எழுத்துரு ஆவணங்களாக சுவடிகள்!

ஓலைச்சுவடிகளின் பாதுகாவலர், பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர், முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர் உள்பட பன்முகத் தன்மைகளுக்குச் சொந்தக்காரர் கு.மா.சுப்பிரமணியன்.
கு.மா.சுப்பிரமணியன்
கு.மா.சுப்பிரமணியன்
Published on
Updated on
2 min read

பொ.ஜெயச்சந்திரன்

ஓலைச்சுவடிகளின் பாதுகாவலர், பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர், முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர், தனியார் பள்ளிக்கு ஆயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்கியவர் உள்பட பன்முகத் தன்மைகளுக்குச் சொந்தக்காரர் கு.மா.சுப்பிரமணியன்.

புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் வசித்துவரும் இவரை, தமிழாய்வுக் களஞ்சியம்' சார்பில் கும்பகோணத்தில் அண்மையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சந்தித்தபோது, அவர் கூறியது:

நான் திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட அரங்கூரில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினேன். அப்போது, திருவள்ளுவர் மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கி, கட்டடம் கட்டினேன்.

சமூகவியல், காந்தியச் சிந்தனை, ஓலைச்சுவடி, சாதகவியல், கோயில் கட்டடக்கலை போன்ற படிப்புகளை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி, அதிராம்பட்டினம் காதர் மொய்தீன் கல்லூரி, காந்தி கிராமப் பல்கலைக்கழகம், சென்னை தொலைத்தொடர்பு கல்வி மையம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் முடித்தேன்.

எனது பாட்டி பொன் வீர அக்காண்டி அம்மையார், அந்தக் காலத்தில் மணல் அள்ளி வந்து பரப்பி, அதன் மேல் ஆள்காட்டி விரலால் தமிழ் எழுத்துகளை எழுதவும், அதனை அழித்து எழுதச் சொல்வார். என்னுடைய பாட்டன் ஓலைச்சுவடியில் எழுத்தாணியைக் கொண்டு எழுதிப் படித்தவர். மகாபாரதக் கதையை ஒலைச்சுவடியில் எழுத்தாணியைக் கொண்டு எழுதியவர். இவையே எனக்கு ஒலைச்சுவடிகளைச் சேகரிக்கவும், படியெடுக்கவும் தூண்டுகோலாக இருந்தது.

ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் நாள் காவிரியாற்றின் படித்துறையில், நிறைய பேர் தங்கள் வீட்டில் வைத்துள்ள ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட வருகை தருவார்கள். அதனை என்னிடம் தாருங்கள்' என்று கேட்பேன். சிலர் தந்து விடுவார்கள், பலர் தராமல் சென்று விடுவார்கள்.

உறையூரில் காவிரிகரை படித்துறையில் என்னால் திரட்டப்பட்ட ஓலைச்சுவடி ஆவணங்களில் நிலக்கிரையபத்திரம், மனைக்கிரையசாசனம், நிலப்பட்டா, நிலக்குத்தகைக்குச் சீட்டு, எண் சுவடி கணிதம், உலக நீதி புராணம், எதிர்நடை குத்தகைச்சீட்டு, வாழைக்குத்தகைச் சீட்டு, பிறந்த குறிப்பு, மரபு சாதகம், மகாபாரதம், கண்ணன் தூது, மருத்துவம், மாந்திரீகம், ஜோதிடப் பரிகாரங்கள், ராமாயணம், முருகன், அய்யனார் கோயில், முச்சரிககுறி, முச்சரிக்கா, சாமி சாமான்கள் இருப்பு, கோயில் பணம்- கடனும், வட்டியும், ஓம் சிவமயம், குடும்ப உடன்படிக்கை முறி, பாகச்சீட்டு போன்றவை உள்ளன.

தொன்மைக் காலங்களில் எழுத்துரு ஆவணங்களாகவும், பதிவுக் கருவூலமாகவும் ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன. மக்களின் வாழ்க்கை முறை, நிலம் விற்பனை, பங்கு பிரித்தல், குடும்பச் சண்டை, கோயிலில் ஏற்பட்ட முதல் மரியாதை பிரச்னை போன்ற தகவல்களையும் அறியலாம்.

சிறுவயதிலேயே எழுத்துகள் மீது ஒரு தீராத நேசம் உண்டானது. உள்ளாட்சி மன்றங்கள் சார்ந்த பணிக்கு வந்தவுடன், அந்த ஊர் மக்கள் பழக்கவழக்கங்கள், சமூகப் பொருளாதாரம், கல்வி, கோயில் வழிபாடு முறைகள், கல்வெட்டு, செப்புப் பட்டயங்கள் போன்ற தொடர்பான செய்திகளை நாள்குறிப்புகளில் எழுதி வைப்பேன். அரசுக்கு அறிக்கை தயார் செய்வதைப் போலவே இதையும் செய்வேன்.

வளமான வாழ்வுக்கு வழிகாட்டி', பஞ்சாயத்து அரசு', ஊரக வளர்ச்சி கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான கையேடு', முத்தரையர் முத்துகள்', தமிழ்நாடு முத்தரையர் சங்க 100ஆண்டு வரலாறு', திருமங்கை ஆழ்வார் வரலாறு', பொன்னர்-சங்கர் வாழ்வியல் வரலாறு', தமிழர் மாண்பு முத்தரையன் மன்னர்கள்' (உரைச் சித்திரம் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்), பேரரசர் பெரும் முத்தரையன் சவரன் மாறன் வரலாறு' போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.

2005-இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றேன். ஊரக வளர்ச்சி கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான கையேடு எனும் நூலை உருவாக்கினேன். இந்த நூலுக்கு பேராசிரியர் க.பழனித்துரை, முனைவர் ஆர்.முருகேசன் போன்றோர் அணிந்துரையை அளித்தனர். ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை வீட்டு நூலகத்தில் சேகரித்து வைத்துள்ளேன். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான தகவல் குறிப்புகளை எடுத்துக் கொள்கின்றனர் என்கிறார் கு.மா.சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com