ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெள்ளைப்படுதல் தீர வழி என்ன?

என் வயது நாற்பத்து ஒன்று. மாதவிடாய் நாள்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெள்ளைப்படுதல் தீர வழி என்ன?
Published on
Updated on
2 min read

என் வயது நாற்பத்து ஒன்று. மாதவிடாய் நாள்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக உள்ளது. அதனால் உடல் சோர்வு, மயக்கம் ஏற்படுகிறது. பத்து நாள்களுக்குப் பின்னர் வெள்ளைப்படுதலும் இருக்கிறது. இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?

-ராணி, மேட்டூர்.

உடல்வாகு, குடும்பச் சூழல், உணவுமுறை, மனதில் ஏற்படும் கோப, தாபங்கள் போன்றவற்றால் மூளை, உடலில் ஏற்படும் ஹார்மோன், சுரப்பிகளின் தீவிர செயல்பாடுகளால் நீங்கள் குறிப்பிடும் வகையில் உபாதைகள் தோன்றக் கூடும். அதிகமான உதிரப் போக்கால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எனும் சிவப்பு அணுக்கள் குறைந்துவிடும். இதனால் சோகை நோய் தாக்கக் கூடும். ரத்தம் ஜீவாதாரமாக இருப்பதால், அதன் அதிகமான வெளியேற்றத்தால் ஏற்படும் சோர்வு, மயக்கம், பலவீனம் போன்றவற்றுக்கு முதலில் உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.

துவர்ப்புச் சுவையுடைய உணவுப் பொருள்களாகிய சுண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை அடிக்கடி சாப்பிடுவதால், அதிக உதிரப் போக்கானது கணிசமான அளவில் குறைந்துவிடும். இதற்காகவே வாழைப்பூவை வேகவைத்து பிழிந்தெடுத்த சாறை, ஆறியவுடன் தேன் சேர்த்துச் சாப்பிடும் வழக்கம் இப்போதும் கிராமங்களில் அனுசரிக்கின்றனர்.

ஆயுர்வேத மருந்தாகிய புஷ்யானுக சூர்ணம்' எனும் துவர்ப்புச் சுவை மருந்துகளின் கலப்பால் செய்யப்படும் சூரண மருந்தைச் சாப்பிட்டால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.

உதிரப் போக்கு குறைந்தவுடன் உடல் ஊட்டத்துக்காகவும், வாத, பித்தத் தோஷங்களின் சீற்றத்தின் கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்காகவும் சதாவரீகுலம்' எனும் லேஹிய மருந்தைச் சாப்பிடுவது நலம் தரும்.

நிலப்பனைக் கிழங்கு, கருங்காலி, நெல்லிக்காய்த் தோடு, நெருஞ்சில் நாவல் பட்டை, தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகிய மூலிகைக் கலவைகளினால் தயாரிக்கப்பட்டு, விற்பனையிலுள்ள முஸலீகதிராதி' எனும் கஷாய மருந்தை தேன் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க, பெண்களுக்கு உண்டாகும் அதிகப்படியான வெள்ளைப் போக்கு, ரத்தப் போக்கு நின்றுவிடுவதை அனுபவத்தில் காண்கிறோம்.

உதிரப் போக்கைக் கட்டுப்படுத்துவதில் ஆடாதோடை மிகவும் சிறந்தது. இதனுடைய சாறு பிழித்தெடுப்பது சற்று சிரமமானது என்பதால், தண்ணீரில் நன்கு வேகவைத்து, இடித்துப் பிழிந்த சாறை சூடாறிய நிலையில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இதனால் வயிற்றில் புண் ஏற்பட்டு துன்புறுபவர்களும் பயன் அடைகிறார்கள். ரத்த நாளங்களின் உட்புறம் ஏற்படும் கிழிசலையும் இது ஒட்டவைத்துவிடும் திறனுடையது.

செம்பருத்திப் பூ இதழ்களுடன் மாங்கொட்டைப் பருப்பை இடித்துச் சாப்பிடுவதால், உதிரப் போக்கானது நன்றாகக் குறையும். நாட்டு மருந்துக் கடையில் எளிதாகக் கிடைக்கும் கோரைக் கிழங்கு, வெட்டிவேர், கடுக்காய்த் தோடு ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து, அரை லிட்டர் ஆகும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டி ஒரு நாளில் பலதடவை சிறுகச் சிறுகப் பருகி வருவதால், உதிரப் போக்கும், வெள்ளைப்படுதலும் நன்றாகக் குணமாகும்.

தாடி மாதிக்ருதம்' எனும் நெய் மருந்தை சில நாள்கள் சாப்பிட்டு, பேதி மருந்து சாப்பிட்டு குடலைச் சுத்தப்படுத்தி, வாஸாகுடூச்யாதி கஷாயம்', புனர்நவமண்மூரம் மாத்திரை, திராக்ஷாதி லேஹியம்' என்றெல்லாம் சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு ரத்தத்தில் கூடும். மருத்துவர் ஆலோசனையின்படி, சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com