கன்னட எழுத்தாளர், பெண்ணியவாதி, ஊடகவியலாளர், வழக்குரைஞர்... உள்ளிட்ட பன்முகத் தன்மைகள் கொண்ட எழுபத்து ஏழு வயதான பானு முஷ்டாக்கின் சிறுகதைத் தொகுப்பான ஹிருதய தீபா'வின் (இதய விளக்கு) ஆங்கில மொழிபெயர்ப்பான ஹார்ட் லாம்ப்' புக்கர் பரிசை பெற்றது.
லண்டனில் மே 20-இல் நடைபெற்ற விழாவில், 2025-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை பெற்ற இவருக்கு இந்திய மதிப்பில் ரூ.57 லட்சத்து 40 ஆயிரம் கிடைக்கும். இதை மொழிபெயர்த்த தீபா பாஸ்திக்குப் பரிசுத் தொகையில் பாதி கிடைக்கும். பந்தயா சாகித்ய இயக்கம்' உருவாக்கிய முற்போக்கு எழுத்தாளர்களில் பானு முஷ்டாக் ஒருவர்.
1970-களில் பானு முஷ்டாக் எழுதத் தொடங்கினார். ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கர்நாடக சாகித்திய அகாடமி, டானா சிந்தாமணி அத்திமாப்பே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 1990 - 2023 காலகட்டத்தில் பானு முஷ்டாக் கன்னடத்தில் எழுதிய சிறுகதைகளில் சிறந்த 12 கதைகளைத் தொகுத்து தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இதுகுறித்து பானு முஷ்டாக் கூறியது:
தொடக்கத்தில் பசவ பிராதார் என்ற பத்திரிகையாளரைத் தொடர்பு கொண்டு, எனது சில கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமா?' என்று கேட்டேன். அவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான தீபா பாஸ்தியை அறிமுகம் செய்தார். வேறு சில மொழி பெயர்ப்பாளர்களும் என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களில் யாருடனும் எனக்கு ஒரு புரிதலை எட்ட முடியவில்லை. தீபாவே எனது தொகுப்பை மொழிபெயர்க்கட்டும் என சம்மதித்தேன்.
ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள், பெண்ணியம் பற்றிய 12 கதைகளைத் தீபா தெரிவு செய்து தொகுப்பாக மொழிபெயர்த்தார். எனது இதர படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், உருது பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இயக்குநர் கிரிஷ் காசரவள்ளி, எனது கதைகளில் ஒன்றைத் தழுவி எடுத்த திரைப்படமான ஹஸீனா' மூன்று தேசிய விருதுகளை வென்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
எனக்கென்று கன்னடத்தில் வாசகர் வட்டம் உள்ளது. எனது படைப்பு பென்' விருதையும், தற்போது மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசையும் வென்றுள்ளது. பந்தயா' (கிளர்ச்சி) என்பது கர்நாடக இலக்கிய வரலாற்றில் தோன்றிய பிரபலமான சமூக இயக்கம். பந்தயா' எழுத்தாளர்கள் சமூக அநீதி, சுரண்டலால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காகவும் போராடுகிறார்கள். எனது எழுத்தும் பந்தயா' லட்சியத்துடன் இணைந்தே வளர்ந்தது.
அனைத்துக் கதைகளும் பெண் ஒடுக்குமுறையைச் சுற்றியே சுழல்கின்றன. பெண்ணியம், பெண்கள் உரிமை குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் பல்வேறு அவலங்கள் குறித்து நான் அதிகம் எழுதியுள்ளேன். அதனால் பல கண்டனங்களையும், மிரட்டல்கள், உயிருக்கு அச்சுறுத்தல்கள், அபாயங்களை எதிர்கொண்டேன்.
