம் கொண்ட பிள்ளையார்.''
-சரவணபவன் ராஜாமணி, தஞ்சாவூர்.
(மதுரை- சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஊரின் பெயர்)
'பூவந்தி''
(வேதாரண்யம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஊரின் பெயர்?
'பூவைத் தேடி''
-சுப்பு வேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்.
(மௌலிவாக்கத்தில் உள்ள இரு வேறு ஆட்டோக்களில் எழுதியிருந்தது)
'பெற்றோருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுங்கள். எதற்காகவும் பெற்றோரை விட்டு விடாதீர்கள்.''
'உன் வலியை நீ உணர முடிந்ததால் நீ உயிரோடிருக்கிறாய். மற்றவரின் வலியை உணர முடிந்தால் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்''
-கு.கோப்பெருந்தேவி, சென்னை-125.
கேட்டது
(தேனி மேல்மங்கலம் கடைவீதியில் இருவர்...?)
'மச்சான்... நான் டூவீலரை அதிவேகமா ஓட்டிட்டு போற மாதிரி அடிக்கடி கனவா வருது.. ரொம்ப பயமா இருக்கு...''
'ஹெல்மெட் போட்டுட்டு படு மாப்ளே.. பயமில்லாமல் தூங்கலாம்...''
-சி.செல்லமுத்து, மேலமங்கலம்.
(சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இரு மாணவிகள் பேசியது)
'உன்னோட புதுச் சுடிதார் அடிக்கிற கலரில் இருக்குதே...?''
'ஏன் உனக்கு வலிக்குதா..?''
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
(திருச்சி பூங்கா ஒன்றில் இருவர் பேசியது)
'பழிக்குப் பழி வாங்கிட்டாங்க..?''
'யாரை சொல்றீங்க?''
'வீட்டு வந்த விருந்தாளிகளைத்தான்...''
'ஏன்..?''
'போன கோடை லீவுக்கு அவங்க வீட்டுக்குப் போனோம்.. இந்தக் கோடைக்கு அவங்க வந்துட்டாங்க..?''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
சேர்ந்து வாழ். சார்ந்து வாழாதே..
-சாத்தை மயில், திருநெல்வேலி.
மைக்ரோ கதை
அரசர் தனது படைவீரர்கள் எவ்வளவு தைரியமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார். எனவே, படைவீரர்களை அழைத்து, 'நீங்கள் உங்கள் மனைவிக்குப் பயப்படுபவர்கள் இடது பக்கத்திலும், பயப்படாதவர்கள் வலது பக்கத்திலும் நில்லுங்கள்'' என்றார்.
ஒரு படை
வீரரைத் தவிர, மற்றவர்கள் இடது பக்கத்திலும் நின்றனர். வலது பக்கத்தில் நின்ற அந்த
ஒருவனை ஆச்சரியத்துடன் பார்த்த அரசர், 'உனக்கு உன் மனைவியிடம் பயம் இல்லையா?'' என்றார்.
அதற்கு அவனோ, 'எல்லோரும் ஒரு பக்கமாக நின்றால், நீ
எதிர்ப்பக்கத்தில் போய் நில் என்று மனைவி கூறினாள்'' என்றான் அவன்.
-எம்.ரவீந்திரன், திருமருகல்.
எஸ்எம்எஸ்
மனைவியிடம் தோற்றுப் போ.. வெற்றி உனக்கே..
-வீர.செல்வம், பந்தநல்லூர்.
அப்படீங்களா!
வானூர்தியைப் போல் வானில் பறக்கும் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. போலந்தைச் சேர்ந்த வோலொநட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஏர்பைக்கின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, ட்ரோன் தொழில்நுட்பத்துடன் பறக்கும் பைக்குகள், கார்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், முதல் முறையாக விமானங்களுக்குப் பயன்படுத்தப்
படும் எரிபொருளைக் கொண்டு குறைவான எடையில் இந்த ஏர்பைக் உருவாக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 200 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ஏர்பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.
