மூதறிஞர் ராஜாஜி
மூதறிஞர் ராஜாஜி

மூதறிஞர் ராஜாஜி! - நான் சந்தித்த பிரபலங்கள் - 8

மூதறிஞர் ராஜாஜி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
Published on

மூதறிஞர் ராஜாஜி

1970-களில் நாடகங்கள் சபாக்களில் களை கட்டிய காலம். கே.பாலசந்தர், சோ, கோமல் சுவாமிநாதன், வியத்நாம் வீடு சுந்தரம், தூயவன், பிலஹரி போன்ற கதாசிரியர்களோடு இறைவன் என்னையும் இணைத்துப் பேர் கொடுத்தான்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராமகானசபா, பார்த்தசாரதி சுவாமி சபா என்று திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி சுவாமி சபாவின் நாடக அரங்கிலும், என்.கே.டி,. கலா மண்டபத்திலும் நிறைந்த கூட்டத்துடன் நிச்சயம் நாடகம் நடக்கும்.

அப்போதெல்லாம் நான் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பார்த்தபடி, அதன் எதிரே உள்ள சுவாமி ராகவேந்திராவை கும்பிட்டு விட்டு சபாக்களுக்குச் சென்று சபா செயலாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி முதல் நான்கு வரிசைகளுக்குள் அமர எனக்கு காம்ப்ளிமென்ட்ரி வாங்கி, என் கௌரவத்தைக் காப்பாற்றி கொள்ளப் படாதபாடுபடுவேன்.

அப்போது நான் எழுதிய அச்சாணி', சொந்தம்' இரண்டு நாடகங்களிலும் மேஜர் சுந்தர்ராஜன், சிவகுமார் நடித்தது மிகப் பிரபலம். அந்த நாடகத்தைப் பார்க்க வந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் என்னை அடுத்த நாள் சந்தித்தார். தற்பெருமை இல்லாத அடக்கத்தின் அடையாளம். பேசும் படம்', அபூர்வ சகோதரர்கள்' என்று கமலை வைத்து இயக்கியவர். அப்போது கிருஷ்ணவேணி தியேட்டர் பின் வீதியில் குடியிருந்தார்.

அங்கு என்னைக் கூட்டிச் சென்று, ராஜாஜி எழுதிய சிறுகதைத் தொகுப்பைத் தந்து, இதிலுள்ள ஒரு கதை திக்கற்ற பார்வதி'. இதைப் படித்து விட்டு அவர் எழுதியிருந்த திரைக்கதைக்கு என்னை வசனம் எழுது என்று சொன்னார்.

அதை வாங்கிச் சென்று படித்தேன். அந்தக் கதை மூதறிஞர் ராஜாஜி வழக்குரைஞராக இருந்தபோது, ஒரு வழக்கில் அவர் வாதாடியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்து விட்டு சிங்கீதம் சீனிவாசராவின் தி.நகர் அலுவலகத்தில் தினமும் சென்று வசனம் எழுத ஆரம்பித்தேன்.

காரைக்குடி நாராயணன்
காரைக்குடி நாராயணன்

1972- 73 -இல் அதற்கு என் சம்பளம் ஆயிரம் ரூபாய். மொத்தப் படத்தின் செலவே இரண்டரை லட்சம் ரூபாய். கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லா நாடக நடிகர்களும் நடித்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததை முதலில் வாரணாசியில் அறிவித்தவரும், டி.ஜி.பி.யாக இருந்த ஆர்.நடராஜின் பெரியப்பாவான பூர்ணம் விசுவநாதனை நான் சந்தித்து ராஜாஜி பெயரைச் சொன்னதும், நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று முதுகைத் தட்டி அனைத்து அவர் அன்பை வெளிப்படுத்தினார். என் நண்பர் ஸ்ரீகாந்த் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. லட்சுமியை அப்போது அவர் இருந்த சீதம்மா காலனியில் சந்தித்து, ராஜாஜியின் புத்தகத்தைக் கொடுத்து வந்தேன்.