திருமணமான சில ஆண்டுகளில் வாழ்க்கையில் நான் அனுபவித்த அழுத்தங்களால், நான் தீக்குளிக்க முயன்றேன். சரியான தருணத்தில் கணவர் தடுத்தார். மன அழுத்தங்களிலிருந்து எழுத்துதான் விடுதலை தேடி தந்தது. எனது தாய்மொழி உருது என்றாலும் பள்ளியில் படித்த கன்னட மொழி எனக்கு கை கொடுத்து உயர்த்திவிட்டது. நான் அடிப்படையில் ஒரு வழக்குரைஞர்.
ஹாசன் நகர்மன்ற உறுப்பினராக இரண்டுமுறை இருந்துள்ளேன் என்கிறார் பானு முஷ்டாக்.
ரசிக்க வைக்கும் கதைகள்...
பானுவின் கதைகள் சமகால சமூகத்தில் பெண்களின் அவலங்களை வெளிப்படுத்துகிறது. திடமான கதை சொல்லியிருக்கும் பாணி, நினைவிலிருந்து நகராதக் கதாபாத்திரங்கள், பச்' என்று ஒட்டிக் கொள்ளும் உரையாடல், பானுவின் கதைகளை ரசிக்க வைக்கிறது' என்று சர்வதேச புக்கர் பரிசு நடுவர் மன்றம் பாராட்டியுள்ளது.
புக்கர் பரிசு கிடைக்கப்போகிறது' என்று பெங்களூரிலிருந்து புறப்படும்முன்பே பானு முஷ்டாக்குக்குத் தெரிவித்திருப்பார்கள் போலும். அவரது மகள்கள் மூன்று பேர் உடன் சென்றுள்ளனர். அவர் பரிசு பெறும்போது உடுத்த புதிய பட்டு சேலை பொருத்தமான ஜாக்கெட் ரெடியாக்கி சூட்கேஸூடன் பானு கிளம்பினார். லண்டன் விமான நிலையத்தில் சூட்கேஸ் கிடைக்கவில்லை. உடன் வந்த மூன்று மகள்களிடம் உள்ளதில் நல்ல பட்டு சேலையைத் தேர்ந்தெடுத்து உடுத்தி புக்கர் பரிசை பெற்றுகொண்டார்.
பரிசு பெற்றதை ஒட்டி பெங்களூருவில் பிரபலமான பகுதியில் வீட்டுமனை ஒன்றை பானுவுக்கு வழங்க கர்நாடக அரசு முன்வந்துள்ளது.
எழுத்தாளர் எந்த உணர்வுடன் தனது படைப்பைச் செதுக்குகிறாரோ, அதே உணர்வுடன் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பதால், இருவரும் சம நிலையில் இருக்கிறார்கள்' என்று சொல்லும் தீபா பாஸ்தி, குழந்தைப் பருவத்தில் பாட்டியிடம் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்.
மடிக்கேரியைச் சேர்ந்த தீபாவுக்கு கதைகள் மீதான ஈர்ப்பு, அவர் ஒரு பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளராக மாறுவதற்கு முன்பே தொடங்கியது. பானுவின் கதைகளில் உருது சொற்கள் பரவியிருந்ததால் அந்த சொற்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உருது மொழியை தீபா கற்றார்.
இறந்த முஸ்லிம் பெண்களின் உடலைக் குளிப்பாட்டி கஃபன் (அடக்கம் செய்யுமுன் இறந்தவர்களுக்கு அணிவிக்கப்படும் வெண்ணிறத் துணி) அணிவிக்கக் கிடைக்கும் பணம் மட்டுமே வருமானம். அதைவைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும். என்னவோ அந்த ஊரில் கொஞ்சநாளாக யாரும் மரணிக்கவில்லை. வீட்டில் பசியும் பட்டினியாக பல நாள்கள் ஓடுகின்றன. பணக்காரர் வீட்டில் மூதாட்டி இறந்த செய்தி வருகிறது. அந்தப் பெண்ணுக்கு அந்தச் செய்தி சந்தோஷமாக இனிக்கிறது' என்பது பானு முஷ்டாக் கதையின் சுருக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.