நிலத்தில் சக்கரம் இல்லாத மோட்டார் பைக்கை போல் இருக்கும் இந்த ஏர்பைக், இருந்த இடத்திலியே பறக்கிறது. சாதாரண பைக்கை போல் வானில் வட்டமிட்டு காடுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து செல்வது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. சாதாரண பைக்கைவிட ஏழு மடங்கு எடை குறைந்ததாக கார்பன் பைபர் பொருள்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஏர்பைக் சந்தைக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
'ஸ்டார் வார்ஸ்' படத்தில் வருவதைப்போலவே பறக்கும் இந்த ஏர்பைக், மாற்று உலக கனவை பூலோகத்திலேயே நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
-அ.சர்ப்ராஸ்
பழசு.. ஆனா மவுசு...
பழையப் பொருள்களில், வீட்டு புறக்கடையில் அழகிய பூந்தோட்டத்தை அமைத்து, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் பொறியியல் பட்டதாரி இளைஞர் ராம்குமார்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்தஅவரிடம் பேசியபோது:
'இளைஞர்கள் தங்கள் பணியிலும், தொழிலிலும் தங்களது மனம் விரும்பும் செயல்களில் ஆர்வத்தோடு களமிறங்கி விடுகின்றனர்.
அண்மைக்காலமாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு, பாரம்பரிய ஆடை அணிதல், இசைக்கருவிகள் வாசிப்பு, சமூக ஊடகங்களில் விதவிதமான பதிவுகளில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த வகையில், புதுமையாகச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன்படி, பயன்படாத நெகிழிப் பொருள்களில் அரிய வகை, சிறிய வகை பூச்செடிகளை வளர்த்து புறக்கடையில் அழகிய பூந்தோட்டத்தைப் பராமரிக்கத் திட்டமிட்டேன். அதில் வெற்றியும் கண்டுள்ளேன்.
சிறுவயதில் இருந்து தொடர்ந்து வரும் பூச்செடிகள் வளர்ப்பில் ஆர்வம் குறையவில்லை. சேலத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் நடத்தப்பட்ட வீட்டுத்தோட்டங்கள் அமைப்பு பூச்செடிகள் வளர்ப்புக் கலையில் ஒரு மாதப் பயிற்சியைப் பெற்றேன். இதையடுத்து, பயன்படாத உடைந்த நெகிழித் தொட்டிகள், குழாய்கள், மண் பானைகள், ஜாடிகளில் எங்களது வீட்டுக்கு முன்பாகவும், புறக்கடையிலும் அரிய வகை சிறிய வகை பூச்செடிகளை தேடிப் பிடித்து ஓட்டுக்கூரை வீட்டுக்கு முன்பும், புறக்கடையிலும் பூந்தோட்டம் அமைத்து ஐந்து ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன்.
குறிப்பாக, டேபிள் ரோஸ் என அழைக்கப்படும் சிறு வகை பூக்கும் தாவரத்தில் கிரீமி, ரெட்கிஸ், கிங் ரேன்சம், மிஸ் ரோஸ் ஆகிய பூச்செடிகளையும் வளர்த்து வருகிறேன். பூச்செடிகள் வளர்ப்பதற்கு எனது தாய் ரதியும் உதவி ஊக்கமளித்து வருகிறார். இந்தப் பூச்செடிகள் எனக்கு மட்டுமல்ல காண்போர் அனைவருக்கும் மன மகிழ்வையும் புத்துணர்வையும் தருகின்றன'' என்றார்.
தற்போது சென்னையில் ஒரு பயிற்சி மையத்தில் குடிமைப் பணி தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகிறேன். மேலும், அந்தப் பயிற்சி மையத்திலேயே பகுதிநேரமாகவும் பணிபுரிந்து வருகிறேன். இருப்பினும், ஊருக்கு வரும்போதெல்லாம் அதைப் பராமரிக்கிறேன். சென்னையில் இருக்கும்போதும் அவற்றின் மீது கவனம் செலுத்துவேன். காண்போர் அனைவரும் பாராட்டு தெரிவித்துச் செல்கின்றனர்'' என்கிறார் ராம்குமார்.
-பி.பெரியார்மன்னன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.