'சென்னை சட்டக் கல்லூரியில் நான் மாணவனாக இருந்தபோது, நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் எஸ்.வி.எஸ். உருவாக்கிய 'சேவா ஸ்டேஜ்' என்னும் நாடகக் குழுவில் ஒரு நடிகனாக நுழைந்தேன்.
வழக்குரைஞராக ஆவதைவிட எப்படியாவது நாடகத் துறையில் புகழ் பெற்று, திரைப்படத் துறையில் நுழைந்து நல்ல நடிகனாக வேண்டும் என்னும் முனைப்பு என்னுள்ளே கனலாகத் தகித்துக் கொண்டிருந்த காலம் அது. எனது ஆர்வத்தை எஸ்.வி.எஸ். பார்த்து, அவர் உருவாக்கிய நாடகங்களில் எனக்கு முக்கிய பாத்திரங்களைக் கொடுத்து ஊக்குவித்தார்.
'பாஞ்சாலி சபதம்' என்னும் நாடகத்தில் எனக்கு அவர் நடித்து வந்த 'பாரதியார்' வேடம் அளிக்கப்பட்டது. அதே நாடகத்தில் சில நாள்களில் நான் அர்ஜுனனாக நடிப்பதற்காக வாய்ப்பு அளிக்கப்பட்டது. சேவாஸ்டேஜிலும், அவரின் தலைமையில் இருந்த 'ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ்' அமைப்பிலும் நடைபெற்ற பல்வேறு நாடகங்களில் எனக்கு கதாநாயகனாக வேடம் கொடுக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற நாடகம் 'நவாப் நாற்காலி'. அதிலும் கதாநாயகன் நான்தான். அதன் மூலம் நாடு முழுவதும் நாடகக் குழுவோடு சென்றுவரும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் எனக்கு அளித்த அறிவுரை இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
'நீங்கள் இந்த அமைப்பில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதை விரும்புகிறேன். இருந்தாலும், இதையே நம்பி இங்கேயே இருந்துவிடாதீர்கள். படித்து முடித்து நீங்கள் நல்ல வழக்குரைஞராக வேண்டும். அதுதான் என் ஆசை' என்பார். அவரின் ஆசையும், ஆசியும் இறைவன் அருளால் நிறைவேறி இருக்கிறது. வழக்குரைஞராக மட்டுமல்லாமல், தில்லி வரைக்கும் வந்து நீதிபதியாகவும் உயர முடிந்தது'' என்கிறார் நீதிபதி மு.கற்பகவிநாயகம்.
( எஸ்.வி.சகஸ்ரநாமம் எழுதிய 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற நூலின் அணிந்துரையில் நீதிபதி மு.கற்பகவிநாயகம் எழுதியது)
'எனக்குக் கணிதம் கற்பித்த ஆசிரியர் வி.கணபதி. 'வெறும் நாற்பது ரூபாய் ஊதியத்துக்கு இங்கேயே உட்கார்ந்து பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறாயே' என்று அவருடைய தந்தை வந்து கூட்டிக் கொண்டு போய்விட்டார். அவர்தான் பின்னாளில் கன்னியாகுமரியில் 133 அடிக்கு வள்ளுவர் சிலையைச் செய்தவரும், பூம்புகார் சிற்பக் கூடத்தை வடிவமைத்தவரும், வள்ளுவர் கோட்டத்தைக் கட்டி எழுப்பியவருமான கணபதி ஸ்தபதி. நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது, பொது நிகழ்ச்சிகளில் அவரோடு இணைந்து பேசியுள்ளேன். 'என்னுடைய கணித ஆசிரியர் கணபதி அவர்களே!' என்று நான் விளிப்பதும், 'என் மாணவன் பழ.கருப்பையா அவர்களே' என்று அவர் விளிப்பதும் உண்டு. அவ்வளவு அன்பு கரை
புரண்டு ஓடும்'' என்கிறார் பழ.கருப்பையா.
('இப்படித்தான் உருவானேன்' எனும் நூலில் பழ. கருப்பையா எழுதியது)
'ஏவி.எம்.சரவணன் சார் என் வாழ்க்கையின் வழிகாட்டி. காட் ஃபாதர். ஒருநாள் சரவணன் சார் என்னிடம் நான்கு தலைமுறை இயக்குநர் நீங்கள் அனுபவங்களை எழுதி நூலாக வெளியிட்டால் திரைத்துறையினருக்கு வருகை தரும் இளம்தலைமுறையினருக்கு அது பாடநூலாக அமையும்' என்றார்.
காலம் போனதைத் தவிர, எண்ணங்கள் எழுத்தாகவில்லை. இதை உணர்ந்த சரவணன் சாரும், ராணி மைந்தனை ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னார். 'முத்துராமன்... உங்கள் அனுபவங்களை ராணி மைந்தனிடம் சொல்லுங்கள். அவர் சாவி சாரின் தயாரிப்பு. தங்களின் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து விடுவார்' என்றார். அதன்படி, ராணி மைந்தன் ஸ்டூடியோவுக்கு இருபது முறைக்கு மேல் வந்து, என் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நான் சொல்லக் கேட்பார். அவற்றை மனதளவில் உள்வாங்கிக் கொண்டு எழுத்தாக்கினார். அதுதான் 'ஏவிஎம் தந்த எஸ்.பி.எம்.' எனும் நூல். ரஜினிகாந்த் வெளியிட்டார்'' என்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
(ராணி மைந்தன் எழுதிய 'வந்த பாதை ஒரு பார்வை' நூலின் வாழ்த்துரையில் எஸ்.பி.முத்துராமன் எழுதியது)
தில்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்தவர் ரொமிலாதாப்பர். அவருடைய வாழ்நாள் சாதனைக்காக, இருமுறை பத்மபூஷண் விருதை மத்திய அரசு அளிக்க முன்வந்தது. இதை அவர் ஏற்காமல், 'என் துறையில் இருந்துவரும் அங்கீகாரத்தை மட்டுமே ஏற்பேன்'' என்றார்.
(மருதன் எழுதிய 'ரொமிலாதாப்பர்' எனும் நூலிலிருந்து)
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.