அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களின் பள்ளிகள், கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. மாணவர்களைவிட மாணவிகள்தான் அதிக மதிப்பெண்களைப் பெற்று, அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆச்சரியமான, வித்தியாசமான, நெஞ்சைத் தொடும் தேர்வு முடிவுகளுக்கும் பஞ்சமில்லை.
அவற்றில் சில:
அமில வீச்சால் பாதிக்கப்பட்ட மாணவி சிறப்பிடம் குடும்பத் தகராறால், பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் கோபத்தில் அமிலத்தை அந்த மூன்று வயது சிறுமியின் முகத்தில் வீச முகம் வெந்து கண்கள் பார்வையை இழந்தாள். மனதை உலுக்கும் இந்தச் சம்பவம் 2011-இல் அரியாணாவில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் புதானா கிராமத்தில் நிகழ்ந்தது. அந்தச் சிறுமி கஃபி, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில், முதலிடம் பெற்றுள்ளார்.
'கண் பார்வை இழந்ததிலிருந்தே வாழ்க்கையில் பல சோதனைகளை நான் கடக்க வேண்டி வந்தது. எல்லாவற்றுக்கும் பெற்றோரைச் சார்ந்து இருக்க வேண்டிவந்தது. பெண்ணாகப் பிறந்துவிட்டேனே! பார்வை போய் விட்டது. பெற்றோர் என்னை சண்டிகரில் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்கு குரல் புத்தகங்கள் மூலமாக கல்வி எனக்கு கற்பிக்கப்பட்டது.
எனது கல்விக் கண் திறந்தது. எனது எதிர்கால கனவு, தில்லி பல்கலைக்கழகத்தில் 'அரசியல் அறிவியலில்' பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான். நுழைவுத் தேர்வை எழுதியுள்ளேன். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். காவல் துறையால் அவர்களை சட்டத்துக்கு முன்பு கொண்டு செல்ல இயலவில்லை. எனக்கு நியாயம் கிடைக்கவில்லை'' என்கிறார் பதினேழு வயதான கஃபி.
தேர்வில் தோல்வி: கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்...
தங்கள் குழந்தைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றால், பெற்றோர் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடுவார்கள். அதேசமயம், குழந்தைகள் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், கண்டிப்பார்கள். திட்டுவார்கள். அடிக்கவும்கூட செய்வார்கள். இதுதான் நடைமுறை.
இந்த நடைமுறையிலிருந்து வேறுபட்டு, பெற்றோர் தங்கள் மகன் தேர்வில் தேர்ச்சி அடையாததை கேக் வெட்டி, அதுவும் இரண்டு கேக்குகளை வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என்றால் வியப்புதான். கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட பாகல்கோட்டைச் சேர்ந்தவர் அபிஷேக் சோழச்சகுட்டா, அந்தப் பகுதியில் உள்ள ஆங்கில வழிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. அபிஷேக் அறுநூற்றுக்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, எழுதிய 6 பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை.
அபிஷேக் தோல்வியில் துவண்டுவிடாமல் இருக்க அவரை உற்சாகப்படுத்தவும் ஏமாற்றத்திலிருந்து அபிஷேக்கை மீட்கவும் அபிஷேக் பெற்ற மதிப்பெண்களை கேக்கில் எழுதி, இரண்டு கேக் வெட்டி கொண்டாடி ஊக்கப்படுத்தியுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தில் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
அவர்கள் சொன்ன ஊக்க வாக்கியம், 'அபிஷேக்.... நீ தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம். வாழ்க்கையில் தோல்வியடையவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை தேர்வில் வெற்றிபெறலாம்... கவலைப்படாதே...'' என்பதுதான்!
தேர்வில் தேர்ச்சி பெறாததை, வாழ்க்கையின் ஒரு பகுதியாக, ஜாலியாக எடுத்துக் கொண்ட பெற்றோரைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவுகள் தொடர்கின்றன.
இரட்டையர்களின் சாதனை...
பல்கலைக்கழகத் தரவரிசையாலும்கூட லிஸா மரியம் ஜார்ஜ், லியா த்ரீஷா ஜார்ஜ் ஆகிய இரட்டை சகோதரிகளை பிரித்துப் பார்க்க முடியவில்லை.
கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.ஏ. ஆங்கிலம், இலக்கிய பாடத்தில் இருவரும் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இருவரும் மழலையர் பள்ளியிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் கல்வி கற்றனர். அனைத்துத் தேர்வுகளில் ஏறக்குறைய ஒரே மதிப்பெண்களைப் பெற்றுவந்துள்ளனர். 10 , 12 வகுப்புகளில் கூட 'ஏ' கிரேடு பெற்றுள்ளனர்.
