குழந்தைகள் குறைந்தபட்சம் இரண்டு ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கும் தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடும் நிலையில், குழந்தையின் ஒரு நேரப் பசியை ஒரு ரூபாய்க்குப் போக்கி வருகிறார் எழுபது வயதான மூதாட்டி ராஜம்மாள்.
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட சங்கரன்கோவில் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அவர், உழைக்காமல் சும்மா இருக்க முடியாது?' என்கிறார். அவரிடம் பேசியபோது:
என்னுடைய கணவர் ராமசாமி. இரண்டு மகன்கள். ஒரு மகன் இறந்துவிட்டார். சின்னவன் ஏழு வயது இருக்கும்போது, கணவர் ராமசாமி இறந்துவிட்டார். மகன் இறந்ததை இப்போது நினைத்தாலும் என்னால் தாங்க முடியாது.
என் அம்மாவைப் பின்பற்றி, நானும் ஆப்பம் சுட்டு விற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்னுடைய மகன் ஆப்பத்தைக் கொண்டு போய் விற்று வருவான். அவன் வளர்ந்ததும் விற்கப் போக மாட்டேன்னுட்டான்.அதுக்குப் பிறகு இங்கேயே சுட்டு விற்க ஆரம்பித்தேன்.
ஆப்பத்தை வாங்க, வெளியூரில் இருந்தும்கூட வருவார்கள். பெரிய ஆளு, சின்ன ஆளுன்னு இல்லாம எல்லாரும் வாங்க வருவார்கள். பலர் தங்களுடைய குழந்தைக்கு ஒரு நேர உணவாகும்கூட கொடுப்பார்கள். சிலர் வீட்டில் டீ குடிக்கிறதுக்கு முன்னாடி இந்த ஆப்பத்தை வாங்கிக் கொண்டு போவார்கள்.
கரோனா காலத்துல, காசு வாங்காமலும் பலருக்கு ஆப்பம் சுட்டு கொடுத்திருக்கேன். இந்தத் தெருவுல இரண்டு பக்கமும் அடைத்துவிடுவார்கள். ஒரு பக்கம் இருந்து ஆப்பம் கேட்பார்கள். அங்க கொண்டுபோய் கொடுப்பேன். இன்னொரு பக்கம் இருந்து பசிக்குது பாட்டி ஆப்பம் கொடுங்கன்னு கேட்பார்கள். நான் அங்குமிங்குமாகப் போய் அவங்களுக்கு ஆப்பத்தைக் கொண்டுபோய் கொடுப்பேன். காசு பிறகுதான் கொடுப்பாங்க. நானும் அதைப் பெரிசா எடுத்துக்க மாட்டேன். அவர்கள் நிலையைப் பார்த்துட்டு சில நேரம் வேண்டாம் அப்படின்னு சொல்லிடுவேன்.
முதலில் ஐந்து பைசாவுக்கு ஆப்பம் விற்றேன். அடுத்து பத்து பைசா, அதுக்குப் பிறகு 50 பைசாவுக்கு ஆப்பம் விற்றேன். தற்போது ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கிறேன். இருபது ஆண்டுகளாக, விலைவாசி கூடுனாலும் சரி குறைஞ்சாலும் ஒரு ரூபாய்க்குத்தான் விற்று வருகிறேன். இதை வைச்சுத்தான் குடும்பத்தன் நடத்துறேன்.மகன் சங்கரநாராயணன் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். மருமகள் பகவதி படித்திருக்கிறாள்.அவளுக்கு ஒரு வேலை கிடைத்தால், நன்றாக இருக்கும். மகள் போல என்ன பார்த்துகொள்வாள்.
இருந்தாலும் என்னாலும் சும்மா இருக்க முடியாது.ஆப்பம் சுட்டு விற்றால்தான் எனக்கு நிம்மதி. என் கையும், காலும் நன்றாக இருக்கும் வரை ஆப்பம் சுட்டு விற்பேன்.
எனது உழைப்பின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறேன் என்கிறார் ராஜம்மாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.