
எல்லாமே கடன்தான் - விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி அடுத்தடுத்த பட ங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் அடுத்த வெளியீடு மார்கன்'. இப்படம் அடுத்த மாதம் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமுத்திரக்கனி, பிரிகிடா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி பேசுகையில், தொடர்ந்து நான் படங்களைத் தயாரிப்பதைப் பார்த்து, என்னிடம் அதிகப் பணம் இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். எல்லாமே கடன்தான்.
அதற்கு மாதம் மாதம் வட்டியும் உண்டு. இந்தப் படத்தின் இயக்குநர் லியோவை எனக்கு பிச்சைக்காரன்' படத்தின் எடிட்டிங் சமயத்தில் இருந்தே தெரியும். நான் செய்த தவறை அவர் செய்யக் கூடாது. நான் நடிக்க வந்த பிறகு இசையமைப்பதை நிறுத்திவிட்டேன். நீங்கள் படம் இயக்கினாலும், உங்களுடைய இயக்குநர்களுடன் இணைந்து எடிட்டிங் செய்ய வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் சிறப்பான நிகழ்வுகள் சில இருக்கும். பிச்சைக்காரன்' படத்தின் மூலமாக என்னை கதாநாயகனாக நிறுத்தினார் இயக்குநர் சசி. இப்போது எடிட்டர் லியோ இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறேன். நான் மதம் சாராத ஒரு நபர். ஜாதி, மதம் உலகத்தில் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். நான் பார்க்கும் அனைத்திலும் ஒரு நல்ல விஷயமும், எல்லா மனிதர்களிடமும் ஒரு ஆற்றல் இருப்பதாக நம்புபவன்.
இந்த வருடத்தில் என்னுடைய பொருளாதார நிலைமையைப் பார்த்து, மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பேன்.' என்றார்.
நாயகன் கொடுத்த சுதந்திரம் - மணிரத்னம்!
தக் லைஃப்' திரைப்படம் வரும் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னை கல்லூரி ஒன்றில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மணிரத்னம் பேசும்போது, நான் நன்றி சொல்லணும்னா, கே. பாலசந்தர் சார்ல இருந்து ஆரம்பிக்கணும். அவர்தான் நான் சினிமாவுக்கு வர்றதுக்கு காரணம். இப்போ பாடலுக்கான சூழல் குறைவாக இருக்கு. கதை சொல்லல் மாறியிருக்குனு ரஹ்மான் சார்கிட்ட சொன்னேன்.
இந்தப் படத்துல ஐந்துப் பாடல்கள்தான் இருந்தது. நான் சொன்னதை கேட்டப் பிறகுதான் அவர் 9 பாடல்களாக மாத்திட்டாரு. சினிமா ஆசையோடு முதன் முதல்ல நான் கமல் சாரை சந்திக்கப் போனப்போ அவர்கிட்ட சில விஷயங்கள் பேசினேன். அப்புறம் ஒரு நாள் அவருடைய அண்ணன் சாருஹாசன் கூப்பிட்டாரு.
அவர் என்னை மகேந்திரன் சார்கிட்ட கூட்டிட்டு போனாரு. எனக்கு மகேந்திரன் சாரை ரொம்ப பிடிக்கும். அவரை நாங்க பார்க்கப்போனப்போ கப்பல்ல ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தாரு. அப்போ அவர் நான் கப்பல்ல இருந்து வர்றேன். பீர் சாப்பிடலாமா'னு கேட்டு அவரும் சாருஹாசன் அண்ணனும் பீர் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடி போன என்கிட்ட பீர் சாப்பிடுறீயான்னுகூட அவங்க கேட்கல. அப்புறம் கமல் சார் ஒரு ஆங்கில புத்தகத்தைக் கொடுத்து அதுக்கு திரைக்கதை பண்ணச் சொன்னாரு. நான் மூணு நாள்ல முடிச்சிட்டு போனேன்.
அதை பாரதிராஜா சார்கிட்ட சொன்னேன். நான் புரியாத மாதிரி அந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். இன்னைக்கு வரைக்கும் நான் சொன்ன கதையை வச்சு அவர் என்னை கிண்டல் பண்ணுவாரு. அப்போதான் நான் நினைச்சேன். வரணும்னா முட்டி மோதி நம்மதான் வரணும். அந்த போராட்டங்களுக்குப் பிறகுதான் எனக்கு பெரிய ஒப்பனிங் கிடைச்சது. அப்போதான் கமல் சார் எனக்கு நாயகன் கொடுத்தாரு. அதுதான் எனக்கு பிரேக் கொடுத்தது.
அந்தப் படம்தான் என்னை சுதந்திரப்படுத்தியது. அதுவரைக்கும் தயாரிப்பாளர்கள் உனக்கு எதுவும் தெரியாது. நான் சொல்றதை பண்ணுனு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்ககூட ஒவ்வொரு படமும் போராட்டம்தான். நாயகன்' படத்துக்குப் பிறகு எங்களுக்கு தெரியாது, நீங்க படம் பண்ணுங்கனு சொன்னாங்க. இந்தப் படத்தை கொடுத்ததுக்கும் நன்றி கமல் சார்' என்றார்.
வனிதாவின் போராட்டம் - வசந்தபாலன்!
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ராபர்ட், வனிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். ஜூனில் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், வனிதாவின் போராட்டம் மிகப்பெரியது. ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் பெரியது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தச் சமூகம் அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் கண்ணீர் வடித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகமாகத் தான் பார்க்கிறோம்.
தொடர்ந்து அப்படித்தான் நடத்திக் கொண்டு வருகிறோம். ஒரு பாலினமாக அவர்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன உடை அணிந்தாலும், என்ன செய்தாலும் அதில் குறையை கண்டுபிடிக்கிறோம். அதில் கலாசாரத்தையும், பண்பாட்டையும் நுழைக்கிறோம். எல்லா விசயத்தையும் திணித்து பிரச்னை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோன்றதொரு இடத்தில் இருந்து வனிதாவின் போராட்டம் என்பது மிகப்பெரியது.
ஒரு ஆண் பத்தாயிரம் மனைவிகளை கூட திருமணம் செய்து கொள்ளலாம். அது தொடர்பாக பெருமிதமாகவும் பேசலாம். இதனை பெருமிதமாக கருதும் சமூகத்தில் இருந்து ஒரு பெண் இதனை செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி, அவரை கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அவர் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.