'அம்மா மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. அவர் வீட்டில் பராமரிக்கும் சிறிய நூலகம் காரணமாக, எங்களுக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. நிறைய நாவல்களை வாசிப்போம். அரசு வேலையைப் பெறுவதுதான் எங்கள் லட்சியம். முதுகலைப் பட்டப்படிப்பில் ஒரே கல்லூரியில் சேருவோம். இரட்டையர்களாக இருப்பதில் எதிர்மறைகளைவிட அதிக நேர்மறைகள் இருக்கின்றன. ஒரே மாதிரியான அரசு வேலையில் அமர விருப்பம். புகைப்படத்தில் இருவரின் பெயர்களையும் தவறாகக் குறிப்பிடுவார்கள். நேரில் அழைக்கும்போதும் பெயரை மாற்றி அழைப்பார்கள். வேடிக்கையாக இருக்கும்'' என்கிறார்கள் லிஸா, லியா.
ஒரே மதிப்பெண்களைப் பெற்ற இரட்டையர்கள் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், இரட்டையர்களான கவிதா, கனிஹா ஆகியோர் தலா 474 மதிப்பெண்களை எடுத்துள்ளனர். கணக்கு பாடத்தில் இருவரும் தலா 94 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர்களான தனியார் பள்ளியில் பயிலும் இரட்டையர்கள் மாயாஸ்ரீ, மகாஸ்ரீ ஆகிய இருவரும் தலா 475 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மதுரை கீழையூறைச் சேர்ந்த ராமநாதன், லட்சுமணன் ஆகிய இரட்டையர்கள் தலா 459 மதிப்பெண்களையும், தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி ராஜிவ் நகரைச் சேர்ந்த ஹரிகரன், செந்தில் நாதன் ஆகிய இரட்டை சகோதரர்கள் தலா 457 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட மேட்டுப்பட்டி தாதனூரியைச் சேர்ந்த இதழ்யா - இதழ்யாதினி ஆகிய இருவரும் தலா 475 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட வாணியம்பாடியை சேர்ந்த ஹரிதா, ஹரிணி ஆகிய இரட்டையர்கள் தலா 573 மதிப்பெண்களுடன் அசத்தியுள்ளனர். கோவையை சேர்ந்த அகல்யா - அக்ஷயா இரட்டையர்கள் தலா 555 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழில் சாதித்த பிகார் மாணவி
பிகாரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியின் மகள் ஜியா குமாரி. சென்னையில் அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு 93 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார். ஆங்கிலம், சமூக அறிவியலில் தலா 99 மதிப்பெண்களையும், மொத்தத்தில் 500-க்கு 467 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். அவர் சரியான தமிழ் உச்சரிப்புடன் சரளமாகத் தமிழ் பேசுவது ஆச்சரியமாக உள்ளது.
தனது சாதனை குறித்து ஜியாகுமாரி கூறியது:
'எனது தந்தை 17 வருடங்களுக்கு முன் வேலை தேடி சென்னைக்கு வந்தார். கட்டுமான வேலை செய்து வருகிறார். இன்றைக்கும் அவருக்கு சரிவர தமிழ் பேச வராது. எங்களை அரசுப் பள்ளியில் சேர்த்தார். சென்னை கௌல் பஜார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தோழிகள், ஆசிரியர்களுடன் தமிழில் பேசிப் பழகியதால் தமிழை எளிதாகப் பேசக் கற்றேன். தொடக்கத்தில் ஹிந்தியைவிட தமிழ் பேசப் படிக்க, எழுத கடினமாக இருந்தது. நாளடையிவ் தமிழை புரிந்து கொள்ளத் தொடங்கியதும், தமிழ் எழுதப் பேசுவது எளிதாகிப் போனது.
பல்லாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 'பயோ-மேக்ஸ்' பிரிவை படிக்க விரும்புகிறேன். 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும். மூத்த சகோதரி 12-ஆம் வகுப்பில் கணிதத்துடன் கணினி அறிவியல் படித்து வருகிறார். தங்கை ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறாள். 5 பேர் கொண்டது எங்கள் குடும்பம். வறுமை காரணமாக ஒரு அறை உள்ள வீட்டில் வசிக்கிறோம். அப்பா மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கிறார்.
அரசுப் பள்ளியின், இலவசக் கல்வி, இலவச உணவு, இலவச சீருடை, இலவச காலணி, இலவச புத்தகங்கள் காரணமாக நாங்கள் மூன்று பேரும் தொடர்ந்து படிக்க முடிந்தது. 11 , 12-ஆம் வகுப்புகளிலும் தமிழைத் தொடர்ந்து படிப்பேன். வீட்டில் ஹிந்தி பேசினாலும், சகோதரிகள் மூன்று பேரும் வெளியே தமிழில்தான் பேசிக் கொள்வோம். தமிழ் எங்களுக்குத் தாய் மொழியாகிவிட்டது'' என்கிறார் ஜியா குமாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.