அடுத்த நாள் லட்சுமியிடமிருந்து போன் 25,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் 3 ஆயிரம் ரூபாய்க்கு ராஜாஜியின் கதைக்காகச் சம்மதிப்பதாகச் சொன்னாராம். அந்த 3 ஆயிரத்தையும் படப்பிடிப்பு முடிந்த அன்று அதில் பணிபுரிந்தவர்களுக்கு கொடுத்ததை நான், ஓசூரில் ராஜாஜி பிறந்த வீட்டின் பக்கத்திலிருந்த வயல் வரப்பில் இருந்தபடி பார்த்தேன். திக்கற்ற பார்வதி' ஒரு மைல்கல்.

திக்கற்ற பார்வதியின் படப்பிடிப்புக்குத் தயாரான நிலையில் பார்த்தசாரதி சபாவின் செயலாளரும், கல்கி இதழின் அலுவலகத்தின் டெலிபோன் ஆபரேட்டராகப் பணிபுரிந்த சேஷாத்ரி, ராஜாஜி உன்னை கல்கி கார்டன்ஸ்க்கு வந்து சந்திக்கச் சொன்னார் என்றார். இதைக் கேட்டதும். என் கால்கள் பூமியில் இருக்கிறதா? இல்லை வானத்தில் பறக்கிறதா? என்று தெரியவில்லை.

கவர்னர் ஜெனரல், முதல்வராக இருந்தவர், தன் மகளை மகாத்மா காந்தியின் மருமகளாக்கியவர் என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ராஜாஜி. ஒரு பொதுக் கூட்டத்தில் ராஜாஜி உட்கார்ந்து எழுந்தபோது அவரது காலணியை எடுத்து,

அவரது காலருகே போட்ட காமராஜரைப் பார்த்து, இதை நீங்கள் செய்யலாமா?' என்று கடிந்து கொண்ட போது, உங்களுக்கு செய்வதில் என்ன தவறு?' என்றாராம் காமராஜர்.

முதல்வரானதும் ராஜாஜி பெயரில் ஒரு நகரை உருவாக்க அனுமதி கேட்டபோது, அப்போதைய தமிழ் வருடமான நந்தன - என்ற பெயரோடு ம்' சேர்த்து நந்தனம்' என்று இருக்கலாம் என்ற சுய விளம்பரம் தேட விரும்பாத தெய்வப் பிறவியை- பாரத ரத்னாவை - அவர் சொன்னது போல அடுத்த நாள் கல்கி கார்டனில் சந்தித்தேன். அவரை கும்பிட்டுக் காலில் விழுந்து வணங்கினேன். அதிகமாகப் போனால் 3 நிமிடங்கள்தான் பேசினார்.

குடிக்கக் கூடாது என்று குடியினால் ஏற்படும் தீமைகளை திக்கற்ற பார்வதி'யில் நான் எழுதியிருக்கிறேன். நீ வயதில் மிகவும் சிறியவனாய் இருக்கிறாய். அதைப் புரிந்துகொண்டு எழுது என்றார். அவருக்கு முன்னால் எனக்குப் பேச வாய் எழவில்லை. அமைதியாக நின்றேன். கடைசியாக கைன்ட்லி டூ நாட் ஸ்பாயில் தட்... மை பிளெஸிங்' என்றார்.

திக்கற்ற பார்வதி தேசிய விருது பெற்றது. எம்.ஜி.ஆர். முதல்வரானதும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைத்தார். இத்தனை பெருமைகள் பெற்ற ராஜாஜி எஸ்.எஸ். வாசன் ஆனந்த விகடன்' இதழில் எழுதிய சதி லீலாவதி' படத்தை மட்டுமே பார்த்திருக்கிறார் என்று படித்த நான், அவர் எழுதிய திரைப்படமான திக்கற்ற பார்வதி'யைப் பார்க்காமலேயே காலமாகி விட்டாரே என்ற வேதனை இன்னமும் இருக்கிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com