தக் லைஃப் கதை - கமல் பகிர்ந்த செய்தி!
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜூன் 5-ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் உலகம் எங்கிலும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. தக் லைஃப் திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் முதல் நாள் வணிகம் பெரியளவிலேயே நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் படத்தின் கால அளவு 2.45 மணி நேரம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள கமல்ஹாசன் ' தக் லைஃப் கதையின் ஒரு வடிவத்தை நான் எழுதியிருந்தேன். வாழ்க்கையின் ஒரு அங்கமே மரணம். ஒரு வாக்கியத்துக்கு முற்றுப்புள்ளி மாதிரிதான் அது.
சரியான இடத்தில் அது வைக்கப்படாவிட்டால், வழவழ கொள கொள மாதிரி ஆகி விடும். அப்படித்தான் இந்தக் கதை எனக்குள் வந்ததது. மரணத்தைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என நம்புபவரின் கதையாக அது இருந்தது. அதை மணிரத்னத்திடம் சொன்ன போது அந்த யோசனை அவரை கவர்ந்தது. பின், அவர் ஒரு வடிவத்தை எழுதினார்.
அதுதான் தக் லைஃப்பாக உருவாகியுள்ளது. 'நாயகன்' படத்துக்குப் பின் மணிரத்னத்துடன் வேலை செய்வது சவால்தான். அவர் தன் பணியில் மிக உச்சத்தை அடைந்திருக்கிறார். சிம்பு, அசோக் செல்வன் மாதிரியான அடுத்த தலைமுறை நடிகர்களுடன் இணைந்து வேலை செய்ததும் புது அனுபவம்'' என்றார் கமல். கதை உருவான இந்த தகவல் படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் உயர்த்தியுள்ளது.
விஜயகாந்த் குறித்து சுவாரசியம் - ஏ.ஆர்.முருகதாஸ்!
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கும் 'படை தலைவன்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பலரும் விஜயகாந்த் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். ஸ்டண்ட் காட்சிகளில் விஜயகாந்த் டூப் விரும்பமாட்டார் என அவரை வைத்து படமெடுத்த பல இயக்குநர்களும் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் ஏ.ஆர்.முருகதாஸூம் அது தொடர்பாக பேசியிருக்கிறார்.
பேச தொடங்கிய முருகதாஸ், ' 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தின் ஹெலிகாப்டர் காட்சியை எடுக்கும்போது நானும் அப்போது படப்பிடிப்பு தளத்தின் கீழேதான் இருந்தேன். அன்றைக்கு பிரேமலதா அண்ணியும், பசங்க ரெண்டு பேரும் அம்பாசிடர் காரில் வந்திருந்தாங்க. எனக்கு இன்றைக்கு வரைக்கும் அது நினைவுல இருக்கு. ஆனா, ஹெலிகாப்டர் காட்சியை எடுக்கும் போது அவங்க இல்ல. ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் அந்த காட்சிக்கு டூப் பயன்படுத்தலாம்னு கேப்டன்கிட்ட சொன்னாரு.
ஆனால், விஜயகாந்த் 'டூப் வேணாம். நானே பண்றேன். அவனுக்கு மட்டும் என்ன ரெண்டு உயிரா இருக்கு' அண்ணிக்கிட்ட மட்டும் டூப்னு சொல்லிடுங்க'னு சொன்னாரு. ஆனா, மறுபடியும் மாஸ்டர் டூப் பயன்படுத்தலாம்னு பரிந்துரை செய்தாரு. அப்போ 'டூப் போடுறவனுக்கும் ஒரு உயிர்தானயா இருக்கு! அவனுக்கு மட்டும் என்ன ரெண்டு உயிரா இருக்கு'னு விஜயகாந்த் திரும்பவும் சொன்னாரு.
அந்த வார்த்தையைக் கேட்டதும் அவர் மேல எனக்கு பெரிய மரியாதை வந்திடுச்சு. பல நடிகர்கள் டூப், கிராபிக்ஸ் பயன்படுத்திட்டு அந்தக் காட்சியை நான்தான் பண்ணினேன்னு சொல்வாங்க. ஆனா, டூப் இல்லாமல் நடிச்சிட்டு அந்தக் காட்சியில டூப்தான் நடிச்சான்னு வெளில வந்து சொன்ன பெரிய மனுஷனை அப்போதான் நான் பார்த்தேன்.' என்றார்.
விஷால் - சாய் தன்ஷிகா காதல் திருமணம்!
நடிகை சாய் தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார் விஷால். கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற 'யோகி டா' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை விஷாலும், சாய் தன்ஷிகாவும் அறிவித்திருக்கிறார்கள். விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் சாய் தன்ஷிகா பேசுகையில், 'இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். 20 வருஷமா இந்த ஒரு நாளுக்காக காத்திருந்தோம். 15 வருடமாக நாம் நண்பர்கள். இனியும் நாம் நண்பர்களாகவே இருப்போம் என்று சொல்லியிருந்தோம். 15 ஆண்டுகளாக நண்பர்களாக, உறவினர்களாக இருந்தோம். ஆம், நாங்க ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.' எனக் கூறினார்.
'நாங்க இருவரும் கண்டிப்பாக வடிவேலு - சரளா அம்மா மாதிரி இருக்கமாட்டோம். (சினிமாவில் வரும் அடி தடி தம்பதிகளாக) எங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் இருக்கு. இந்தப் படத்தோட ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்கும் போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கு. அவங்களோட அப்பாவும் இங்கதான் இருக்கிறார். அவர் ஆசிர்வாதத்துடன் இங்கே அறிவிக்கிறேன்.
இதைத் தவிர எங்க ரெண்டு பேரைப் பத்தி பேசி இந்த நிகழ்வைக் கெடுக்க விரும்பல. திருமணத்தில் சந்திப்போம்' எனக் கூறினார். நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்து திறப்பு விழாவுக்குப் பின்னர்தான் திருமணம் செய்வேன் என்று அறிவித்திருந்தார் விஷால். இந்நிலையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடிகர் சங்கக் கட்டடம் திறக்கப்படவுள்ள நிலையில், தனது திருமணச் செய்தியை அறிவித்திருக்கிறார் விஷால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.